Wednesday 23 February 2022

பொறுமை என்னும் மருந்து.

 பொறுமை என்னும் மருந்து.

இந்த அவசரமான உலகினிலே யாவும் மிகவும் சீக்கிரம் நடக்கவேண்டும் என்று எதிர்பார்க்கின்றோம். கடவுளிடம் நமது துன்பங்களைச் சொல்லி, பிரார்த்திக்கும் பொழுதும், கடவுள் நமது வேண்டுதலைக் கேட்டு உடனடியாக உதவி செய்யவேண்டும் என்று எதிர்பார்க்கின்றோம். பொறுமை என்பது மருந்துக்கும் கூடக் கிடையாது.
ஒரு ஊரில் வாழ்ந்து வந்த அண்ணன் தம்பிகளில், தம்பி சமர்த்தானவர், அண்ணன் சற்று சோம்பேறி. என்னைப்போல, ஒரு நாள் இருவரும் காட்டுக்கு பனங்காய் பொறுக்கச் சென்றனர். இருவரும், காலையிலிருந்து மதியம் வரை கஷ்டப்பட்டு பனங்காய் பொறுக்கி, அவற்றை இரு பகுதிகளாகப் பிரித்தனர். அதன் பின்னர் அண்ணனும், தம்பியும் பனங்காய்களைப் பெட்டியில் வைத்து அதை தலையில் வைத்துக் கொண்டு நடக்கலாயினர்.
சிறிது தூரம் நடந்து
சென்றவுடனேயே, பனங்காய்ப்பெட்டி, பாரமாக இருக்கிறதே என்று புலம்பிக் கொண்டே நடந்தார் அண்ணன். ஆனால் தம்பி எதுவுமே சொல்லாமல் நடந்து கொண்டிருந்தார். இதைப் பார்த்த அண்ணன், இருவரின் சுமையும் ஒரே அளவில்தானே இருந்தது, ஆனால் தம்பி எதுவும் சொல்லாமல் எளிதாக நடந்து வருகிறாரே என்று சிந்தித்தார். பின்னர் தம்பியிடம், உனக்கு பனக்காய்ப்பெட்டி பாரமாக இல்லையா? என்று கேட்டார். அதற்குத் தம்பி, இல்லை, எனது சுமை பாரமாக இல்லை, ஏனெனில் நான் அதில் ஒரு மூலிகை இலையை வைத்திருக்கிறேன் என்று சொன்னார்.
அப்படியா! அந்த மூலிகை இலை என்ன வென்று சொன்னால் நானும் எனது சுமையில் வைத்துக் கொள்கிறேன் என்றார் அண்ணன். அதற்குத் தம்பி, அந்த மூலிகை இலையின் பெயர் "பொறுமை" என்றார் தம்பி.
அந்தத் தம்பி சொன்னது போல‌. வாழ்வில் ஏற்படும் இன்னல்களை, இடையூறுகளை, தடைகளை, கடுகளவும் சினமுறாது, இன்முகத்துடன் அவற்றை ஏற்று பொறுமையுடன் நடந்தால் வாழ்வில் வெற்றியை அடையலாம்.

No comments:

Post a Comment