Friday 11 February 2022

மகத்தான வெற்றிகளைப் பெற்றிடலாம்.

 மகத்தான வெற்றிகளைப் பெற்றிடலாம்.

தான் செல்லும் சாலை வழியே யானைக்கூட்டம் ஒன்றைப் பார்க்கிறான் ஒருவன்.
யானைகளைப் பார்த்து அச்சப்பட்ட வேளையில், அவற்றின் கால்கள் மிக மெல்லிய ஒரு சங்கிலியால் கட்டப்பட்டிருந்ததை கவனிக்கிறான்.
எந்நேரமும் அவை அந்த சங்கிலியைச் சுலபமாக அறுத்துக் கொண்டு ஓட முடியும் என்று அவனுக்குத் தோன்றியது. அருகே அதன் பாகனும் நின்று கொண்டு இருப்பதைப் பார்த்ததும் அவன் அச்சம் ஓரளவு நீங்கியது.
பாகனிடம் “இப்படி ஒரு மெலிசான சங்கிலியில் யானைகளைக் கட்டியிருக்கீங்களே அதுக திடீர்னு அறுத்துக் கிட்டு ஓடினா என்னாகிறது?” என்று கவலையுடன் கேட்கிறான்.
அவை குட்டிகளாக இருந்த போது இதே மெல்லிய சங்கிலியால் தான் அவைகளைக் கட்டுவோம். அப்போது அவற்றுக்கு அந்த சங்கிலியே போதுமானதாக இருந்தது.
ஆனால் அவைகள் வளரும் போது, அந்த சங்கிலியைத் தங்களால் அறுக்கவே முடியாது என்கிற
மனோபாவத்தில் தான் வளர்ந்தன.
எனவே தற்போது பன்மடங்கு பலத்துடன் அவை வளர்ந்து விட்ட போதும் சங்கிலிப் பிணைப்பிலிருந்து விடுபட அவை முயற்சிக்கவேயில்லை.
எனக்கும் வேறு சங்கிலி வாங்கும் அவசியமே இல்லாமல் போய் விட்டது!” என்றான்.
இந்தப் பதிலைக் கேட்டு அவன் ஆச்சரியம் அடைந்தான்..
எந்நேரமும் அவற்றால் தாங்கள் கட்டப்பட்டுள்ள தளைகளை அறுக்க முடியும் என்றாலும், தங்களால் முடியாது என்று நினைக்கும் ஒரே காரணத்தால் அவை அடிமை வாழ்வை வாழ்கின்றன என்று அவன் புரிந்து கொண்டான்.
இந்த யானைகளைப் போலத் தான் பலர் தங்கள் பலமும் தகுதியும் தங்களுக்குத் தெரியாமலே வாழ்ந்து வருகிறார்கள்.
முன்பு ஒரு முறை முயற்சித்துத் தோற்ற காரணத்தால் தம்மால் செய்யக் கூடிய எத்தனையோ மகத்தான செயல்களை செய்ய முடியாதவர்களாக இருக்கிறார்கள்.
சூழ்நிலைகள் அடிமை ஆக்கியிருக்கும் ஒரு வாழ்வை வாழ்ந்து வருகிறார்கள்.
ஆம் நண்பர்களே
எப்பொழுதோ கிடைத்தத் தோல்வியை மனதில் வைத்து ஏன் மகத்தான வெற்றிகளைத் தவற விட வேண்டும்.
தோல்வி என்பது வெற்றிக்கான படிகளில் ஒரு அங்கம்.அதன் மீது கால் வைக்காமல் எவரும் வெற்றி என்னும் சிகரத்தின் மீது ஏறவே முடியாது.
மனித மனம் அளப்பரிய சக்தி கொண்டது. ஒன்றை நினைத்தால் அதை நிச்சயம் அடையக் கூடிய சக்தியைத் தரவல்லது.
எழுந்திருங்கள். துணிவோடு நில்லுங்கள்.
உங்களைச் சுற்றி பிணைக்கப்பட்டுள்ள
தளைகளை அறுத்து எறியுங்கள்.
உங்களால் நிச்சயம் சாதிக்க முடியும்.

No comments:

Post a Comment