Monday 28 February 2022

யாராலும் தட்டிப் பறிக்க முடியாது.

 யாராலும் தட்டிப் பறிக்க முடியாது.

வாழ்க்கையிலே முன்னேற நினைக்கிறவர்களுக்கு தன்னம்பிக்கை மிகவும் முக்கியம். இந்த தன்னம்பிக்கையை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும்...
நமது மழலைச் செல்வங்களுக்கு இளம் பருவத்திலேயே தன்னம்பிக்கையை ஏற்படுத்தினால் அவர்களால் சாதிக்க முடியாதது ஏதுமில்லை...
வாழ்க்கையில் வெற்றி பெற எதுவும் தேவையில்லை; தன்னம்பிக்கை ஒன்று போதும் என்று வல்லுனர்கள் கூறுகின்றனர். தன்னம்பிக்கையே வெற்றிக்கு முதல்படி...
ஏழை மனிதர் ஒருவர் தெரு வழியாக நடந்து போய்க் கொண்டு இருந்தார். தெருவில் ஒரு பழங்கால நாணயம் கிடந்தது. அதை எடுத்துப் பார்த்தார். அந்த நாணயத்தில் துளை இருந்தது. துளையிட்ட நாணயம் கிடைத்தால் ஆகூழ் (அதிர்ஷ்டம்) என்ற நம்பிக்கை அவருக்கு இருந்தது...
எனவே!, மகிழ்ச்சியாக அதை எடுத்து தன்னுடைய சட்டைப் பையிலே பத்திரமாக வைத்துக் கொண்டார். வீட்டிற்கு சென்ற பின் அதனை ஒரு நெகிழிப் பொதியில் போட்டு, அதை ஒரு துணிப் பொதியில் முத்திரை வைத்து பத்திரப் படுத்திக் கொண்டார்...
தனக்கு வந்த ஆகூழ்தனை தன் மனைவியிடமும் தெரிவித்தார். அதை எப்போதும் தனது சட்டைப் பையில் வைத்துக் கொண்டு அதை தொட்டு பார்த்துக் கொள்வார்...
ஆனால்! அதனை வெளியில் எடுக்க மாட்டார். அந்த நாணயம் தனக்கு வாழ்வில் உயர்வைத் தரும் என்று நம்பி, தனது முழுத் திறனையும் பயன்படுத்தி உழைக்க ஆரம்பித்தார்...
பின்னர் வியாபாரம் செய்ய ஆரம்பித்து அதிலும் வெற்றி பெற்றார். அதன் பின்னர் பல வியாபார முயற்சிகளில் ஈடுபட்டு அனைத்திலும் வெற்றி பெற்றார்...
பணம், பதவி, புகழ் எல்லாம் அவரை வந்து சேர்ந்தது. அவரை எல்லோரும் பாராட்ட ஆரம்பித்தார்கள். அவர் எதைத் தொட்டாலும் வெற்றி என்ற நிலை...
எல்லாம் அந்த துளையிட்ட நாணயத்தின் மகிமை என்று நினைத்தார் அந்த மனிதர். இப்படியே பல ஆண்டுகள் கழிந்தன...
ஒரு நாள் அந்த நாணயத்தை கண்ணாலே பார்க்க வேண்டும் என்ற ஆசை அந்த மனிதருக்கு வந்தது. அப்போது தன் மனைவியை அழைத்து, நீண்ட நாளைக்குப் பிறகு என்னுடைய இந்த ஆகூழ் நிறைந்த நாணயத்தை இன்று வெளியே எடுத்துப் பார்க்கப் போகிறேன் என்று கூறினார் அந்த மனிதர்...
உடனே மனைவி, இப்போது அதனைப் பார்க்க வேண்டாமே என்று மெதுவாக கூறினார்.
இல்லை!, இல்லை! பார்த்தே ஆகவேண்டும்! என்று சொல்லி, சட்டைப் பையில் கையை விட்டு பொதியைத் திறந்து, நாணயத்தை வெளியே எடுத்தார் அந்த மனிதர்...
அவருக்கு ஒரே வியப்பு!. அந்த நாணயத்தில் துளையே இல்லை. அப்படியே குழம்பிப் போய் நின்றார். அப்பொழுது அவரது மனைவி, உங்க சட்டை பையில் காசு இருப்பது நினைவு இல்லாமல் நான்தான் ஒரு நாள் உங்க சட்டை தூசியாக இருக்கு என்று சாரளத்திற்கு (ஜன்னலுக்கு) வெளியே உதறினேன்.
அது தெருவில் விழுந்து விட்டது. எவ்வளவோ தேடிப் பார்த்தேன். கிடைக்கவில்லை. நீங்கள் கொடுத்த நாணயம் அது இல்லை என்பது உங்களுக்கு தெரிந்தால் வருத்தப்படுவீர்கள் என்பதற்காக, வேறு ஒரு நாணயத்தை அதே போன்று பொதியில் போட்டு சட்டைப் பையில் போட்டு வைத்தேன் என்று கூறினாள்...
இது எப்போது நடந்தது...? என்று கேட்டார் அந்த மனிதர். உங்களுக்கு காசு கிடைத்த மறு நாளே இது நடந்தது என்றாள் மனைவி...
இதைக் கொஞ்சம் ஆலோசித்துப் பாருங்கள். அந்த மனிதருக்கு ஆகூழைக் கொடுத்தது அந்த நாணயம் இல்லை. அவருடைய தன்னம்பிக்கை, உழைப்பு, விடாமுயற்சிதான்.
ஆம் நண்பர்களே
நம்முடைய வளர்ச்சியை தீர்மானிப்பது தன்னம்பிக்கை. நம்மை சுற்றியுள்ள உலகம் நம்மை ஏளனப்படுத்தலாம், அலட்சியப்படுத்தலாம், நம் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடலாம், நம் திறனைக் குறைத்து மதிப்பிடலாம், நமக்கு உதவிக் கரம் நீட்டத் தயங்கலாம், நமக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய பாராட்டு, அங்கீகாரத்தை கொடுக்க மறுக்கலாம். ஆனால்!, நம் தன்னம்பிக்கை, ஆசை, கனவு, மன உறுதி, சுயமரியாதையை யாராலும் தட்டிப்பறிக்க முடியாது.
எதை வேண்டுமானாலும் அடைய ஆசைப்படுங்கள். ஆனால்!, அந்த ஆசை நியாயமானதாக இருக்க வேண்டும். அதை சாதிக்க திறமை, திட்டமிடல், விடாமுயற்சி, கடின உழைப்பு ஆகியவை வேண்டும். விடாமுயற்சியுடன் செயல்பட்டால் எதிலும் எளிதாக வெற்றி பெறலாம்.
தன்னம்பிக்கை மனதில் இருந்தால் வெற்றி உறுதி நம்பிக்கை இருக்குமிடத்தில் விடாமுயற்சி இருக்கும். விடாமுயற்சியே வெற்றியை கொண்டு வந்து விடும். எண்ணம், சொல், செயல் மூன்றிலும் நேர்மை இருக்குமானால் தீயிற்கு நிகரான ஆற்றல் நம்மிடம் உண்டாகி விடும்.

No comments:

Post a Comment