Friday 26 February 2021

நம் பிரச்சனைகளைத் தீர்க்க

 நம் பிரச்சனைகளைத் தீர்க்க

யாரால் முடியும்.
உன் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண உன்னால் மட்டுமே முடியும்.
ஏனெனில் உன் பிரச்சனைகளை உருவாக்கியதே நீதான்.
~ஓஷோ
நம்முடைய தலைக்கு மேல் பறவைகள் பறப்பதை யாராலும் தடுக்க இயலாது. அதுப்போலவே நம்முடைய வாழ்வில் துன்பங்களும் துயரங்களும் வந்துச் செல்வதையும் யாராலும் தடுக்க இயலாது. துன்பங்களும் துயரங்களும் நம் வாழ்க்கைக்கு உரமாக வருகின்றதே தவிர வாழ்க்கையை அழித்துவிடுவதற்கு அல்ல.
ஒரு மனிதனின் வாழ்க்கை என்பது எல்லா துன்பங்களையும் துயரங்களையும், சோதனைகளையும், பிரச்சனைகளையும் எதிர்த்து நின்று போராடி அதில் வெற்றிக்காண்பதில் தான் உள்ளது.
ஒருக் கப்பலானது கடலில் தனது பயணத்தை மேற்கொள்ளும் போது சீறி எழும் அலைகளையும், வீசியடிக்கும் காற்றையும் எதிர்க்கொண்டு செல்வதால் தான் அதன் இலக்காகிய மறுக்கரையை சென்றடைகிறது. ஒருவேளை அங்கே பிரச்சனை என்றாலும் அந்தக் கப்பலைக் கரைச்சேர்க்க மாற்றுவழி அங்கு செயல்படுத்தப்படுகிறது. எந்தக் கப்பலும் ஆபத்து என்றவுடனே அங்கே விட்டுவிட்டு வரப்படுவது இல்லை. அதன் இலக்காகிய கரையைச் சென்றடைகிறது. அப்படியிருக்க நாம் ஏன் ஒருச் செயலை செய்யத் துவங்கும் போது பிரச்சனைகள் வந்தவுடன் அந்தச் செயலை விட்டுவிடுகின்றோம்.
இன்னல் (துன்பம்) என்றதும் வேலையைப் பாதியில் விட்டுவிடுவதும், தற்கொலை முடிவுகளை எடுப்பதும் கோழைத்தனமே. சாவி இல்லாமல் எந்தப் பூட்டும் தயாரிக்கப்படுவது இல்லை. பிரச்சனை என்ற ஒன்று இருப்பின் தீர்வு என்ற ஒன்றும் நிச்சயம் இருக்கும். பிரச்சனைக்கு தீர்வு என்ன என்று காண்பது தான் மனிதனின் அழகு.
துன்பங்களைக் கண்டு எந்த உயிரினமும் சோர்ந்துப் போவதும் இல்லை. தற்கொலை செய்துக் கொள்வதும் இல்லை. வாழ்வில் வரும் துன்பங்கள் அனைத்துமே ஏதோ ஒரு வகையில் அனுபவத்தின் வாயிலாக பல பாடங்களை கற்றுத் தந்து மீண்டும் அந்தச் செயலை மாற்றுப்பாதையில் தொடர வழிகாட்டுகிறது. துன்பங்களையும், சோதனைகளையும் கண்டு ஓய்வதால் வாழ்க்கையில் ஏதையும் சாதித்துவிடப்போவதில்லை. சோதனைகளை எதிர்த்து துன்பங்களை விரட்டுவதில் தான் வாழ்க்கையின் சாதனை இருக்கிறது.
வாழ்க்கை என்பது பிரச்சனைகள் நிறைந்தது தான். பிரச்சனைகள் இல்லாத வாழ்க்கை இல்லை. இதனை விவேகானந்தர் இவ்வாறு கூறுவார்.
*“உன் வாழ்க்கையின் எந்த ஒரு நாளில் நீ எந்தப் பிரச்சனையையும் சந்திக்காமல் முன் செல்கிறாயோ அப்பொழுது நீ தவறான பாதையில் பயணிக்கிறாய் என்று அறிவாய்.”*
ஆமாம், என்ன செய்தாலும் குறை கூறும் உலகு நல்லது செய்ய தடையாக பிரச்சனைகளை எழுப்பாதா என்ன?
சோதனைகள் வளர்ச்சிக்கே. சோதனைகளும், துன்பங்களும் இல்லாத வாழ்வு நிச்சயம் வளர்ச்சியைத் தராது. இந்தத் துன்பங்களும், சோதனைகளும், தடைகளும், வாழ்வை பண்படுத்தவே.

No comments:

Post a Comment