Thursday 11 February 2021

காரைக்குடியில் பிறந்த நாள் கேக்கில் புழு இருந்ததால் அதிர்ச்சி

 காரைக்குடியில் பிறந்த நாள் கேக்கில் புழு இருந்ததால் அதிர்ச்சி

பதிவு: பிப்ரவரி 09, 2021 11:17 IST
காரைக்குடியில் பிறந்த நாள் கேக்கில் புழு இருந்ததால் அதிர்ச்சி
புழு இருந்த கேக்கை பார்வையிடும் பொதுமக்கள்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பிறந்தநாள் கேக்கில் புழு இருந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அந்த கேக்கை சாப்பிட்ட சிறுவனுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.
காரைக்குடி சத்யா நகரை சேர்ந்தவர் சோலையம்மாள். இவர் இரு மகன்களுடன் வசித்து வருகிறார். மூத்த மகன் குணால். 7-ம் வகுப்பு படித்து வருகிறார்.
குணாலின் பிறந்தநாளை முன்னிட்டு தாயார் நேற்று காரைக்குடி அம்மன்சன்னதி மணிக்கூண்டு அருகில் உள்ள ஒரு பேக்கரி கடையில் கேக் வாங்கினார்.
மாலையில் வீட்டில் கேக்கை வெட்டி உறவினர்கள் சிறுவனுக்கு ஊட்டி விட்டனர்.
குணாலின் மாமா காளிதாஸ் கேக்கை வெட்டும் போது உள்ளே புழுக்கள் இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
புழுக்கள் இருந்த கேக்கை தின்ற குணாலுக்கு வாந்தி மற்றும் லேசான மயக்கம் ஏற்பட்டது.
சோலையம்மளின் உறவினர்கள் பேக்கரி உரிமையாளரிடம் இது குறித்து கேட்டபோது, அவர் சரிவர பதில் கூறாமல் அலைக்கழித்துள்ளார்.
இதனால் அங்கிருந்த பொதுமக்கள் கடைக்காரரிடம் வாக்குவாதம் செய்யவே அங்கு வந்த ரோந்து போலீசார் தலையிட்டு சமாதானம் செய்தனர்.
தகவலறிந்த உணவு பாதுகாப்பு அலுவலர் முத்துக்குமார் கடை மற்று பொருட்களை ஆய்வுசெய்து பரிசோதனைக்கு மாதிரிகளை எடுத்துச்சென்றார்.
இதுபற்றி சமூக ஆர்வலர் ஜான்பால் கூறுகையில், காரைக்குடி முழுவதும் பல பேக்கரி கடைகளில் இது போல காலாவதியான பொருட்களை விற்பனை செய்கிறார்கள்.
உணவு பொருட்களை தயாரிக்கும் இடமும் சுகாதாரமில்லாமல் மோசமாக இருக்கிறது. உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அடிக்கடி ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


No comments:

Post a Comment