Wednesday 17 February 2021

கவியரசு கண்ணதாசனின் பாடல்கள் பிறந்த வரலாறு.

 கவியரசு கண்ணதாசனின் பாடல்கள் பிறந்த வரலாறு.

படித்ததில் பிடித்தது
கவியரசு கண்ணதாசனின் #பாடல்_பிறந்த_கதை
கண்ணதாசன் பதிப்பகம்
இது அரிய தகவல்கள் பலவற்றை உள்ளடக்கிய ஒரு சிறிய புத்தகம். இதனைத்தொகுத்து எழுதிய தேடல் எஸ் முருகனின் பெயரிலேயே இவர் தேடுவதில் சிறந்தவர் என்று தெரிகிறதே. அதனை இந்தப் புத்தகத்தில் நிரூபித்தும் காட்டியிருக்கிறார். இந்தப் புத்தகத்திற்கு மேலும் சிறப்பூட்டுவது போல அமைந்திருக்கிறது ,எம்ஜியார் அவர்களின் முன்னுரை. என்னதான் பல கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் கண்ணதாசனை அரசவைக் கவிஞர் ஆக்கி அழகு பார்த்தவர் அல்லவா. அதுதவிர கண்ணதாசன் அவர்களின் சொந்த விமர்சனமும் இதில் இடம்பெற்றிருக்கிறது. தான் எட்டாவது வரை மட்டுமே படித்தது போன்ற சில தகவல்களை வெளிப்படையாகவே சொல்லிச்செல்கிறார். கண்ணதாசன் ஒரு திறந்த புத்தகம் என்றுதான் நம் எல்லோருக்கும் தெரியுமே.
இவை தவிர எஸ்.பி.முத்துராமன், முக்தா சீனிவாசன், இயக்குனர் ஸ்ரீதர் ஆகியோர் கண்ணதாசனைப்பற்றி எழுதும் நினைவுகளும் இந்தப்புத்தகத்தில் இடம்பெற்றிருக்கின்றன.
ஒரு கவிஞனை மற்ற கவிஞர்கள் பாராட்டுவது மிகவும் சிறந்த விஷயமல்லவா? கவிஞர்கள் மு.மேத்தா, பாஸ்கரதாசன், ஆரூர்தாஸ், வைரமுத்து, சௌந்தரா கைலாசன், இரா. வேலுச்சாமி, கல்பனாதாசன், வாலி, பாபு என்று பலர் எழுதிய கவிதைகளும் இப்புத்தகத்தில் படிக்கக் கிடைக்கின்றன.
இந்தப் புத்தகத்தில் கண்ணதாசன் எழுதிய பல பாடல்களின் சூழல், எந்த நிலையில் அதை எழுதினார், அதன் பின்னணி என்ன என்று சொல்லப்பட்டிருக்கிறது .
நான் பிடித்து ரசித்த சில பின்னணித் தகவல்களை இங்கே கொடுக்கிறேன். இவை இந்தப் புத்தகத்தை வாங்கிப் படிக்கத் தூண்டும் என நம்புகிறேன்.
1. படிக்காத மேதை படத்தில் வரும் பாடலான "ஒரே ஒரு ஊரிலே" என்ற பாடலை வங்கிக்குப்போகும் அவசரத்தில் எழுதியிருக்கிறார்.
2. 'எலந்தைப்பழம்' என்ற பாடலை மிகுந்த பசியோடு இருக்கும் போது எழுதினாராம்.
3. கண்ணதாசனுக்கு காமராஜர் மேல் பெரிய பற்று இருந்தது. தி.முக.வில் மனக்கசப்புடன் இருந்த போது காங்கிரசுக்குப் போகும் எண்ணத்தில் காமராஜரை நேரில் சந்திக்கத் தயக்கப்பட்டு இருக்கும்போது எழுதிய பாடல்தான், "அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி" என்ற பாடல். இந்தப்பாடல் மூலம் அந்தச் செய்தியை காமராஜரும் புரிந்து கொண்டு அதற்குப் பதில் சொன்னது ஒரு ஆச்சரிய நிகழ்வுதான். அதோடு "எதற்கும் ஒரு காலம் உண்டு, பொறுத்திரு மகனே", “உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது" மற்றும் "ஒளி மயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது" போன்ற பாடல்கள் காமராஜரை மனதில் வைத்து அவருக்காக எழுதப்பட்ட பாடல்கள் என்று சொல்கிறார் புத்தக ஆசிரியர்.
4. கண்ணதாசன் எழுதிய முதல் பாடல் “கன்னியின் காதலி” என்னும் படத்தில் வந்த கலங்காதிரு மனமே" அதைத்தனக்குத் தானே எழுதிக் கொண்டாராம். S.M. சுப்பையா நாயுடு இசையில் வந்த இந்தப் படத்தின் இயக்குநர் கோவையைச் சேர்ந்த ராம்நாத்.
5. கண்ணதாசன் ஒரு மிக்சர் பொட்டலத்தில் அண்ணாதுரை எழுதிய "கல்லைத்தான் மண்ணைத்தான், காய்ச்சித்தான் குடிக்கத்தான்" என்ற உரையை படிக்க நேர்ந்த உடன் எழுதிய பாடல்தான் "அத்தான் என் அத்தான்" என்ற பாடல். பாடல் முழுவதும் "தான் தான்" இரு வரும்படியாக இந்தப் பாடலை கவிஞர் எழுதியிருப்பார்.
6. சென்னை மாநகரத் தேர்தலில் கண்ணதாசன் தன் சொந்தப் பணத்தையும் நேரத்தையும் அதிகமாக செலவழித்து கடுமையாக உழைத்தாராம். ஆனால் வெற்றி கிட்டியதும் அண்ணா, கருணாநிதிக்கு கணையாழி அணிவித்துப் பாராட்ட நொந்துபோன நிலையில் கண்ணதாசன் எழுதிய பாடல்தான் "யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்".
7. கண்ணதாசன் தயாரித்து 'கவலையில்லாத மனிதன்” படம் தோல்வியடைந்தபின் எழுதிய பாடல் "சிலர் சிரிப்பார், சிலர் அழுவார் நான் சிரித்துக் கொண்டே அழுகின்றேன்".
8. கவிஞர் ஒரு வேலை விஷயமாக ஒரு கிராமத்தில் போய் தங்கியிருக்கும் போது, காலையில் கேட்ட கோயில் மணியின் நினைவாக எழுதியதுதான் "ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்".
9. தோல்வி மேல் தோல்வியைச் சந்தித்து துவண்டு கவலைப்பட்ட நேரத்தில் எழுதிய பாடல் "கலைமகள் கைப்பொருளே, உன்னைக் கவனிக்க ஆள் இல்லையோ"
10. தன் முதல் காதலியின் ஞாபகமாக எழுதியது தான் "பாவாடை தாவணியில் பார்த்த உருவமா" என்ற பாடல்.
11. சிவாஜி பட வெற்றி விழாவில் கலந்து கொண்ட அண்ணா அப்போது வேறு கட்சியில் இருந்த கண்ணதாசனைப் பார்த்து “எங்கிருந்தாலும் வாழ்க” என்று சொன்னாராம். அதன் நினைவாக எழுதப்பட்ட பாடல்தான் "எங்கிருந்தாலும் வாழ்க உன் இதயமும் அமைதியில் வாழ்க" ,என்ற பாடல்.
12. ஒரு விழாவில் மேடையில் இருக்கும் போது தன் முன்னால் காதலி தன்னை உற்று நோக்கிக் கொண்டிருந்ததின் ஞாபகமாக "என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்" என்ற பாடலை எழுதியிருக்கிறார்.
13. தன் மனைவி பொன்னம்மா, ஞாபகமாக, "தாழையாம் பூ முடித்து தடம் பார்த்து நடை நடந்து வாழை இலை போல வந்த பொன்னம்மா" என்ற பாடல் பிறந்திருக்கிறது.
14. சேக்ஷ்பியரின் வரிகளை ஒட்டி "தூக்கமும் கண்களைத்தழுவட்டுமே" என்று எழுதியிருக்கிறார்.
15. தன் முதல் காதலி நினைவாக "காலங்களில் அவள் வசந்தம்" ,என்று பாடினாராம்.
16. M.S. விஸ்வநாதன், பிரிந்துபோன ராம மூர்த்தியை நினைத்து வருத்தப்பட்டுக் கொண்டிருந்த நேரத்தில் எழுதிய பாடல்தான் "நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா?".
17. நெஞ்சில் ஓர் ஆலயம் படத்திற்காக பெங்களூரில் ரூம் போட்டு தங்கியிருந்த சமயத்தில் ஒரு வாரமாகியும் பாட்டெழுதாமல் இருந்த கண்ணதாசனை எம்.எஸ்.வி கடிந்து கொண்டாராம். அப்போது உடனே எழுதிய பாடல்தான் "சொன்னது நீதானா, சொல் சொல் சொல்".
நன்றி கவியரசு கண்ணதாசன் முகநூல்.

No comments:

Post a Comment