Tuesday 23 February 2021

எதற்கும் தயாராக இருங்கள்

 எதற்கும் தயாராக இருங்கள்.

'Positive Thinking' மற்றும் 'Positive Approach' பற்றி எல்லோரும் ஏராளமாக எழுதியும் சொல்லியும் ஆகி விட்டது. நல்லதையே எண்ணுங்கள், நல்லதையே எதிர்பாருங்கள், உங்கள் வாழ்வில்
நல்லதே பெருகக் காண்பீர்கள் என்று ஆராய்ச்சியாளர்களும் கூறுகிறார்கள். அது உண்மை தான் என்றாலும் அதிலும் சிக்கல்கள் இல்லாமல் இல்லை. நல்லதையே எதிர்பார்த்திருந்து விட்டு நல்லது நடக்காமல் போகையில் ஏமாற்றத்தின் அளவும் அதிகமாகவே ஆகி விடுகிறது. எதிர்பார்த்தது நடக்காமல் போகும் போது மனக்கசப்பு தான் அதிகம் மிஞ்சுகிறது. அப்படியானால் பாசிடிவ் அப்ரோச் என்கிற வழியே தவறா?
இல்லை. 'Positive Thinking/Approach' என்பது உண்மையில் நல்லதே நடக்கும் என்று எதிர்பார்க்கச் சொல்வதைக் காட்டிலும் அதிகமாக நடப்பதை எல்லாம் நமக்குப் பயனுள்ளதாக ஆக்கிக்
கொள்ள வேண்டும் என்கிற அணுகுமுறையே. எது நடந்தாலும் தளர்ந்து விடாமல் சந்திக்கத் தயாராக இருப்பதே அதன் குறிக்கோள்.
எத்தனை தான் படித்தும், கேட்டும், சிலாகித்தாலும் தினசரி வாழ்க்கையினை சந்திக்கும் போது பல சமயங்களில் பெரும்பாலானோரது Positive Thinking/Approach எல்லாம் தகர்ந்து போய் விடுகிறது என்பதே யதார்த்தமான உண்மை. அதற்கு என்ன செய்வது?
தத்துவஞானியும், ரோமானியச் சக்கரவர்த்தியுமான மார்க்கஸ் அரேலியஸ் தன்னுடைய டைரியில் தான் இன்று நன்றி கெட்டவர்களையும், நயவஞ்சகர்களையும் சந்திக்கக்கூடும் மன அமைதியை இழக்க வைக்கக்கூடிய சம்பவங்களில் சிக்கக்கூடும் என்பது போன்ற பிரச்சினையான சாத்தியக்கூறுகளை எழுதி வைத்து விட்டு, தினமும் காலை அதைப் படித்து விட்டுத் தான் தன் நாளைத் தொடங்குவாராம். ராஜ்ஜியம் பரிபாலனம் செய்யும் சக்கரவர்த்தி இயல்பாக சந்திக்கக் கூடிய அது போன்ற சாத்தியக்கூறுகளை ஆரம்பத்திலிருந்தே எதிர்பார்த்திருந்து, அவற்றை கையாள வேண்டிய வழிமுறைகளையும் யோசித்தும் வைத்திருந்த அவரது தயார் நிலை அவர் மன அமைதியை இழக்காமல் காத்தது என்று உறுதியாகச் சொல்லலாம்.
பிரச்சினைகளும் சவால்களும் தான் பலரை நிலைகுலைய வைக்கின்றன என்றில்லை. பழகிப் போன ஒரு வாழ்க்கை முறை மாறத் துவங்கும் போதும் அந்த மாற்றத்தை பலர் சங்கடமாகவே நினைக்கின்றனர். உலகில் மாற்றம் ஒன்றே நிச்சயம் என்பது மாபெரும் உண்மை. அப்படி இருக்கையில் மாற்றம் நிகழும் போது தயார்நிலையில் இல்லாமல் இருப்பதும், மாற்றமே கூடாது என ஆசைப்படுவதும் அறிவீனம் அல்லவா?
எனவே எதுவும் எப்போது வேண்டுமானாலும் மாறலாம் என்பதை உணர்ந்திருங்கள். மாறுதல் நிகழும் போது அதை உற்சாகமாக எதிர்கொண்டு அதை உங்கள் முன்னேற்றத்திற்கு உபயோகித்துக் கொள்ளுங்கள்.
உங்களுக்கு விருப்பமுள்ள மாற்றங்களும் நிகழ்வுகளும் மட்டுமே ஏற்பட வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள். உலகம் உங்கள் விருப்பப்படி இயங்குவதில்லை. எல்லாமே ஒரு காரணத்தோடு
தான் நடக்கின்றன. அவை நடக்கையில் சிணுங்குவதும் குமுறுவதும் வாழ்க்கை ஓட்டத்தை எளிதாக்குவதற்கு பதிலாக மேலும் மோசமாக்குகின்றன.
எனவே நல்லதே எண்ணுங்கள். நல்லதையே வாழ்க்கையில் பிரதானப்படுத்துங்கள். ஆனால் விதி உங்களை முன்னேற்றவும், பதப்படுத்தவும் எதிர்பாராத சிக்கல்களை உங்கள் வழியில் அனுப்பி வைக்கக்கூடும்.
அதற்கு எப்போதும் தயார்நிலையில் இருங்கள். வருத்தத்துடனும், ஏமாற்றத்துடனும் வருவதை சந்தித்து மனதைப் பாழாக்கி, மூளையை மழுங்கடிப்பதற்குப் பதிலாக தெளிந்த மனதுடன் மூளையைக் கூராக்கி இதை எப்படிக் கையாள வேண்டும் என்று சிந்திக்கக் கற்றுக் கொண்டால் எதனாலும், யாராலும் உங்கள் முன்னேற்றம் தடைப்படுவதில்லை.

No comments:

Post a Comment