Thursday 26 November 2020

மனிதம் மரித்துவிட வில்லை

 மனிதம் மரித்துவிட வில்லை..

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகேயுள்ள முனி கோயில் அருகே சாலையோரத்தில் டென்ட் அடித்து வடமாநிலங்களைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என சுமார் 20 பேர் தங்கியிருந்துள்ளனர்.
இவர்கள் நிவர் புயல் அச்சத்தில் செய்வதறியாது தவித்துள்ளனர். கனமழை பெய்தால் எங்கு தங்வது என்றும் அவர்களுக்குத் தெரியவில்லை. குழந்தைகளை வைத்துக்கொண்டு காற்று வீசும்போது என்ன செய்யப்போகிறோம் எனக் கண்கலங்கி நின்றதுடன்,
அந்த வழியாக சென்றவர்களிடம் எல்லாம் `காற்றும் வேகமாக அடிக்குமா எந்தப் பிரச்னையும் இருக்காதே?' எனப் பரிதவிப்புடன் கேட்டுவந்துள்ளனர்.
இதை கவனித்த அதே பகுதியைச் சேர்ந்த விவசாயி வீரசேனன், `கவலைப்படாதீங்க. உங்களோட நிலையை அரசு அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டு செல்கிறேன். அவர்கள் உங்களை கைவிட மாட்டாங்க' என நம்பிக்கை கொடுத்துடன், உடனே அதிகாரிகள் கவனத்துக்குக் கொண்டு சென்றுள்ளார்.
இதையடுத்து நமது அதிகாரிகளும் உடனடியாக அருகில் பொன்னவராயன் கோட்டையிலுள்ள அரசு ஐ.டி.ஐ கட்டடத்தில், வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் பாதுகாப்பாகத் தங்கவைக்கப்பட்டனர். அவர்களுடன் அதே பகுதியைச் சேர்ந்த சிலரும் தங்கவைக்கப்பட்டிருக்கிறார்கள்.
இது குறித்து வீரசேனன் கூறுகையில்.``சின்னக் குழந்தைகளுடன் ஒரு மாதத்துக்கு மேலாகக் குடும்பத்தினருடன் வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள் இங்கு தங்கியிருந்தனர். வண்டி ஒன்றில், ஒலிபெருக்கியில் இந்து பக்திப் பாடலைப் போட்டுக்கொண்டு ஒவ்வொரு பகுதியாக செல்வது அவர்களின் வழக்கமாக இருந்தது.
அப்போது பலர் விருப்பப்பட்டு காசு கொடுப்பார்கள். அதில் வரும் வருமானத்தில் சாப்பிடுவதுடன், அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்றிக்கொண்டிருந்தனர். நிவர் புயல் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் எனக் கூறப்பட்ட நிலையில், அந்தக் குடும்பத்தினர் செய்வதறியாமல் கலங்கி நின்றனர்.
இதை அறிந்த நான் இந்தத் தகவல் அதிகாரிகளுக்குத் தெரியபடுத்தப்பட்ட உடனேயே அவர்களைப் பாதுகாப்பான இடத்தில் தங்கவைத்ததுடன், அவர்களுக்கு வேண்டிய அத்தியாவசியத் தேவைகளை செய்து கொடுத்தனர்.
மின்னல் வேகத்தில் செயல்பட்ட நமது அரசு ஊழியர்களின் செயலை எண்ணி அவர்கள் பூரிப்படைந்தனர். `புதிய ஊர், புதிய இடம் என்பதால் புயலில் என்ன பாடுபடப்போகிறோம் என கலங்கி நின்ற எங்களுக்கு உடனடியாக இடம் ஏற்பாடு செய்து தங்கவைத்த தமிழர்களின் செயல் மெய்சிலிர்க்க வைப்பதுடன், பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது' என்று அவர்கள் நன்றி கூறினார்கள்'' என்று நெகிழ்ச்சியுடன் அவர் தெரிவித்துள்ளார்.
குறிப்பு;இப்படி சாலையில் யாரும் இருந்தால் உதவி செய்யுங்கள்..அல்லது அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லுங்கள்.நன்றி.
நன்றி ராஜப்பா தஞ்சை


No comments:

Post a Comment