Tuesday 17 November 2020

எனைத்தானும் நல்லவை கேட்க



 எனைத்தானும் நல்லவை கேட்க.

வாழ்க்கையில் நாம் பல காரியங்களை ஆராய்ந்து தேர்ந்தெடுக்க வேண்டியதிருக்கிறது. ஓர் ஆண் தன் மனைவியைத் தேர்ந்தெடுப்பதாயினும், ஒரு பெண் தனது கணவனைத் தேர்ந்தெடுப்பதாயினும் ஆய்ந்து பார்க்க வேண்டும்.
தொழிலில் பணியாட்களைத் தேர்ந்தெடுப்பதிலும், இயக்குநர்களை, நிர்வாகிகளை, துணையாளர்களை, பாதுகாப்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதிலும், அரசு தன் அதிகாரிகளைத் தேர்ந்தெடுப்பதிலும், அரசை மக்கள் தேர்ந்தெடுப்பதிலும் இன்ன பிறவற்றிலும் நாம் ஆராய்ந்து தேர்ந்து எடுக்க வேண்டும்.
தகுதியும் பொருத்தமும் இல்லாதவரை – அன்பு காரணமாக, உறவு காரணமாக, நட்புக் காரணமாக முகத் தாட்சண்யம் கருதித் தேர்ந்து எடுத்துவிட்டால் வாழ்நாள் முழுவதும் துயரம் அடைய நேரிடும்.
குடும்ப வாழ்க்கை தொட்டு, தொழில் வாழ்க்கை, சமுதாய வாழ்க்கை, நாட்டு வாழ்க்கை வரை, தகுதியான, பொறுப்பு மிகுந்தவர்களைத் தேர்ந்தெடுக்காவிட்டால் நாம் செய்யும் செயல்கள் எல்லாம் பயனற்றுப் போகும். உயர்ந்தவர் – தாழ்ந்தவர், பெரியவர் – சிறியவர், பெருமை- சிறுமை என்ற குணங்கள் எல்லாம் பணத்தாலோ, பட்டத்தாலோ பிறந்த குலத்தாலோ உருவாவதில்லை. பத்தரை மாற்றுத் தங்கமா என்று கண்டறியக் கல்லில் தங்கத்தை உரைத்துப் பார்த்துப் பொன்னின் மாற்றுக் காண்பது போல், ஒருவன் எண்ணும் எண்ணமும், சொல்லும் சொற்களும், அவன் உயர்ந்தவனா? தாழ்ந்தவனா?, சிறியவனா? பெரியவனா? என்ற உண்மைகளை உரைகல்லாகக் காட்டி விடும். செய்கின்ற செயலின் திறத்தால் ‘தத்தம் கருமமே கட்டளைக் கல்’ என்ற அடிப்படையில் அவரவர் தகுதியை அறியலாம்.
ஆதலால் ஒருவரை எத்துறைக்குத் தேர்ந்தெடுத்தாலும் அவரைப்பற்றி நன்றாக ஆராய்ந்து, எண்ணிப் பார்த்து தெளிவான முடிவுக்கு வரவேண்டும். பதற்றமில்லாமல், பரபரப்பு இல்லாமல், அன்பு, உறவு, நட்புப் பாராமல் பொறுப்புக்குத் தகுதியானவரா? திறமையானவரா? நற்குணங்கள் நிறைந்தவரா? பழிக்கு அஞ்சுபவரா? நேர்மையானவரா? என்று அவரை அளந்தறிய முற்பட வேண்டும்.
தீய நோக்கம் உள்ளவர்கள், நல்லெண்ணம் இல்லாத வர்கள், சுயநலம் மிக்கவர்கள், குறுகிய கண்ணோட்டம் உள்ளவர்கள், சமுதாயத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தும் கயவர்கள் ஆகியோர் பேச்சுக்களை எல்லாம் மக்கள் கேட்டு மயங்கிவிடக் கூடாது.
சொல் நயத்துடன், ஆற்றலுடன் நாவன்மையால் பேசும் நச்சுக் கருத்துக்கள் தீமையை விளைவித்துவிடலாம். வாழ்வாகிய வழுக்கு நிலத்தில் வழுக்கி விடாமல், சேற்று நிலத்தில் சிக்கிவிடாமல் வாழக் கற்றுக்கொள்ள வேண்டும். இவ்வழுக்கல் நிலத்தில், சேற்றுப் பாதையில் சிக்கல் நீக்கிக் காப்பது வாழ்ந்து காட்டிய ஒழுக்கமுள்ள அறிஞர்களின் வாய்ச்சொற்கள் தாம். வாழ்ந்து காட்டாத நாநயம் மிகுந்தவர்கள் சொற்கள் ஒருபோதும் பயன் விளைவிப்பதில்லை.
தூய எண்ணங்களை எண்ணி, எண்ணம் போலவே சொல் தூய்மையுடையராய், செயல் தூய்மையுடையராய் உள்ள வாய்மை மிகுந்த நல்லவரின் நயம் மிகுந்த சொற்களே நாட்டினரை நல்வழியில் அழைத்துச் செல்லும். நல்லவை நாடி இனிய சொல்பவரை நாம் நாடிச் சென்று கேட்க வேண்டும். எவ்வளவுக்கு இத்தகைய பெரியோர்களின், சான்றோர்களின் பேச்சுக்களை விரும்பிக் கேட்கின்றோமோ, அவ்வளவிற்கு அல்லவை தேயும், அறம் பெருகும்; தனி மனிதனும் நாட்டு மக்களும் பயன் பெறுவர். இத்தகைய நல்லோரின் நயம் மிகுந்த, நலம் மிகுந்த, அறிவோடு உறுதியும் மிக்க கருத்துக்களைக் கேட்டுப் பயன்பெற வேண்டும். இதனையே செந்நாப்புலவர் வள்ளுவனார், ‘கற்றிலனாயினும் கேட்க!’ (414) என்று கட்டளையிட்டு, கேட்பவையெல்லாம் நல்லவையாக இருக்க வேண்டும் என்றும், வலியுறுத்திக் கேட்ட அளவிற்குப் பெரும் பயன் தனிமனிதனுக்கும், சமுதாயத்திற்கும், நாட்டிற்கும் உண்டாகும் என்றும் உறுதிபடக் கூறுகிறார். அக்குறளைக் கேட்போம்.
*எனைத்தானும் நல்லவை கேட்க; அனைத்தானும்*
*ஆன்ற பெருமை தரும்* (416)

No comments:

Post a Comment