Monday 16 November 2020

ஏற்றமான வாழ்விற்கு எளிமையே மூலதனம்

 ஏற்றமான வாழ்விற்கு

எளிமையே மூலதனம்.
பதவியிலும், செல்வத்திலும், தொழிலிலும் உயர்நிலையை அடைந்த பலர் படோடோபமாகப் பொழுதைக் கழிப்பதும், பகட்டாக வாழ்வதும், ஆடம்பர வசதிகளை அனுபவிப்பதும் தான் தங்களுக்கு உற்ற நிலை என எண்ணிக் கொண்டு விடுகிறார்கள்... (படோடோபமாக- பகட்டுத்தனம்)
தங்களுக்கு நிகராக உள்ளவர்களோடு மட்டுமே நட்பு வைத்துக் கொள்கிறார்கள். சமுதாயத்தின் அனைத்துத் தரப்பினரோடும் கலந்து பழகாத பிரமுகர்களின் வாழ்க்கை ஒளிர்வதில்லை....
"இறங்கி வருவதில் தான் ஏற்றம் இருக்கிறது!, எளிமையாக வாழ்வது தான் வலிமை சேர்க்கிறது!"
தமிழ்நாட்டின் முதலமைச்சர் பொறுப்பை பேரறிஞர் அண்ணா ஏற்றதும் அப்பதவிக்குரிய ஆடம்பரப் பொருட்களான விலை உயர்ந்த இருக்கைகள், நாற்காலிகள், நிலைக்கண்ணாடி, வரவேற்பறை அலங்காரப் பொருட்கள் என அவர் இல்லத்தில் பல பொருட்கள் இறக்கி வைக்கப்பட்டன...
எடுத்து வந்த அதிகாரிகளிடம் அண்ணா,
‘இந்த ஆடம்பரப் பொருட்களை இங்கிருந்து அகற்றி விடுங்கள்.பதவியில் இல்லாத போது என்னிடம் இருந்தவையே இப்போதும் எனக்குப் போதும்’ என்றாராம்., ஒருபோதும் எளிமையை விட்டுக் கொடுக்காத உத்தமர் அண்ணா...
பதவி, செல்வம், கல்வி, தொண்டு என்பனவற்றால் மகுடம் பெற்ற மனிதர்கள், எளிமையான வாழ்வை மேற்கொள்வதும், எல்லோருக்குமாக இறங்கி வருவதுமாக இயங்கினால், அப்பண்பு அவர்கள் மகுடத்தில் மேலும் ஒரு மாணிக்கக் கல்லாக மிளிரும் என்பதற்கு அறிஞர் அண்ணா அவர்கள் ஒரு உதாரணம்...
ஆம் நண்பர்களே...!
எளிமையான வாழ்க்கையே சிறந்த வாழ்க்கை...! தேவை எது...? இன்றியமையாத தேவை எது...? என்று அறிந்து நடந்தாலே ஆடம்பரம் தானே போய் விடும்...!
எதையும் வாங்கும் முன், அவசியம் தானா...? - என்ற ஒரு கேள்வியை உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள். எளிமையாக இருங்கள்.

No comments:

Post a Comment