Wednesday 25 November 2020

தேவர் பெருமானே

 தேவர் பெருமானே !...

கற்பகத்தரு வெட்டப்பட்டு விட்டது.
காமதேனு இறந்து போய்விட்டது.
அதன் நிழலில் குடியிருந்தவர்கள் தங்க இடமின்றி தவியாய் தவிக்கிறார்கள்.
ஒரு மரணத்தின் மூலம் இரண்டு கண்களையும் இழந்துவிட்ட ஏழைகளில் நானும் ஒருவன்.
என் வாழ்வில் நல்லது கெட்டது என்றால் என் உதவிக்கு ஓடிவந்த ஒரே மனிதர் சின்னப்பா தேவர்.
ஆண்டுகள் இருபது ஓடிவிட்டன.
இந்த ஆண்டுகளில் அவர் காட்டிய அன்பையும் பாசத்தையும் நான் என் தாய்தந்தையரிடம் கூடக் கண்டதில்லை.
பணம் அல்ல இதில் முக்கியம். குணமே தலையாயது.
கவிஞருக்கு உடல் நலமில்லை என்று கேள்விப்பட்டால் ஓடோடி வருவார்.
அண்ணே...என்னண்ணே பண்ணுது என்று பரிதாபமாகக் கேட்பார்.
வைத்தியச் செலவுக்கு ஒரு கட்டு நோட்டுகளை தலையணைக்குக் கீழ் வைத்துவிட்டுப் போவார்.
என் குழந்தைகளுக்கு திருமணமென்றால் எவ்வளவு குறைகிறது..எவ்வளவு தேவை என்றுதான் கேட்பார்.
அவரது படிக்கட்டில் ஏறி இல்லை என்று நான் திரும்பி வந்ததேயில்லை.
ஒன்றிரண்டு ஆண்டல்ல..இருபது ஆண்டுகள்.
அலுக்காமல் சலிக்காமல் தொடர்ந்து உதவியவர்.
என் உடன் பிறந்த சகோதரர் கூட என்னால் பத்து ரூபாய் லாபமடைந்தால் மூன்று ரூபாய் கொடுத்திருப்பாரே தவிர கேட்டபோதெல்லாம் உதவியதில்லை.
பெரும்பாலான நேரங்களில் தயக்கம் காட்டியிருக்கிறார் சங்கடப்பட்டிருக்கிறார்.
இவரோ....
அடையாத நெடுங்கதவும்
அஞ்சலென்ற சொல்லும்
உடையான் சடையப்பன். என்றபடி அர்த்த ராத்திரியிலும் எனக்கு உதவியிருக்கிறார்.
கோப்பெருஞ்சோழனும் பிசிராந்தையாரும்....பாரிவள்ளலும் கபிலரும் போல நாங்கள் வாழ்ந்திருக்கிறோம். எங்கள் இருவரது உறவில் நான் மறக்கமுடியாத நினைவுகள் அனந்தம்.
எனது ஐந்து பெண்களுக்கும் இரண்டு ஆண்களுக்கும் திருமணம் நிகழ்ந்தது.
ஏழிலும் தங்கள் நல்வரவை விரும்பும் என்ற இடத்தில் சின்னப்பா தேவர் பெயர்தான் இருந்தது.
அண்மையில் நடந்த திருமணத்திற்கான அழைப்பிதழை அவரிடம் கொடுத்தபோது....
அண்ணே எட்டாந்தேதி நான் இருக்கமாட்டேன் என்றார்.
ஊரில் இருக்கமாட்டேன் என்று சொன்னது...உலகத்திலேயே இருக்கமாட்டேன் என்று சொன்னது போலாகிவிட்டது.
ஆகஸ்ட் ஏழாம் தேதி என்மகனின் திருமணம் எட்டாம் தேதி மாலை வரவேற்பு.
ஏழாம் தேதி திருமணத்தை முடித்துவிட்டு எட்டாம் தேதி காலையில் நிம்மதியாகத் தூங்கிக் கொண்டிருந்தேன்.
எப்போதும் ஏழரை மணிக்கு தயாராகிவிடும் நான் அலுப்பாக இருந்ததால் பத்தரை மணிக்கு மறுபடி படுத்துவிட்டேன்.
பதினொன்றே காலுக்கு தம்பி கண்ணப்பன் வந்து எழுப்பி...எனக்கு அதிர்ச்சி ஏற்படாமலிருக்க...
அண்ணே தேவருக்கு ஏதோ உடம்பு சரியில்லை என்று பேசிக்கொள்கிறார்கள் என்றான்.
உடனே பதறிப்போய் தேவர் பிலிம்ஸூக்கு டெலிபோன் செய்தேன். அங்கே நான் சேர்த்துவிட்ட பெண்மணிதான் டெலிபோன் ஆபரேட்டர்.அவர் ஆயிப்போச்சு சார் என்று அழுதார்.
நான் கதறினேன். துடித்தேன்.
உடனே எம்ஜிஆருக்கு டெலிபோன் செய்தேன். மாலை வரவேற்பை ரத்து செய்தேன்.
மறுநாள் கன்னிமாரா ஹோட்டலில் எனக்காக செய்திருந்த பாராட்டுவிழாவை ரத்து செய்தேன். அன்றிரவே கோவைக்கு புறப்பட்டுச் சென்றேன்.
துடிதுடிப்பான தேவரை சடலமாகக் கண்டதும் எனக்கு வாழ்க்கையே வெறுத்துவிட்டது.
அவரைவிட ஒழுக்கம் மிக்க உத்தமன் யார்...
அவரைவிட உடம்பை பேணியவர் யார்....
கோவில்களுக்கு லட்சலட்சமாக கொட்டிக் கொடுத்தவர் யார்....
எல்லோரிடமும் அன்புகாட்டிய பண்பாளர் யார்...
அவரே போனபின்பு நமக்கு என்ன இருக்கிறது என்று முடிவுகட்டினேன்.
வாழ்க்கையில் எனக்கிருந்த மிகப்பெரிய ஆதாரம் போய்விட்டது.
இனி தினசரி சம்பாதித்து குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டியவர்களில் நானும் ஒருவன்.
பத்துநாள் படுத்துவிட்டாலும் தேவர் இருக்கிறார் என்ற தைரியம் போய்விட்டது.
முப்பத்து முக்கோடி தேவர்கள் வந்தாலும் இந்த இழப்புக்கு அவர்கள் ஈடாகமாட்டார்கள்.
எல்லாமே ஊமை கண்ட கனவுபோல காட்சியளிக்கின்றன.
இறைவா...
இதுதான் உன் லீலை என்றால்...
நான் உன்னை மறந்திருக்கவே ஆசைப்படுகிறேன்.
நன்றி கு நாகராஜ்


No comments:

Post a Comment