Tuesday 17 November 2020

இது சுவாமி ஐயப்பன் அருள்

 இது சுவாமி ஐயப்பன் அருள்.

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு சுவாமி ஐயப்பன் படத்திற்கு வசனம் எழுதுவதற்காக திருவனந்தபுரம் சென்றிருந்தேன்.
திருவனந்தபுரம் கிளப்பில் தங்கி இருந்தேன்.
தயாரிப்பாளர் மெரிலாண்ட் சுப்பிரமணியன் பிள்ளை என்னிடம் பேரன்பு கொண்டவர்.அவருடைய டப்பிங் படத்திற்குகூட நான் தான் எழுத வேண்டுமென்று ஆசைப்படுபவர். ஆகவே நேரடியாகத் தமிழில் எடுக்கும் படத்திற்கு என்னை அழைத்தார்.
அவர் தமிழர். திருவனந்தபுரம் மேயராக இருந்தவர்.உத்தமர் உயர்ந்தவர் என கேரள மக்களால் புகழப்படுபவர். அவரது பிள்ளைகளில் ஒருவர் மிகச்சிறந்த டாக்டர்.
வெண்ணிற ஆடை நிர்மலாவுக்கு கார் விபத்து ஏற்பட்டபோது அவர்கள் தான் அவ்வளவு உதவியும் செய்தார்கள்.
திருவனந்தபுரம் வந்ததுமே அவரிடம் நான் கேட்ட உதவி...பெத்தடின் போட டாக்டர் வேண்டும் என்பதே.
அவர் உடனே ஐயோ ஐயப்பா என கன்னத்தில் அடித்துக் கொண்டார்.ஆனாலும் என் வற்புறுத்தலுக்காக தன் மகனிடம் அழைத்துச் சென்றார்.
தினசரி நான் எழுதியதைப் படிக்க வரும்போதெல்லாம் ஐயப்பன் தான் இந்தப் பழக்கத்தை நிறுத்த வேண்டும் என்பார். இனி எங்கே நிறுத்துவது...ஆயிரத்து இருநூறு மில்லி கிராம் போடும் அளவிற்கு வந்து விட்டது. இது மரணத்தோடுதான் முடியும் என்று நான் சொல்வேன்.
இல்லை ஐயப்பன் சக்தி உங்களுக்கு தெரியாது. நீங்கள் கிருஷ்ணா கிருஷ்ணா என்று சொல்லி பழக்கப்பட்டவர்கள். ஆரோக்யத்திற்கு ஐயப்பனை விட வேறு தெய்வம் கிடையாது. சுத்தமில்லாதவன் நுழைய முடியாத இடம் சபரிமலை ஒன்று தான். ஐயப்பன் அருளால் நீங்கள் பெத்தடின் பழக்கத்தை நிறுத்தி விடுவீர்கள் என்பார்.
பார்க்கலாம் என்பதே என் பதிலாக இருக்கும்.
ஐயப்பன் படத்தில் தெய்வ நம்பிக்கை இல்லாத ஒருவன் வயிற்றுவலி ஐயப்பன் பிரசாதத்தால் தீர்ந்துவிடும் கட்டம். இதை எழுதும் போது புல்லரித்தது. பெத்தடினுக்கு அப்படிபட்ட சுபாவம் இருப்பதால் இதை அருள் என்று கருதவில்லை.
எழுதி முடித்த என்னை விமான நிலையத்தில் வழியனுப்பும் போது உருக்கமாகச் சொன்னார். மறுமுறை நாம் சந்திக்கும் போது உங்களுக்கு இந்தப் பழக்கம் இருக்காது என்று.
ஒரு சிரிப்பு தான் என் பதிலாக இருந்தது.
சென்னைக்கு திரும்பியதிலிருந்து ஏதேதோ கனவு. சுகமாக இருந்த பெத்தடினால் எரிச்சலும் மயக்கமும் குழப்பமும் இருந்தது. சாப்பிட முடியவில்லை. தூங்க முடியவில்லை. அதைக்கூட தாங்கிக் கொண்டேன். உயிராய் கருதும் எழுத்தும் தடைபட்டது பயம் வந்துவிட்டது.
செயலற்றவனாகி மக்களால் மறக்கப்பட்டு இறுதிக் காலம் வருமோ என்று நடுங்கி ஏப்ரல் 6ம் தேதி நானே விஜயா நர்ஸிங்ஹோமில் படுத்துவிட்டேன். மூன்று மாதம் தங்கி அப்பழக்கத்தை அறவே நிறுத்திவிட்டேன்.
ஆயிரத்து இருநூறு மில்லிகிராம் போட்டவன் ஆபரேஷன் இல்லாமல் அறவே நிறுத்தியது வரலாற்றில் முதல் தடவை என்றார்கள் டாக்டர்கள்.
இது ஐயப்பன் அருள் என்று சொன்னால் நான் எப்படி மறுக்கமுடியும்.
நன்றி கு. நாகராஜ்

No comments:

Post a Comment