Saturday 19 November 2022

இயற்கை வளங்களை வளரும் தலைமுறைக்குப் பரிசாய் தருவோம்.

 இயற்கை வளங்களை வளரும் தலைமுறைக்குப் பரிசாய் தருவோம்.

சுமார் நாலரை பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பாக பூமி பிறந்ததாக அறியப்படுகிறது.
பூமி தவிர வேறு எந்த கிரகங்களில் உயிரினங்கள் வாழ முடியும் என்று எத்தனையோ ஆராய்ச்சிகளை தொடர்ந்து மனிதன் மேற்கொண்டாலும்
அனைத்து உயிர்களும் தடை இன்றி வாழ உகந்த ஒரே கிரகம் பூமி மட்டுமே என்ற விடையே மீண்டும் மீண்டும் கிடைக்கிறது.
பூமியின் கட்டமைப்பு என்பது மனிதன் மட்டும் இன்றி எல்லா உயிரினங்களும் வாழக்கூடிய வகையில் மிகச் சிரத்தையுடன் இயற்கை வரமாய் உருவானதாகும்.
எந்தெந்த உயிரினம் எங்கெங்கே வாழுதல் நலம் என்று தானாகவே பூமி ஏற்படுத்திய வரைமுறை தான், மனிதன் நாட்டிலும், விலங்குகள் காட்டிலும் வாழும்படியாக.
ஆனால் காலப்போக்கில் மனிதனின் பேராசையோ, போதும் என்ற மனமின்றி இயற்கையை அழித்து செயற்கைப் பொருட்களை உருவாக்கத் தொடங்கினான்.
அதன் ஒரு தொடக்கம் தான் காடுகள் அழிக்கப்பட்டு விலங்குகளின் உறைவிடங்கள் அபகரிக்கப்பட்டன.
இதனால் பல்லாயிரக்கணக்கான அரிய வகை உயிரினங்கள் அழிந்தும், அழிவின் விளிம்பிலும் நிற்கின்றன.
ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட இருநூறு முதல் இரண்டாயிரம் உயிரினங்கள் அழிந்து வருவதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
இந்நிலை நீடித்தால் இன்னும் சில ஆண்டுகளில் இதுவே பத்தாயிரம் வரை கூட உயரக் கூடுமாம்.
சென்ற நூற்றாண்டில் சர்வ சாதாரணமாக உயிர் வாழ்ந்த புலி இனங்கள் கூட இன்று வேகமாக அழிந்து வரும் உயிரினங்களில் சேர்ந்து கொண்டது, நம் கண்முன்னே நடந்த துயரமாகும்.
2050-க்குள் முப்பதிலிருந்து ஐம்பது சதவீதம் உயிரினங்கள் பூமியிலிருந்து நிரந்தரமாக விடை பெற்றுக் கொள்ளுமாம்.
வேகமாக அழிந்து வரும் விலங்குகளில் சில அரிய வகை கொரில்லாக்கள், கடல் ஆமைகள், காட்டு யானைகள், காண்டாமிருகமும் அடக்கம்.
இவ்வகை உயிரினங்களின் மரபணுக்கள் எத்தனையோ ஆயிரம் ஆண்டுகள் பூமியில் நிலைப் பெற்று வாழ்ந்தவையாகும்
அவை அழிந்தால் அழிந்தது தான். மீண்டும் ஒரு புலியையோ, யானையையோ நம் அடுத்த தலைமுறை அறியாது. ஒரு இனமே இவ்வாறு சுவடின்றி அழிந்துப் போவது பூமிக்கு ஏற்பட்ட மிகப் பேரிடியாகும்.
உயிரினங்கள் அழிவின் விளிம்பில் நிற்க பூமி வெப்பமயமாவதும் ஓர் முக்கியக் காரணமாகும்.
வேகமாக உருகி வரும் பனிப் பாறைகள் பல்வேறு பனிக்கரடிகளின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கி விட்டது. மேலும் அதிக வெப்பமானது கடல் வாழ் உயிரினங்களை இனப் பெருக்கத்தில் இருந்தும் தடுக்கிறது.
தேனீக்கள் என்று அழிகிறதோ அன்று உலகமும் அழிந்து போகும் என்று புகழ் பெற்ற விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் தனது ஒரு ஆராய்ச்சியின் போது மேற்கோள் காட்டி கூறி உள்ளார்.
அதிகமான பூச்சிக்கொல்லி உபயோகம் மகரந்த சேர்க்கைக்கு உதவும் தேனீ உள்ளிட்ட பல்வேறு பூச்சி இனங்களைக் கொல்வதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
சராசரியாக நூற்றில் கால்பங்கு சதவீத பயிர்களின் மகரந்த சேர்க்கைக்கு தேனீக்களே காரணம். அவைகள் அழிந்தால் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்படும்.
2015-ம் ஆண்டு அமெரிக்காவில் நடந்த ஓர் கணக்கு எடுப்பில் தேனீக்களின் எண்ணிக்கை 44 சதவீதம் குறைந்து இருப்பது தெரிய வந்தது. இது இயற்கை மனிதனுக்கு அளித்துள்ள எச்சரிக்கைக் குரலாகவே அறியப்படுகிறது.
இந்நிலை தொடர்ந்தால் வெகு விரைவில் மனிதனும் அழியும் மிருகங்கள் பட்டியலில் நிச்சயம் சேர்ந்து விடுவான்.
உலகம் வெப்பமயமாகுதல், காற்று மாசு, காடு அழிப்பு, பசுமைக் குடில் விளைவுகள், தண்ணீர் பஞ்சம் என்று பூமி ஏற்கனவே தன் வளங்களை வெகுவாக இழந்து வரும் இந்த நிலையில் பூமியைப் பாதுகாக்கும் பெரும் பொறுப்பு நம்மிடமே உள்ளது.
முடிந்தவரை காற்று மாசைத் தடுத்து, அதிக அளவில் மரங்கள் நட்டு, தண்ணீர் சேமிப்பு, மேலாண்மைத் திட்டங்களை மேம்படுத்தி, இயற்கையை அதன் வழியிலேயே பாதுகாத்தால் மட்டுமே மனிதனால் தன் அடுத்த தலைமுறைக்கு முன்னேறும். தான் அனுபவித்த இயற்கை வளங்களை அடுத்து வருகின்ற தலைமுறைக்குப் பரிசாய்த் தர முடியும்.
இல்லையேல் இனி வரும் தலைமுறைகள் புலியையும், யானையையும், ஏன் மழையைக் கூட புகைப்படத்தில் தான் காண இயலும்.
எந்த மனிதனும் திட்டம் போட்டு பூமியை உருவாக்கவில்லை. மனித குலம் பிறப்பதற்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உயிர் இனங்களைத் தன் மடியில் தாங்கிக் கொள்ள எழில் நிறைந்து பிறந்தது தான் இந்தப் பூமி.
இன்றே உறுதிமொழி எடுத்துக் கொள்வோம். ஆளுக்கு ஒரு மரம் நட்டு வைத்து அதைப் பராமரிப்போம்.
நமது வீட்டில் ஒரு குழந்தை பிறந்தால் அவர்கள் நினைவாக ஒரு மரம் நட்டு வைத்து, அந்தக் குழந்தைக்கு மரம் வளர்ப்பதன் அவசியத்தைச் சொல்லிச் சொல்லியே குழந்தைகளுக்கு இயற்கை மற்றும் மரங்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவோம்.
இப்படி சின்னச் சின்ன செயல்களைச் செய்தாலே பூமி மேலும் வெப்பமயமாவதிலிருந்தும்,மாசு அடைவதில் இருந்தும் பூமியைக் காப்பாற்றி அடுத்த தலைமுறைக்கு ஆரோக்கியமாக விட்டுச் செல்வோம்.

No comments:

Post a Comment