Monday 7 November 2022

மகான்_இருளப்ப_கோனார்.

 #மகான்_இருளப்ப_கோனார்.

மதுரைக்கு அருகில் இருக்கும் திருப்பரங்குன்றத்துக்கும் ஒரு மகத்துவம் உண்டு. பதினெட்டுச் சித்தர்களுள் ஒருவராகவும் காலங்களைக் கடந்து வாழ்ந்து வந்தவருமான காகபுசுண்டரின் (காகபுஜண்டர் என்றும் சொல்லப்படுவதுண்டு) பெரியரிலேயே இங்கு ஒரு மலை அமைந்துள்ளது....!!!
ஆம்! அந்த மலையை காகபுசுண்டர் மலை என்றும் புசுண்டர் மலை என்றும் ஆன்மிக அன்பர்கள் தொன்றுதொட்டு அழைத்து வருகிறார்கள். மதுரையின் பெயரைத் தாங்கி, திருக்கூடல்மலை என்றும் அழைக்கப்பட்டு வருகிறது. கடல்மட்டத்தில் இருந்து சுமார் 300 அடி உயரம் கொண்டது இந்த மலை....!!!
இந்த காகபுசுண்டர் மலையில் அடிவாரத்தில் கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகளின் சமாதி திருக்கோயிலும், மலைக்குச் செல்லும் வழியில் மாயாண்டி சுவாமிகளின் சீடரான சோமப்பா சுவாமிகளின் திருச்சமாதியும் அமைந்துள்ளன....!!
தவிர வேலம்மாள், இருளப்பக் கோனார், மூக்கையா சுவாமிகள் இப்படி சுமார் பத்துக்கும் மேற்பட்ட சமாதிகள் இந்த காகபுசுண்டர் மலைப் பகுதியில் அமைந்துள்ளன...!!!
மாயாண்டி சுவாமிகள் ஜீவ சமாதி திருக்கோயிலையும் காகபுசுண்டர் மலையையும் தற்போது நிர்வகித்து வருகிறது சூட்டுக்கோல் ராமலிங்க விலாசம். இதன் செயலாளராக இருந்து வருபவர் இரா. தட்சிணாமூர்த்தி. மாயாண்டி சுவாமிகளுடன் உடன் இருந்து அவர் இட்ட திருப்பணிகளை எல்லாம் செய்து முடித்த இருளப்பக் கோனாரின் கொள்ளுப் பேரன் இவர்.!!
இதில் மாயாண்டி சுவாமியின் சீடரான இருளப்ப கோனாரை பற்றி பார்ப்போம்...!!
கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகளின் வாழ்க்கையோடு நெருங்கிய தொடர்பு உடையவர்- க. இருளப்ப கோனார். மதுரை வடக்கு மாசி வீதியில் தாளமுத்துப் பிள்ளை சந்தில் வசித்து வந்தார் இவர்...!!!
இருளப்ப கோனாருக்கும் மாயாண்டி சுவாமிகளுக்கும் இருந்த தொடர்பு அவரது காலத்தோடு முடிந்துவிடாமல், அவரது சந்ததியில் வந்த சேதுமாதவ கோனார், ராமலிங்க கோனார், தட்சிணாமூர்த்தி கோனார் என்று இந்தப் பரம்பரையே மாயாண்டி சுவாமிகள் திருத்தொண்டில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டு வருகிறது....!!!
தற்போது சூட்டுக்கோல் ராமலிங்க விலாசத்தின் பரம்பரை தர்மகர்த்தாவாக (நான்காவது தலைமுறை) இருந்து வருபவர் க.இ.சே. ராமலிங்கக் கோனார்...!!
இருளப்ப கோனாரின் தந்தையார் கருப்பண்ண கோனாரை வளர்த்தவர் சுப்ரமண்ய கோனார். இவர் மதுரையில் அந்தக் காலத்தில் சிட் பண்ட் நடத்தி வந்தவர். சுப்ரமண்ய கோனாரின் தொடர்பு ஏற்பட்டதும், கருப்பண்ண கோனாரின் வாழ்க்கையில் ஒரு பிரகாசம் கூடியது....!!!
ஒரு கட்டத்தில் இருளப்ப கோனாரையும் தன் பங்குதாரராக ஆக்கிக்கொண்டார் சுப்ரமண்ய கோனார். மாயாண்டி சுவாமிகள் சம்பந்தப்பட்ட ஆன்மிகத் தொண்டுகளைத் திறம்பட நிறைவேற்றுவதற்கு சுப்ரமண்ய கோனாரின் தொடர்பு கருப்பண்ண கோனாருக்கு உதவியது என்றால், அது தெய்வீகச் செயலே!!!!
கருப்பண்ண கோனார் காலத்துக்குப் பின், அவரது இறைப் பணிகளைத் தொடர்ந்தார் அவரது திருமகனான இருளப்ப கோனார்....!!!
துவக்கத்தில் மிகவும் கஷ்டப்பட்டவர் இருளப்ப கோனார். மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உத்ஸவ காலத்தில் சுவாமி வீதி உலாவின் போது தீவட்டி பிடித்து, அதற்குக் கூலியாக காலணா சன்மானத்தைப் பெற்று வாழ்ந்து வந்தவர் இருளப்ப கோனார்....!!
கூலியாகக் கிடைக்கும் காசு, அன்னை மீனாட்சி இட்ட பிச்சை என்பதாக அகமகிழ்வார் இருளப்ப கோனார். அப்படி இறைப் பணி செய்து சம்பாதித்த பணத்தையும் தெய்வீகக் காரியங்களுக்கே செலவழித்தார்....!!!
சன்மார்க்க நெறியைப் பின்பற்றி வாழ்ந்து தன்னால் முடிந்த தான தர்மங்களையும் நந்தவன கைங்கர்யங்களையும் செய்து வந்தார். ஆடி அமாவாசை தினத்தன்று மதுரை அழகர் கோயிலில் இருளப்ப கோனார் துவக்கி வைத்த அன்னதானச் சேவை இன்றும் நடந்து வருகிறது....!!!
சுந்தர ராமானுஜ தாசர் என்றே இருளப்ப கோனாரின் பரம்பரை இன்றளவும் போற்றப்படுகிறது. இந்தப் பட்டத்தை இருளப்ப கோனாருக்கு வழங்கியவர் ஸ்ரீரங்கம் மதுரகவி சுவாமிகள்...!!
ஸ்ரீரங்கத்தில் மதுரகவி சுவாமிகளோடு இணைந்து அவரது நந்தவனக் கைங்கர்யத்துக்கு உதவினார். நந்தவனப் பணிகள் மேலும் சிறப்பதற்கும் தடை இல்லாமல் நடப்பதற்கும் நிலங்களை வாங்கிக் கொடுத்தார். இருளப்ப கோனாரின் அரும் பணிகளைப் பார்த்து வியந்த மதுரகவி சுவாமிகள் அவருக்கு சுந்தர ராமானுஜ தாசர் என்கிற பட்டத்தை அளித்து கௌரவித்தார்...!!
வைணவப் பணிகளைப் பெருமளவு செய்து கொண்டிருந்ததால் ராமானுஜ தாசர்; மதுரையில் அழகர் கோயிலுக்கு சேவை செய்து கொண்டிருந்ததால், அங்குள்ள பெருமாளின் திருநாமமான சுந்தர்ராஜ என்பதில் இருந்து சுந்தர என்பதைச் சேர்த்து, சுந்தர ராமானுஜ தாசர் என்று இருளப்ப கோனாரை அழைத்தார் மதுரகவி சுவாமிகள்....!!!
ஸ்ரீரங்கத்திலேயே பல காலம் தங்கி இருந்து, மதுரகவி சுவாமிகளின் திருப்பணிகளுக்கு உதவி, அவர் திருவரசு (மகா சமாதி) ஆன பின்னர், அங்கிருந்து புறப்பட்டு மதுரையை அடைந்தார் இருளப்ப கோனார்.....!!!
மதுரைக்கு வந்த இருளப்ப கோனார், தனது ஆன்மிகப் பணிகள் இனிதாகத் தொடர்வதற்குத் தனக்கு ஒரு குரு தேவை என்பதை உணர்ந்தார்....!!
ஒரு நாள் கீழப்பூங்குடி மிளகாய்ச் சித்தர் என்கிற ஞானியைச் சந்தித்தார். இருளப்பா… திரிகால ஞானி ஒருவர் மதுரைப் பகுதியில் சுற்றிக் கொண்டிருக்கிறார். கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி என்பது அவர் பெயர். ஆரப்பாளையம், கோரிப்பாளையம், திருப்பரங்குன்றம், கூடல்மலை போன்ற பகுதிகள்தான் அவரது நித்திய வாசம். அவரைத் தேடிப் போய் தரிசனம் செய். உன் வாழ்க்கை சிறக்கும்? என்று சொல்லிப் போனார்....!!!
மிளகாய்ச் சாமியார் சொன்னதன்படி மாயாண்டி சுவாமிகளைத் தரிசித்து, அவரையே தன் குருவாக ஏற்பதற்குப் பெரும் விருப்பம் கொண்டார் இருளப்ப கோனார். இதற்கு இவருக்கு உதவியவர்- மூக்கையா சுவாமிகள். இவர் இருளப்ப கோனாரின் உறவினரும்கூட.!!!
மூக்கையா சுவாமிகளுடன் போய் கட்டிக்குளம் மாயாண்டி சுவாமிகளைச் சந்தித்தார். மொளகா சாமீ ஒன்னை அனுச்சானா? என்று கேட்டுவிட்டு, இருளப்ப கோனாரை ஆசிர்வதித்து, தன் அருட் பணிகளில் இணைத்துக் கொண்டார் மாயாண்டி சுவாமிகள்...!!
இருளப்ப கோனார் தன் காலத்தில் திரட்டிய செல்வத்தைக் கொண்டு திருப்பரங்குன்றம் திருக்கூடல்மலையில் நிறைய இடங்களை வாங்கி, மாயாண்டி சுவாமிகளின் அறிவுரைப்படி ஆன்மிகம் மற்றும் அறப் பணிகளைப் பிற்காலத்தில் நடத்தலானார்....!!!
இருளப்ப கோனாருக்கு ஆயுள் பலம் குறைவாக இருப்பதாகவும் அவரது வாழ்வு இருபத்தாறு வயதுக்குள் முடிந்துவிடும் என்றும் சில ஜோசியர்கள் அவரிடம் சொல்லி இருந்தார்கள். இதைக் கேட்டு மனக்கவலையில் இருந்த காலத்தில்தான் மாயாண்டி சுவாமிகளை கோரிப்பாளையத்தில் சந்தித்தார் இருளப்ப கோனார்...!!!
திரளான பக்தர்கள் கூடி இருந்த அந்த மடத்தின் சூழ்நிலையைப் பார்த்ததும், மெய் மறந்தார் இருளப்ப கோனார். மாயாண்டி சுவாமிகளின் திருவடிகளில் தன்னை சமர்ப்பித்தார்....!!!
மணக்கும் மலர் மாலைகள் மலைபோல் குவிந்து கிடக்க, அவற்றின் இடையில் குத்துக்காலிட்டு அமர்ந்திருந்தார் சுவாமிகள் (சுவாமிகள் பெரும்பாலும் இதே நிலையில்தான் அமர்ந்திருப்பார்). இருவரும் பார்வையால் பேசிக் கொண்டனர்.
மாயாண்டி சுவாமிகள் திடீரென இருளப்ப கோனாரைப் பார்த்துச் சிரித்தார். என்ன அப்பு… ஜோசியக்காரன் சொன்னதைக் கேட்டு கவலையில் இருக்கியா? உனக்கு ஆயுள் உண்டு. இன்னும் நீ நிறைய அறப் பணி செய்ய வேண்டி இருக்கே என்று சுவாமிகள் திருவாய் மலர… இருளப்ப கோனார் அதிசயித்து அவரைப் பார்த்தார் ஒருவருடைய ஆயுளையே மாற்றும் திறன் மகான்களுக்கு உண்டு என்பது, இருளப்ப கோனார் வாழ்க்கையில் நிரூபிக்கப்பட்டது. அதற்கான நிரூபணமாக, கட்டிக்குளத்துக்கு மேற்கே கருப்பனேந்தலில் தான் உருவாக்கிய தியான மடத்துக்கு இருளப்ப கோனாரை அழைத்துச் சென்றார் மாயாண்டி சுவாமிகள்....!!!
ஒரு மண்டல காலம் இருவரும் அங்கேயே தங்கினார்கள். விதிப்படி இருளப்ப கோனார் அனுபவிக்க வேண்டிய அவஸ்தைகளை சுவாமிகளே அனுபவித்தார். ஒரு நாள் முழுதும் மூடிய குழிக்குள் குத்துக்காலிட்டு அமர்ந்து கடும் நிஷ்டையில் அமர்ந்தார். எவரையும் தன் அருகில் வர அனுமதிக்கவில்லை....!!!
மறுநாள் காலை குழிக்குள் இருந்து வெளியே வந்த மாயாண்டி சுவாமிகள், இருளப்ப கோனாரைப் பார்த்துச் சொன்னார். அப்பு… இனிமே ஒனக்குப் பிரச்னை இல்லை. ஆயுள் பலம் கூடிடுச்சு. தயங்காம ஆன்மிகப் பணி செய்....!!
தன் உடலில் ஏதோ புது ரத்தம் பாய்வது போல் உணர்ந்தார் இருளப்ப கோனார். ஆம்! இனி, அவரது புதுப் பிறவி அந்த நிமிடத்தில் இருந்து துவங்கியது. தன் வாழ்நாளையே நீட்டித்துத் தந்த மாயாண்டி சுவாமிகளுக்குத் தன்னையே என்றென்றும் அர்ப்பணிக்க வேண்டும் என்கிற நன்றிக் கடனால், சுவாமிகளின் இறுதிக் காலம் அவரை விட்டு நீங்காமல் இருந்தார் இருளப்ப கோனார்....!!!
இருந்த இடத்தில் இருந்தபடியே இருளப்ப கோனாருக்கு காசி தரிசனத்தைத் தன் ஸித்து வேலையால் செய்து காண்பித்தார் சுவாமிகள்....!!!
இன்னும் இரண்டு ஆண்டுகளில் அடக்கம் ஏற்படும் என்று 1928-ஆம் வருடம் புரட்டாசி மாதம் 6-ம் தேதி இருளப்ப கோனார் உட்பட தன் பக்தர்களிடம் தகவல் தெரிவித்தார் மாயாண்டி சுவாமிகள். அதன்படி, 1930-ஆம் வருடம் புரட்டாசி மாதம் 11-ஆம் தேதி இருளப்ப கோனாரின் இடது தோளில் சாய்ந்து, அப்பு… இந்த சட்டையைக் கழற்றிவிடலாமா? என்று கேட்டுவிட்டு, சமாதி யோகத்தில் ஆழ்ந்தார். சுவாமிகளது ஆன்மா இறைவனுடன் இணைந்தது...!!
திருக்கூடல்மலையில் சுவாமிகள் தொடங்கிய பணிகளுக்கு உறுதுணையாக இருந்தார் இருளப்ப கோனார்.....!!!!
வாய்ப்புகள் இருக்கும் உறவுகள் இருளப்ப கோனாரை ஒருமுறை தரிசித்து விட்டு வாருங்கள்....!!!
போற்றி வணங்குகிறேன்....!!!

No comments:

Post a Comment