Thursday 10 November 2022

நான் மட்டும் தான்

 நான் மட்டும் தான்

கஷ்டப்படுகிறேன் என்று சொல்பவர்கள் கவனிக்கவும்.
சுட்ட பானையும் சுடாத பானையும்
குயவர் ஒருவர் நிறைய மண்பானைகளைச் செய்து கொண்டிருந்தார் . அவற்றைச் சுட்டு எடுப்பதற்கான சூளையும் பக்கத்தில் ஆயத்தமாகிக் கொண்டிருந்தது .
பத்துப் பத்துப் பானைகளாக எடுத்து சூளையில் , சுடப்பட்டுக் கொண்டிருந்தன . நெருப்புக்கு உள்ளிருந்து பானைகள் அலறும் சத்தமும் கேட்டது .
அடுத்த சூளைக்கும் பத்துப் பச்சைப் பானைகள் தயாராக வைக்கப்பட்டிருந்தன . அடுத்து நடக்கப் போவதை எதிர்பார்த்துப் பானைகள் காத்துக் கொண்டிருந்தன .
அதில் ஒரு பானைக்கு மட்டும் மிகுந்த பயம் வந்துவிட்டது . சூளைக்குள் போன பானைகளின் அலறல் அதற்கு கிலியை ஏற்படுத்திவிட்டது . பக்கத்தில் இருந்த பானையிடம் கேட்டது ,
" நண்பா , இந்தக் கொடுமையான சூளையிடுதல் கண்டிப்பாய் நமக்குத் தேவைதானா இதைத் தவிர்க்க வேறு வழியே இல்லையா எனக்கு மிகவும் பயமாக இருக்கிறது " .
அந்தப் பானை பதிலுக்கு ,
" இதில் பயப்பட என்ன இருக்கிறது ? எந்த வடிவமும் இல்லாமல் மண்ணோடு மண்ணாகக் கிடந்த நம்மை எடுத்துப் பிசைந்து , இத்தனை அழகான பானைகளாக உருவாக்கிய குயவர் நமக்குக் கெடுதல் செய்ய மாட்டார் என்று நான் நிச்சயமாக நம்புகிறேன் . நீயும் நம்பு " என்றது .
இருந்தாலும் முதல் பானைக்கு பயம் விடவில்லை . சூளையை நினைக்க நினைக்கக் குலை நடுங்கிற்று . நடுங்கிக் கொண்டே காத்திருந்தது .
இதோ குயவர் வந்துவிட்டார் . ஒவ்வொரு பானையாக எடுத்து சூளைக்குள் வைக்கத் தொடங்கினார் . அந்தப் பானையையும் நெருங்கி வந்துவிட்டார். அருகில் நெருங்கி வந்ததுமே பானை பெருங்குரலெழுப்பிக் கதறத் தொடங்கிவிட்டது .
" ஐயா ! என்ன விட்டுடுங்க . நெருப்புல போட்டுடாதிங்க " என்று அலறியது . குயவர் சொன்னார் ,
" சூளையில் போடுறது உன்னை வேதனைப்படுத்த அல்ல , வலிமைப்படுத்த " .
அவர் சொல்வதைப் பானை ஏற்றுக் கொள்ளவில்லை .
" இப்பவே நான் வெயிலில் காஞ்சு வலிமையாதான் இருக்கேன் . சுட்ட பானைகள் செய்ற எல்லா வேலையும் என்னால செய்யமுடியும் . தயவு செஞ்சு என்ன இப்படியே விட்டுடுங்க " என்று பரிதாபமாய்க் கெஞ்சியது . குயவர் சிரித்துக்கொண்டே அந்தப்பானையை மட்டும் விட்டுவிட்டு மற்ற பானைகளை சூளையில் வைத்தார் .
மற்ற சுட்ட பானைகளைப் போல் சுடாத பானைக்கும் வண்ணம் பூசப்பட்டு , மற்ற பானைகளோடு வண்டியில் ஏற்றப்பட்டு அனுப்பப்பட்டுவிட்டது . பானைக்கு ஒரே சந்தோஷம் . ஆமாம் . மற்ற பானைகளுக்கும் அதற்கும் எந்த வித்தியாசமும் தெரியவில்லை . அதுவும் மற்ற பானைகளைப் போலவே தான் காணப்பட்டது .
ஒரு மனிதர் அந்தப் பானையுடன் சேர்த்து மூன்று பானைகளை வாங்கித் தன் வீட்டு வாசலில் வைத்தார் . சுடாத பானைக்குப் பெருமையாக இருந்தது .
" எனக்கும் , சுட்ட பானைகளுக்கும் எந்த வித்தியாசமுமே தெரியவில்லை . சுடப்படுவதால் எந்தப் பயனும் இல்லை . நான் எவ்வளவு பெரிய அறிவாளி " என்று தனக்குள்ளேயே பேசிக்கொண்டது . சுடப்பட்ட மற்ற இரு பானைகளையும் பார்த்து ஏளனமாய்ச் சிரித்தது .
சற்று நேரம் கழிந்தது . வேலையாள் ஒருவர் குடங்களில் தண்ணீர் கொண்டுவந்து பானைகளை நிரப்பினார் . இப்போதும் பச்சைப் பானைக்கு ஒன்றும் நிகழவில்லை . மற்ற பானைகளிடம் சொன்னது ,
" அறிவிலிகளே ! உங்களைப் போல முட்டாள்தனமாய் நானும் நெருப்பில் வெந்து வதைபடாமல் எத்தனை புத்திசாலித்தனமாய்த் தப்பித்தேன் . பாருங்கள் , உங்களைப் போலவே நானும் நன்றாகத்தானே உறுதியாக நிற்கிறேன் " என்று ஏளனமாய்ச் சொன்னது .
பானை பேசிக்கொண்டிருந்தபோதே தன்னில் ஏதோ ஒரு மாற்றத்தை உணர்ந்தது . தண்ணீர் அதைக்கொஞ்சம் கொஞ்சமாக அரித்துக் கரைத்து விட்டது . ஒவ்வொரு இடமாய் உடைந்து விழுந்து கடைசியில் உருவழிந்த ஒழுங்கற்ற ஒரு சேற்றுக்குவியலாய் மாறிப்போனது .
*சோதனையின் பாதையைக் கடக்காதவர் எதனையும் தக்க வைத்துக்கொள்ள இயலாது .*

No comments:

Post a Comment