Monday 7 November 2022

ரவு பதினோரு மணிக்கு எம்.எஸ்.வி. வீட்டு தொலைபேசி ஒலித்தால் மறுமுனையில் கவிஞர் என்று அர்த்தம்

 இரவு பதினோரு மணிக்கு எம்.எஸ்.வி. வீட்டு தொலைபேசி ஒலித்தால் மறுமுனையில் கவிஞர் என்று அர்த்தம்.

‘டேய்... புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே... கேட்டுக்கொண்டிருக்கிறேன்’ என்பார்.
ஒரு தரம் ஒரு வேண்டுகோளை தன் நண்பரிடம் வைத்தார் கவிஞர்.
‘நீ எப்போ மேடையில கச்சேரி பண்ணினாலும் புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே... பாட்டை முதல்ல பாடணும்.’
‘சரி’ என்று கவிஞருக்கு அன்று கொடுத்த வாக்கை இன்றும் காப்பாற்றி வருகிறார் எம்.எஸ்.வி. அப்படி அந்தப் பாட்டைப் பாடி முடிக்கும்போது, ‘ புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே... அந்த கண்ணதாசன் புகழ் பாடுங்களே’ என்று சற்றே மாற்றி உணர்ச்சியோடு பாடுவார்.
கண்ணதாசன் அவர்களின் உடல்நலம் வெகுவாகப் பாதிக்கப்பட்ட நிலையில் அவரைச் சிறப்புச் சிகிச்சைக்காக அமெரிக்காவுக்குக் கொண்டு செல்வது என்று முடிவு செய்யப்பட்டது.
கவிஞருக்கும் மெல்லிசை மன்னருக்கும் இடையே நட்பு பிறந்து அது இறுகிய பின்னர் எந்த வெளிநாட்டுப் பயணத்துக்கும் எம்.எஸ்.வி. இல்லாமல் கவிஞர் சென்றது கிடையாது. ஒட்டிப் பிறந்த இரட்டையர் போலவே இவர்கள் இரண்டு பேரும் வெளியிடங்களுக்குப் போய் வந்தார்கள். அதிலும் நாட்டை விட்டுப் போவது என்றால் இரண்டு பேரும் ஒன்றாகத்தான் திட்டமிட்டுப் போய் வருவார்கள்.
வெளிநாட்டு ரசிகர்களுக்கும் அதுதான் பிடித்திருந்தது.
ஆனால் கவிஞர் சிகிச்சைக்காக அமெரிக்காவுக்குப் போன போது எம்.எஸ்.வி.-யால் உடன் போக முடியவில்லை.
கவிஞர் என்னமோ நீயும் வாடா என்று வருந்தி வருந்தி கூப்பிடத்தான் செய்தார்.
சொந்தப் படங்கள் எடுத்ததில் ஏற்பட்ட பொருளாதார இழப்பு, முடித்துக் கொடுக்க வேண்டிய படங்கள் கையில் இருந்த நிலை எல்லாமாகச் சேர்ந்து எம்.எஸ்.வி.-யால் அப்போது போக முடியவில்லை.
அமெரிக்கா போனதும் கவிஞர் போட்ட முதல் போன் கால் வேறு யாராக இருக்கும்?
‘என்னங்க - எம்.எஸ்.வி.-யை அழைத்து வராமல் வந்திருக்கீங்களே...’ என்றுதான் என்னிடம் எல்லோரும் கேக்கறாங்க விசு’ என்றார்.
‘விசா பத்தியெல்லாம் கவலைப்படாதே. அதுக்கு எல்லாம் ஏற்பாடு செய்ய இங்கே தயாரா இருக்காங்க. வாடா விசு’ என்று அமெரிக்காவிலிருந்து கவிஞர் அழைப்பு விடுத்தார்.
தன் நிலைமையை விளக்கி அப்போதைக்கு வர முடியாததைச் சொல்லி நட்புடன் மன்னிப்பு கேட்டுக்கொண்டார் எம்.எஸ்.வி.
‘மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோதும்கூட அடிக்கடி என்னைப் பற்றியே பேசிக்கொண்டிருந்தாராம் கவிஞர். சில சமயம் நினைவு தப்பிய நிலையிலும் ‘ டேய்.. விசு...அந்த ட்யூன் போடுடா..., இந்த பல்லவி....’ என்று இங்கே நாங்கள் எப்படிப் பழகுவோமோ அதேபோன்ற வார்த்தைகளையே சொல்லிக் கொண்டிருந்தாராம். இந்த விவரங்களையெல்லாம் கவிஞரின் குடும்பத்தினரும் அமெரிக்காவில் இருந்த அவரது ரசிகர்களும் அப்போது முதல் அமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர்-ரிடம் தொலைபேசி மூலம் சொல்லியிருக்கிறார்கள். உடனே எம்.ஜி.ஆர். என்னுடன் தொடர்பு கொண்டு ‘கவிஞர் உங்க நினைவாகவே இருக்காராம்... விசு, உடனே அமெரிக்கா போக முடியுமா நீங்க?’ என்று கேட்டார். எனது அன்றைய சூழலில் போக முடியாமல் இருந்ததை விளக்கினேன்.
உடனே எம்.ஜி.ஆர். ‘அப்ப ஒண்ணு செய்யுங்க விசு... நீங்க கவிஞரோட பேசற மாதிரி, ட்யூன் போடற மாதிரி, அவர்கிட்டயிருந்து பல்லவி வாங்கற மாதிரி, உங்க இரண்டு பேரின் கிண்டல், கேலி, நட்பு இதெல்லாம் பிரதிபலிக்கிற மாதிரி ஒரு கேசட் பண்ணி அனுப்புங்க. அதைப் போட்டுக் கேட்டா கவிஞருக்கு ஒருவேளை ஆறுதலா இருக்கலாம்...’ என்றார்.
அப்படியே செய்து அனுப்பினோம். ஆனால் அந்த கேசட் அங்கு போய் அவரைச் சேர்வதற்குள் அவர் போய்ச் சேர்ந்துவிட்டார் (17-10-1981).
கவிஞர் இறந்த பின்பு அவர் என் கனவில் வராத நாளே இல்லை. நாங்கள் எப்போதும் போல பேசிக்கொண்டிருக்கிறோம்.
நன்றி... ராணி மைந்தன் எழுதிய "மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி." என்ற நூலிருந்து..
நன்றி கவியரசர் கண்ணதாசன் முகநூல்

No comments:

Post a Comment