Friday 17 July 2020

‘’ தேவைப்படாத பொருட்களை..’’

‘’ தேவைப்படாத பொருட்களை..’’
அண்மைக் காலங்களில் தொலைக்காட்சிகளின் விளம்பரங்கள் பல நடுத்தர வர்க்க மக்களைக் கூடத் தொற்று நோய் போல் தொற்றிக் கொண்டு, ஆடம்பர பொருள்களை வாங்கிக் குவிக்கச் செய்கிறது!
அதிலும் வங்கிகள் தந்த (Credit Cards) கடன் அட்டைகளை வைத்துக் கொண்டு ஆடம்பரப் பொருள்களை வாங்குவது தேவையைக் கருதி அல்ல ஆசையைக் கருதி,தன் தகுதியை விளம்பரப்படுத்திக் கொள்ளும் வெளிச்ச வியாதிக்கு பலர் பலியாகி, கண்டபடி குறிக்கோள் இன்றிச் செலவு செய்வதைப் பார்க்கின்றோம்..
தேவையில்லாத நேரத்தில் தேவைப்படாத பொருட்களை வாங்குவதால், தேவைப்படும் போது அதை வாங்க முடியாமல் தள்ளப்படுகின்றார்கள்..
கையில் கிரிடிட் கார்டு இருந்தால் போதும் கடைகளில் இருக்கும் பொருட்கள் அனைத்தையும் வாங்கி வீட்டில் அடைத்து வைத்து விடுகிறார்கள். அதில் பாதிக்கு மேல் தேவையே இருக்காது.
சும்மா இருக்கட்டுமே என்று வாங்கி வீட்டில் அடைத்து விட்டு, மாதக் கடைசியில் அவசர செலவுக்குக் கையில் காசில்லாமல் திண்டாடிக் கொண்டு இருப்பார்கள்..
ஆடம்பரத்திற்காக, கட்டாயமாக ஆன்லைனில் ஷாப்பிங் செய்வதை அனுபவிப்பதாலும் இது தங்களின் சுயமரியாதையை உயர்த்துவதாக நினைப்பதாலும், தங்களுக்குத் தேவையே இல்லாத, விருப்பம் அற்ற,பயன்படுத்த முடியாத பொருட்களை வாங்குவதற்கு ஆளாக்கப்படுகிறார்கள்.
அதனால் தான் ஆடம்பரக் காலணிகள், உடல் பராமரிப்புப் பொருட்கள் மற்றும் விலையுயர்ந்த எலக்ட்ரானிக் பொருட்கள் ஆகியவை, இவர்களுக்குத் தேவை இருக்கின்றதோ, இல்லையோ இவர்கள் வாங்கும் பட்டியலில் அடிக்கடி இடம் பெறுகின்றன
கிரேக்க நாட்டின் தத்துவ மேதை சாக்ரடீஸ் ஒரு முறை ஏதென்ஸ் நகரின் அங்காடித் தெருக்களில் சுற்றிக் கொண்டே வந்தார்.நாலைந்து தெருக்களின் உள்ளே நுழைந்து கடைகளில் உள்ள பொருட்களை எல்லாம் கூர்ந்து கவனித்து கொண்டே வந்தாராம்.
மறுநாளும் அங்காடித் தெருவில் நுழைந்து கடைகளில் உள்ள பொருட்களைக் கூர்ந்து நோக்கிய வண்ணம் நடந்து சென்று விட்டார்.
இப்படியே ஒரு வாரமாக அங்காடித் தெருக்களில் சுற்றிப் பார்த்து விட்டுச் சென்று விடுவார்.
ஏழாம் நாள் சாக்ரடீஸ் அங்காடித் தெருவில் உலா வருவதைக் கண்ட ஒரு கடைக்காரர்,
"அய்யா நானும் கடந்த பல நாட்களாகப் பார்த்துக் கொண்டே வருகிறேன். கடைத்தெரு வழியே வருகிறீர்கள் , கடையில் உள்ள பொருட்களைப் பார்க்கிறீர்கள், ஆனால் இது நாள் வரையிலும் எந்தப் பொருளையும் வாங்கவே இல்லை!
உங்களுக்கு எந்தப் பொருள் வேண்டும் என்றால் நான் அந்தப் பொருளை வரவழைத்துத் தருவேனே?" என்று கேட்டார்.
அதற்கு சாக்ரடீஸ்,-
அய்யா கடைக்காரரே., இங்குள்ள பல கடைகளில் உள்ள பொருட்கள் எவையும் என் வீட்டில் இல்லை!. இந்தப் பொருட்கள் எவையும் இல்லாமல் என்னால் வாழ முடிகிறதே! என்று எண்ணிப் பார்த்து ஒவ்வொரு நாளும் மகிழ்கிறேன்", எனக் கூறினாராம்.
கடைக்காரர் வியந்து போய் விக்கித்து நின்று விட்டாராம்!வீண் செலவு செய்து தேவை அற்ற பொருள்களை வாங்கிக் குவிப்பதால் ஒருவனின் பொருளாதாரம் மட்டும் அழிவது இல்லை. மாறாக இப்படிப்பட்ட மக்கள் பல ஆயிரம் பேர்கள் இருந்தால் ஒரு நாட்டின் பொருளாதாரமும் பாதிக்கப்படும்
ஆம்.. நண்பர்களே.,
ஏதேனும் ஒரு பொருளை வாங்குவதற்கு முன்பு ஒரு முறைக்கு இருமுறை யோசனை செய்யுங்கள். தேவையற்ற பொருட்கள் உங்கள் பட்டியலில் இருந்தால் முதலில் அதை நீக்கி விடுங்கள்..
இன்று நீங்கள் தேவையற்ற ஒரு பொருளை வாங்கினால் நாளை தேவையான ஒரு பொருளை விற்க வேண்டிய சூழ்நிலை உங்களுக்கு வரலாம்.

No comments:

Post a Comment