Wednesday 22 July 2020

இந்தியாவில் தயாராகும் மருந்து.

இந்தியாவில் தயாராகும் மருந்து.
இன்று உலகமெங்கும் உற்சாகத்தைக் கிளப்பியிருக்கும் ஒரு பெயர் ‘AZD1222’.
இங்கிலாந்தின் Oxford-AstraZenaca தயாரிப்பான, கோவிட்-19 தடுப்பு மருந்தின் பெயர் இது. ஆயிரம் மனிதர்கள் மீது நிகழ்த்தப்பட்ட சோதனைகளில், நோய்க் காரணியான SARS-Cov2 வைரஸைத் தடுக்கும் நோய் எதிர்ப்பாற்றலை உருவாக்குவதுடன், லேசான காய்ச்சல், சில மணி நேரத் தலைவலி, ஊசி போடப்பட்ட இடத்தில் சிறு அரிப்பு போன்றவைகளைத் தவிர்த்து பெரும் பக்க விளைவுகள் ஏதுமின்றி பாதுகாப்பானது என்றும் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
‘AZD1222’ இப்போது Phase 3 கட்டத்தில் இருக்கிறது. இதில் பிற நாடுகளில், அதிக அளவிலான மக்கள் மீது இச்சோதனை நிகழ்த்தப்படும். அமெரிக்காவில் மட்டும் 30,000 பேர் இதில் பங்குபெற இருக்கிறார்கள்.
Phase 3 என்பது இன, நாடு, நிலப்பரப்புகள் கடந்து பெருமளவிலான மக்கள் பயன்பாட்டின் போதும் இம்மருந்தின் செயல் திறன் மற்றும் விளைவுகள் மாறாமல் இருப்பதை உறுதி செய்யவே, ஆகவே ஏற்கனவே கிடைத்துள்ள முடிவுகளைக் கொண்டு, பில்லியன் கணக்கில் இம்மருந்துகளைத் தயாரிக்கும் பணிகள் துவங்கியாயிற்று.
தயாரிப்பில் ஓனர் நாடு இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு முன்னுரிமை, அடுத்து அமெரிக்கா என்றெல்லாம் படித்துவிட்டு அப்புறம் எப்ப தான் இந்தியாவிற்கு வரும் என்று அடித்துப் பிடித்துப் படித்தால்,
மருந்து இந்தியாவிற்கு வராதாம், காரணம் ! நாம் தான் அதை தயாரிக்க இருக்கிறோம்.
ஆம். இங்கிலாந்திற்கு தயாராகும் அதே வேளையில், இந்தியாவிலும் இம்மருந்து தயாராகும். காரணம் இந்திய நிறுவனம் SERUM இன்ஸ்டிடியூட்.AZD1222 வை பில்லியன் கணக்கில் தயாரிக்க ஆஸ்ட்ராஜெனிகா விடம் 100 மில்லியன் டாலரில் ஒப்பந்தம் செய்துள்ளது இந்நிறுவனம். கடந்த ஜூன் மாதமே ஒப்பந்தம் கையெழுத்து ஆனாலும், காத்திருந்தது எல்லாம் இச்சோதனை முடிவுகளுக்குத் தான். இப்போது அதுவும் வெற்றி.
ஆகவே இந்தியர்கள் மீது பரிசோதிக்க அரசிடம் அனுமதி கோரியுள்ளது SERUM இன்ஸ்டிடியூட். எல்லாம் சரியாகச் சென்றால் இன்னும் சில மாதங்களில் நாம் சுதந்திரக் காற்றை சுவாசிப்போம். நாம் மட்டுமல்ல, நம் அண்டை நாடுகளும் தான். இந்தியாவிற்குத் தயாராகும் அதே வேளையில், ஏழை நாடுகளுக்கும் இம்மருந்து தயாரிக்கப்படும் என்கிறார், SERUM இன்ஸ்டிடியூட் நிறுவனர் ஆதர் பூனாவாலா.
(Global Alliance for Vaccines and Immunization )- GAVI என்பது உலக சுகாதார அமைப்பு, யுனிசெப், உலக வங்கி, பில்கேட்ஸ் அறக்கட்டளை என பல சக்தி வாய்ந்த அமைப்புகள் ஒன்றிணைந்து உருவாக்கிய ஒரு கூட்டமைப்பு. இதன் நோக்கம் வளமான நாடு, ஏழை நாடு, நட்பு நாடு, எதிரி நாடு என எந்த வித பாரபட்சமும் இன்றி எல்லா நாடுகளுக்கும், அதன் மக்களுக்கும் தடுப்பு மருந்துகள் சென்று சேர வேண்டும் என்பதுவே.
ஓர் இந்திய நிறுவனம், இருபதாம் நூற்றாண்டின் ஒரு மிக முக்கிய, உயிர் காக்கும் மருந்தை GAVI நாடுகளுக்கும் சேர்த்து தயாரிக்க இருப்பது, ஓர் இந்தியனாய் நமக்கும் பெருமையே.

No comments:

Post a Comment