Friday 31 July 2020

வாழ்வின் சுவை

வாழ்வின் சுவை
எப்போதும் மகிழ்ச்சியோடு இருக்கிறோமா இல்லை எப்போதாவது மகிழ்ச்சியோடு இருக்கிறோமா.
நம்முடைய வாழ்க்கையைக் குறித்தும் வாழ்வது குறித்து நம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பார்வை இருக்கிறது
மூன்று ஞானிகள் ஓரிடத்தில் ஒன்றாக அமர்ந்து இருந்தார்கள். ஒரு ஞானி கண்மூடி அமர்ந்திருப்பார் பேசமாட்டார். இரண்டாவது ஞானி கண்திறந்து அமைதியாக அமர்ந்திருப்பார் எவராவது ஏதாவது கேட்டால் பதில் சொல்வார். மூன்றாமவரோ சிரித்தபடி இருப்பார் மிக இயல்பாக இருப்பார் தாம் சொல்வதே சரி என்று எவரிடமும் வாதிட மாட்டார் ஆனால் முகத்தில் மாறாத சிரிப்பு.
ஒருநாள் அவர்களுக்கு முன்னாள் ஒரு தேவதை தோன்றியது. அதன் கையில் அழகான கிண்ணம். கிண்ணம் நிறைய அருமையான பழச்சாறு.
முதல் ஞானி கண் மூடி அமர்ந்திருந்தார் தேவதை ஒருத்தி வந்திருக்கிறாள் என்பதை தன் ஞானத்தால் அறிந்து கொண்டார். இரண்டாவது ஞானி தேவதையை பார்த்தார். அதன் கையில் இருந்த கிண்ணத்தையும் பார்த்தார் ஆனால் எதுவும் கேட்கவில்லை.
சிரித்தபடி அமர்ந்திருந்த மூன்றாவது ஞானியோ தேவதையை பார்த்து கேட்டார் தேவதையே கையில் என்ன கிண்ணம். அதில் என்ன இருக்கிறது?
தேவதை கூறியது ஐயா ஞானிகளே இந்த கிண்ணம் நிறைய *வாழ்க்கை என்கிற பழச்சாறு* நிரம்ப இருக்கிறது சுவைத்துப் பாருங்கள் என்றது.
கண் மூடியே அமர்ந்திருந்த முதல் ஞானி சட்டென்று பேசினார்
முதலில் இதை எடுத்துக் கொண்டு போய் விடு. இதன் வாடையே எனக்கு பிடிக்காது. வாழ்க்கை என்றாலே எத்தனை வேதனை இதல் பழச்சாராம் கொஞ்சம் அருந்தினாலும் போதும் மீண்டும் மீண்டும் நான் பிறந்து துன்பப்பட வேண்டும் போ போ போய் விடு என்றார்.
தேவதை சிரித்துக்கொண்டே இரண்டாவது ஞானியை பார்த்தது. நீங்களாவது சுவைத்துப் பாருங்கள் என்றது. இரண்டாவது ஞானி சொன்னார் என்ன இது அவர் நீ கொண்டு வந்த பழச்சாறு ஒரு துளியை கூட சுவைத்து பார்க்காமல் இப்படி சொல்லிவிட்டாரே நான் அப்படி இல்லை பொறு நான் சுவைத்து பார்த்து விட்டு சொல்கிறேன். தேவதை கொடுத்த பழச்சாற்றை
ஒரு வாய் குடித்தார். மறுநொடி அப்படியே துப்பி விட்டார். அப்பப்பா என்ன கசப்பு என்ன கசப்பு இதை எப்படி சுவைத்துக் குடிக்க சொல்கிறாய். அவர் சொன்னது சரிதான் போல இருக்கிறது வாழ்க்கை என்றாலே முடிவில் கசப்புதான் போலிருக்கிறது என்றார்.
இப்பொழுது தேவதை மூன்றாவது ஞானியை பார்த்தது. அவர் சிரித்தபடியே அமர்ந்து இருந்தார் அவர் முன் கிண்ணத்தை நீட்டியது எதுவும் பேசவில்லை.
ஞானியின் பார்த்தார் கிண்ணத்தை எடுத்தார் பழச்சாற்றை மடமடவென்று குடித்து விட்டு கிண்ணத்தை வைத்தார். அப்புறம் பரவசமும் மகிழ்ச்சியும் ஆனந்தமுமாக வாய்விட்டு சிரித்துக் கொண்டிருந்தார்.
மற்ற இரண்டு ஞானிகளுக்கும் வியப்பு என்ன இது எந்தக் கருத்தையும் சொல்லாமல் நீங்கள் சிரித்துக் கொண்டிருக்கிறீர்களே என்றார்கள்.
அதற்கு மூன்றாவது ஞானி சொன்னார் கருத்து சொல்ல இதிலென்ன இருக்கிறது. வாழ்க்கை என்கிற பழச்சாற்றை அப்படியே குடித்து விட வேண்டியதுதானே. அப்போதுதான் அதன் முழு சுவையும் தெரியும் அந்த சுவையை நான் உங்களுக்கு எப்படி உணர்த்த முடியும். உங்களில் ஒருவர் ஒரு துளி பழச்சாற்றை கூட சுவைக்கவில்லை. இன்னொருவரோ ஒரு வாய் குடித்துவிட்டு முழு சாரமும் இப்படித்தான் இருக்கும் என்று முடிவு கட்டிவிட்டார். நான் முழுவதும் குடித்தேன் என்ன சுவை என்பது எனக்கு தானே தெரியும். நான் தானே அதை உணர்ந்தவர். நீங்கள் அதை உணர வேண்டுமென்றால் முதலில் பழச்சாற்றை முழுவதும் குடிக்க வேண்டும் என்றார்.
நம்மில் பல பேர் அந்த முதலிரண்டு ஞானிகளைப் போல தான் வாழ்க்கையை பார்க்கிறோம். எதையும் நாம் முழுமையாக அனுபவித்து பார்ப்பதில்லை. மகரயாழ் வாழ்க்கையை முழுமையாக அப்படியே ஏற்றுக்கொண்டு வாழ்கிற பொழுது அதன் சுவையை நாம் அறிய முடியும் சொற்களால் விளக்க முடியாத அந்த அற்புதத்தை வாழ்ந்து தான் அனுபவிக்க முடியும்.
சுவாமி விவேகானந்தர் ஒருமுறை இவ்வாறு குறிப்பிட்டார் *இந்த உலகம் நல்லதோ அல்லது கெட்டதோ அல்ல ஒவ்வொருவரும் தங்களுக்கான உலகத்தை தாங்களே உருவாக்கிக் கொள்கிறார்கள்.* இது உண்மைதான் ஒவ்வொருவரும் அவரவருக்கான உலகத்தையும் வாழ்க்கையையும் அவர் அவர்களை உருவாக்கிக்கொள்ள முடியும்.

No comments:

Post a Comment