Monday 20 July 2020

ஸ்டாலினால் மறுக்க முடியுமா..?

ஸ்டாலினால் மறுக்க முடியுமா..?
தமிழக சட்ட அமைச்சர் சி.வி. சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கை:நேற்று, தமிழக காவல்துறை முழுமையாக அரசியல் மயமாக்கப்பட்டுவிட்டதாகவும், சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டதாகவும் குற்றம் சுமத்தி இருக்கிறார் ஸ்டாலின்.இது உண்மைக்கு மாறானது, உள்நோக்கம் கொண்டது. கொங்கு தமிழ் பேசும் கோவை பூமியில் தொடர் குண்டு வெடிப்புகளை நிகழவிட்டு, 1965 மொழிப் போராட்டத்திற்கு பிறகு ராணுவம் வந்து கலவரத்தை அடக்கியதும், அக்கலவரத்தில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்த சோகம் நடைபெற்றதும் திமுக ஆட்சியில் தான்.
சிவகங்கையில், திமுகவின் உட்கட்சி விவகாரத்தில் நகர்மன்ற தலைவர் முருகன் என்பவர் திமுக கட்சி பிரமுகரால் கார் குண்டு வைத்து படுகொலை செய்யப்பட்ட நிகழ்வும் திமுக ஆட்சியில் தான் நடந்தது. சரம் சரமாய் நடத்தப்பட்ட ஆதாயக் குற்றங்களும், சைக்கோ கொலைகளும், குறிப்பாக வாரிசு இல்லாத முதியோர்களின் சொத்துக்களை குறிவைத்து ஏராளமாய் நிகழ்ந்த, நடத்தப்பட்ட படுகொலைகளும் திமுக ஆட்சியில் தாராளமாய் நடந்தது. இதற்கு ஒரு பதச்சோற்று சான்று, சென்னை அசோக் நகரில் முன்னாள் டாமின் சேர்மேன் சரவணன், அவரது மனைவி மற்றும் வேலைக்கார பெண் மூவரும் சொத்துக்காக படுகொலை செய்யப்பட்டதாகும்.
அதுபோலவே திமுக தலைமையின் குடும்ப அரசியலுக்கு பலிபீடம் ஏற்றப்பட்ட தா. கிருட்டிணன் மரணம், அரசியல் போட்டியில் நடத்தப்பட்ட லீலாவதி படுகொலை, சிவகங்கை மாவட்டம், தேவகோடையில் நடந்த ரூசோ கொலை என்றெல்லாம் திமுக ஆட்சி காலத்தின் சட்டம் ஒழுங்குச் சீரழிவை பட்டியலிட தொடங்கினால் அதற்கு பக்கங்கள் போதாது, போதாது.
இவ்வளவு ஏன் சட்டம் ஒழுங்கை சீரழித்த குற்றத்திற்காக மத்திய அரசால் டிஸ்மிஸ் செய்யப்பட்ட ஒரே ஆட்சியும், திமுக ஆட்சிதான் என்பதும் வரலாறு. இப்போது கூட தமிழகத்தில் எங்கேனும் ஒன்றாக நடைபெறும் முகம் சுளிக்க வைக்கும் குற்ற சம்பவங்களின் பின்னணிகள் அனைத்திலும் திமுவினர்தான் முன்னணியில் இருக்கிறார்கள்
இதற்கு காஞ்சிபுரம் மாவட்டம், திருப்போரூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் இதயவர்மன், பொதுமக்கள் மீது நடத்திய கொலைவெறி துப்பாக்கி சூடும், அவர் வைத்திருந்த கள்ள துப்பாக்கிகளும், தோட்டாக்களும், தோட்டாக்கள் தயாரிப்பதற்கென்றே அவர் தொழிற்சாலை நடத்தியதும், வெட்கி தலைகுனிய வேண்டிய காரியங்கள். இதை கண்டிக்க திராணி இல்லாதவர்தான் எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின்.
அதுபோலவே செங்கல்பட்டு அருகே இளம்பெண் ஒருவர் தற்கொலைக்கு காரணமான திமுக இளைஞரணி பிரமுகர் தேவேந்திரன், வேலைக்கார சிறுமியை கற்பழித்து கொலை செய்த குற்றத்திற்கு தண்டனை பெற்று சில மாதங்களுக்கு முன்பு சிறைக்கு சென்ற திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராஜ்குமார் போன்றோர், குற்றவாளிகளின் நாற்றங்காலாக திமுக திகழ்கிறது என்பதற்கு சமீபத்திய சாட்சிகள்.
இது மட்டுமல்லாமல் ஓசி பிரியாணிக்கு பாக்ஸிங் போடுவது, பியூட்டி பார்லரில் புகுந்து பெண்ணை அடித்து உதைப்பது, கடப்பா கல்லைக் களவாடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு, நாங்கள் தான் நாளைக்கு ஆட்சிக்கு வரப்போகிறோம் என்று நடக்க சாத்தியம் இல்லாத கற்பனையில் மிதக்கும் திமுகவினர் இப்போதே கொலை, கொள்ளை, அடிதடி என்றெல்லாம் ஒத்திகைகளை தொடங்கி இருப்பதை, மக்கள் உற்று கவனித்துகொண்டுதான் இருக்கிறார்கள், தக்க பாடம் கற்பிப்பார்கள்.
கடந்த திமுக ஆட்சியில் அப்பாவி மக்களை மிரட்டி நிகழ்த்தப்பட்ட நிலம் அபகரிப்புக்கு, ஒரு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்க, நில அபகரிப்பு தடுப்பு சட்டமும், நில அபகரிப்பு சட்ட பிரிவும், இந்தியாவிலேயே முதன் முதலாக ஜெயலலிதாவால் கொண்டுவரப்பட்டது என்பதும், அதன் தொடர்ச்சியாக நில அபகரிப்புகளில் ஈடுபட்ட பெரும்பான்மை திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதும் வரலாற்றின் உண்மை.
சுமார் 12,000-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகி அபகரிக்கப்பட்ட நிலங்கள் மீட்கப்பட்டு, உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டதையும்,உலகம் ஒருபோதும் மறவாது. இதை ஸ்டாலினும் நிராகரிக்க முடியாது.
திமுக தலைவரது குடும்பம், தென்மாவட்டங்களில் கனிமவளங்களை கொள்ளை அடிக்கிறது என்று ஆதாரங்களோடு செய்தி வெளியிட்ட அன்றைய தினபூமி நாளிதழின் ஆசிரியர் மணிமாறனையும், அவரது மகனையும், ஏனென்று கேட்டதற்காக அண்டை வீட்டுக்காரர் கருப்பையாவையும் கை விலங்கு பூட்டி சிறையில் அடைத்த ஆட்சி கடந்த கால திமுக ஆட்சிதான்.
திமுகவின் நெல்லை முன்னாள் மேயர் உமாமகேஸ்வரியையும், அவரது கணவர் மற்றும் வேலைக்கார பெண் உட்பட மூவரையும் படுகொலை செய்த நிகழ்வில், அக்குற்றத்தை செய்தது திமுகவை சேர்ந்த மகளிரணி பிரமுகர் சீனியம்மாளும், அவரது மகனும் தான் என காவல்துறையால் கண்டறியப்பட்டது. இதேபோல தமிழகத்தில் பல பகுதிகளில் திமுகவினர் உட்கட்சி அரசியல் பகையை முன்வைத்து ஆடிவரும் ருத்ரதாண்டவங்களை அடக்க முடியாத ஸ்டாலின், சட்டம் ஒழுங்கை பேணி காக்கும் அரசை குற்றம் சொல்ல உரிமை கிடையாது.
திமுக கிளைக் கழக செயலாளர் மற்றும் திருநின்றவூர், கொசவன்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர், பரமகுரு என்பவர் 14.7.2020 அன்று, அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கி கொலை செய்யப்பட்டார். மக்கள் பணியாற்றிய ஊராட்சி மன்ற தலைவர் பரமகுரு கொலை செய்யப்பட்டதற்கு எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார். காவல்துறை வழக்கு பதிந்து விசாரித்து குற்றவாளிகளை கைது செய்ததில், கொசவன்பாளையம் ஆற்றில் திருட்டு மணல் அள்ளுவதில் ஏற்பட்ட தகராறில் திமுக கட்சியை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் பரமகுரு அவரது கட்சி உறுப்பினர்களால், கொலை செய்யப்பட்ட தகவல் தெரியவந்துள்ளது.
ஸ்டாலினுக்கு தேவை பக்குவ அரசியல்
இச்செய்தி வெளியிடே ஸ்டாலின் சுமத்தும் குற்றச்சாட்டுகள் உண்மைக்கு மாறானது என்பதை மக்களுக்கு புரியவைக்கும். நித்தம், நித்தம் உண்மைக்கு புறம்பான செய்தியை அறிக்கையாக வெளியிட்டு தமிழ்நாட்டு மக்களின் மனதில் நஞ்சை புகுத்த முயற்சிக்கும் மு.க. ஸ்டாலின், அவரது தரம்தாழ்ந்த செயலை ஒதுக்கி வைத்து விட்டு தொற்றுநோய் காலத்தில் பக்குவத்தோடு அரசியல் நடத்த வேண்டும். இவ்வாறு அமைச்சர் சி.வி. சண்முகம் கூறியுள்ளார்.
குறிப்பு;ஸ்டாலினால் மறுக்க முடியுமா..?

No comments:

Post a Comment