Monday 20 July 2020

வேரை இழந்த மரமும், வரலாற்றை மறந்த இனமும் வாழாது! வளராது!!

வேரை இழந்த மரமும், வரலாற்றை மறந்த இனமும் வாழாது! வளராது!!
ஐப்பசி சதயம் ராஜராஜ சோழனுக்கு என்றால் ஆடி திருவாதிரை ராஜேந்திரனுக்கானது. நேற்று ஆடி திருவாதிரை. ஆனால் அவனை கொண்டாட யாருமில்லை.
ஆம், ராஜராஜனை விட பலமடங்கு வெற்றிகளை குவித்தவன் ராஜேந்திரன். ராஜராஜனின் அரசு தஞ்சையிலும் ஈழத்திலுமே இருந்தது, அதை கலிங்கம், சாளுக்கியம் வங்கம் கடல்தாண்டி கடாராம், கம்போடியா வியட்நாம், சுமத்ரா என எங்கெல்லாமோ விரிவாக்கி வைத்திருந்தான் ராஜேந்திரன்.
நிச்சயம் சரித்திரத்தின் சீசருக்கும், செங்கிஸ்கானுக்கும் இணையான அரசன் அவன். இன்னொரு இனத்தில் பிறந்திருந்தால் கொண்டாடி தீர்த்திருப்பார்கள். ஆனால் தமிழினத்தில் பிறந்ததால் மறைக்கப்பட்டான்.
அவன் தஞ்சையை போலவே கங்கை கொண்ட சோழபுரத்தை உருவாக்கி மாபெரும் ஆலயத்தை கட்டினான், காவிரிக்கு இப்பக்கம் தகப்பன் கட்டியது போல, காவிரிக்கு அப்பக்கம் அதைக் கட்டி சிவ பக்தியின் உச்சத்தில் நின்றான். ஒருவகையில் ராஜராஜனின் இந்து ஆலய பணி சால சிறந்தது, அவன் கட்டிய கோவில்கள் ஏராளம்.
குறிப்பாக திருகாளத்தி எனும் தலத்தின் பெரும் கோவில் அவனால் கட்டபட்டது, அது தகப்பன் ராஜ ராஜன் புகட்டிய கண்ணப்ப நாயனாரின் பக்தியால் வந்தது.
பிலிப்புக்கு பின் அலெக்ஸாண்டர் மாபெரும் சாம்ராஜ்யம் அமைத்தது போல், செங்கிஸ்கானுக்கு பின்னால் குப்ளேகான் உலகை மிரட்டியது போல் பெரும் வரலாறு கொண்டவன் ராஜேந்திரன்.
வீர சிவாஜியின் இந்து மத காவல் சாயலும் ராஜேந்திரனிடம் இருந்தது, சிவாஜிக்கு அரசியலில் ராஜேந்திரனே முன்னோடி.
அவன் காலத்தில் கங்கை கொண்ட சோழபுரம் கிழக்கு ஆசியாவின் தலைநகராய் விளங்கிற்று, இந்த கண்டத்தின் அமைதியும் போரையும் அந்த ஊர்தான் முடிவு செய்தது.
இதுபற்றிய கல்வெட்டும் படமும் சுதை சிற்பமும் ஏராளம் கங்கை கொண்ட சோழபுரத்தில் இருந்தன, பின் வெள்ளையன் காவிரி கரையினை பலபடுத்த கல் வேண்டி அவற்றை அடித்து உடைத்து காவிரி கரைகளில் படியாகவும் ஆற்றுக்கல்லாகவும் புதைத்தான்.
ராஜேந்திரனின் மிகப்பெரும் வாழ்வின் ஆவணம் காவிரிக் கரை படிகளாக அலைக்கல்லாக மாறிவிட்டது வரலாற்று சோகம்.
தமிழனை ஒழிக்க ஆலயங்களை குறிவைத்தான் வெள்ளையன். திருசெந்தூர் ஆலயம் முதல் தஞ்சை ஆலயம் வரை வெள்ளையனின் ஆயுத குடோன்களாக இருந்த காலமும் உண்டு, அப்படி பாழ்பட்ட நிலையில்தான் சோழபுரம் ஆலயமும் சிதைவுற்றது.
ஆனாலும் தீக்குச்சியில் ஒரு குச்சி விளக்கேற்றும் என்பது போல எஞ்சியிருக்கும் கல்வெட்டுகளே ராஜேந்திரனின் வரலாற்றை நமக்கு இன்று சொல்கின்றன‌.அதை எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும், அவனின் வரலாற்றை மீட்டெடுத்தால் தமிழ்நாட்டில் இருந்த சைவ சமயப் பெருமையும் ஆளுமையும் வெளிவரும்.
மாமன்னன் ராஜேந்திர சோழன் போற்றி வணங்கபட வேண்டியவன், தமிழனின் பெருமையும் சைவ சமயத்தின் அருமையும் அவனோடு தூங்கி கொண்டிருக்கின்றன‌.
அவனை மீட்டெடுத்து முன்னிலைப்படுத்தல் வேண்டும். ஆடித் திருவாதிரைக்கு அவனுக்கு அஞ்சலி செலுத்த மறந்த நாம், இன்று ஆடி அமாவாசையன்று தமிழகத்தின் தனிப்பெரும் சக்கரவர்த்திக்கு தர்ப்பணம் கொடுத்து நினைவு கூறல் வேண்டும்.
ஆம், அவசியம் செய்தாக வேண்டும், அவன் மீண்டெழுந்தால் சைவ சமயம் தானாய் மீண்டெழும்.சோழன் மட்டுமல்ல, பாண்டிய நாட்டு சுந்தர பாண்டிய சோழனின் ஆலயப் பணிகளும் கொஞ்சநஞ்சமல்ல‌.
ராஜராஜனுக்கும் ராஜேந்திரனுக்கும் கொஞ்சமும் குறையாத சமயப் பணி அவனுடையது, இவர்களுக்காவது நாள் நட்சத்திரமுண்டு, அவனுக்கு அதுவுமில்லை.இங்கு தேடி மீட்டெடுக்க வேண்டிய விளக்குகள் ஏராளம், அதை மீட்டெடுத்து ஜோதி ஏற்றினாலே போதும், காரிருள் விலகும்.நாம் இனி அதைத்தான் செய்ய வேண்டும், நிச்சயம் செய்தாக வேண்டும்.
அதை ராஜேந்திர சோழனை தொழுதுவிட்டு தொடங்கலாம், கருப்பு பேரரசனாய் சிவ பக்தனாய் ஆசியாவினை ஆட்டி வைத்து சமயக் காவலனாய் நின்ற அவனைத் தொழுது நிற்போம்..!
வேதங்களையும் அவற்றின் அடிநாதங்களையும் காத்து நின்ற பெருமகன்.
ஆம், அவன் கல்வெட்டில் இப்படி சொல்கின்றான் 'காலவோட்டத்தில் நம் சமயமும் இவ்வாலயமும் பழுதுபடுமாயின் அதை மீட்டெடுக்க உதவுபவர்களின் காலில் விழுந்து நான் வணங்குகின்றேன்' 'எவ்வளவு பக்தியும் உருக்கமும் இருந்தால் ஒரு சக்கரவர்த்தி இப்படி எழுதியிருப்பான், அவன் நம் காலில் விழவேண்டியது அல்ல, அரூபியாய் அவன் நம்மை வாழ்த்தும்படி வரலாற்றை தோண்டியெடுத்து விளக்கேற்றுவோம்.!
சிவபெருமான் நம் எல்லோரையும் வழிநடத்துவார், ராஜராஜனுக்கு கொடுத்த வாய்ப்பினை நம் ஒவ்வொருவருக்கும் தருவார், அதில் தர்மத்தை மீட்டெடுத்து ஒளியேற்றுவோம்..!
நன்றி தி.சதானந்தன்.
குறிப்பு; தமிழகத்தில் வீதிக்கி வீதி எவன் எவனுக்கோ சிலைகள் உண்டு.வீதிகளுக்கு எல்லாம் எவன் எவன் பெயரோ உண்டு. ஆனால்..?கிழக்கு ஆசியா கண்டைத்தையே ஆண்ட தமிழனுக்கு..?
பல ஆயிரம் ஆண்டுக்கு மூத்த நீண்ட நெடிய வரலாற்றுப் பெருமைக்கொண்ட தமிழர் இனம், திராவிடர் ஆட்சிகளால் ஐம்பது ஆண்டுக்குள் குறுக்கப்பட்டுள்ளதை மீட்டெடுக்க வேண்டும்.
அதிலிருந்து மீள்வதற்கு நமது இனவரலாறு, நமது முன்னோர்களுடைய வீரம் செறிந்த போராட்டங்கள், ஆட்சிமுறை, அவர்களுடைய ஒழுக்கம், அவர்களுடைய செயலாண்மைத் திறன் போன்றவற்றை அறிந்து தெரிந்து கொள்வதற்காக நமது பிள்ளைகளுக்குப் பாடமாக வைக்கப்பட வேண்டும்.
உலகின் முதற் கப்பற்படை அமைத்த சோழப் பேரரசர் மாமன்னர் ராஜேந்திர சோழன் நினைவைப் போற்றும் வகையில் 2016 மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசு மும்பை மேஸகான் டாக் ( Mazagon Dock ) கப்பல் கட்டும் தளத்தில் அவரது படத்தை திறந்து வைத்து பெருமை சேர்த்தது மற்றும் பாரதப் பிரதமர் மோடி அவர்கள் உலகில் முதல் கப்பல் படையை அமைத்த மாபெரும் மன்னர் ராஜேந்திர சோழன் என்பதை தனது பேச்சில் இருமுறை உலகிற்கு தெரிவித்து மாமன்னர் க்கு மேலும் பெருமை சேர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இத்தனை ஆண்டுகள் தமிழகத்தில் ஆட்சி செய்த திராவிட கட்சிகள்,மத்தியில் கூட்டாட்சி செய்தபோதும் கப்பல் போக்குவரத்து துறையை பெற்று கொள்ளையடிக்கத்தான் போராடி பெற்றார்களே ஒழிய, உலகில் முதல் கப்பல்படையை அமைத்த நம் தமிழனை மறந்துவிட்டார்கள். மறைத்துவிட்டார்கள்.
வரலாறு என்பது கடந்த காலச் செய்திகளைச் சேமித்து வைக்கும் ஏடல்ல; அது நிகழ்காலத்திற்கான அடித்தளமும் எதிர்காலத்திற்கான உயிர்த்தொடர்பும்!
வரலாற்றில் தெளிவு பெறாத எந்த இனமும் எழுச்சி பெறமுடியாது!
வேரை இழந்த மரமும், வரலாற்றை மறந்த இனமும் வாழாது! வளராது.
நன்றி ராஜப்பா தஞ்சை



No comments:

Post a Comment