Thursday 31 August 2023

கேட்பவரும் பேசுபவரும் . .

 கேட்பவரும் பேசுபவரும் . .

உலகம் பல்வேறு பண்புகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது.
ஒளியும் இருளும் கலந்தது, இன்பமும் துன்பமும் கலந்தது, மேடும் பள்ளமும் நிறைந்தது.
இதுபோன்றே பேசும்
சொற்களில் நல்லவையும் உண்டு தீயவையும் உண்டு.
எப்போதும் ஒருவர் பேசும் சொற்கள் நன்மை விளைவிக்க வேண்டும். அதேவேளை பேசும் சொற்கள் இனிமையானதாகவும் இருக்க வேண்டும். இனிமை பயக்கும் நல்ல சொற்களையே எல்லோரிடத்திலும் பேச வேண்டும்.
கொடுப்பதைக் காட்டிலும் இனிமையான சொற்களைப் பேசுதல் சிறந்தது. இனிமையான சொற்கள்தான் நன்மையைத் தரும். இன்முகத்துடன் பேசும் சொற்களில்தான் பயன் அதிகமாக இருக்கும்.
இன்சொல்லானது கேட்பவருக்கு மகிழ்ச்சியைத் தருகின்றது.
உறவுகளை வலுப்படுத்துகின்றது.
நன்நடத்தையை அதிகரிக்கச் செய்கின்றது.
மற்றவர்கள் முன்னிலையில் மதிப்பையும் நல்லெண்ணத்தையும் ஏற்படுத்தித் தருகின்றது.
இன்சொல் பேசும் பண்புநலத்தின் சிறப்பை விளக்கவென்றே
*“இனியவை கூறல்”* என்றொரு தனி அதிகாரத்தைப் படைத்திருக்கிறார் வள்ளுவர்.
*“இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம்*
*செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்”*
செம்மையான பொருளை அறிந்தவர்களின் வாய்ச் சொற்கள், இனிய சொற்களாய், அன்பு கலந்ததாய், வஞ்சம் இல்லாததாய் இருக்கும்.
*“இனிய உளவாக இன்னாத கூறல்* *கனியிருப்பக் காய் கவர்ந்தற்று”*
இனிமையான சொற்கள் இருக்கும்போது கடுமையான சொற்களைப் பேசுவது என்பது ஒரு மரத்தில் உண்பதற்கு நல்ல கனிகள் இருக்கும் போது அதனை உண்ணாமல் அந்த மரத்திலுள்ள காய்களை உண்பதற்குச் சமனானது என்கின்றார் வள்ளுவர்.
*“அகன் அமர்ந்து ஈதலின் நன்றே* *முகனமர்ந்து இன்சொலன் ஆகப் பெறின்”*
யாருக்கும் நீங்கள் பொருளை வாரித் தந்து அவர்களை மகிழ்ச்சி அடையச் செய்ய வேண்டாம்.
அதை விட உயர்ந்தது,
இனிமையாக அவர்களிடம் நான்கு வார்த்தை பேசுவதுதான் என்று தீர்ப்புச் சொல்கிறது வள்ளுவம்.
*“முகத்தான் அமர்ந்து இனிதுநோக்கி அகத்தானாம்*
*இன்சொ லினதே அறம்”*
முகம் மகிழ்ந்து உள்ளத்தில் இருந்து இனிமையான சொற்களைப் பேசுதலே சிறந்த அறமாகும் என்று வள்ளுவர் கூறியுள்ளார்.
*எனவே எப்போதும் அன்பாக
இனிய சொற்களைப் பேச வேண்டும். இதுவே கேட்பவருக்கு மட்டுமன்றி பேசுபவர்களுக்கும் நன்மையைத் தரும்.*

No comments:

Post a Comment