Monday 21 August 2023

தடைகள் தவிடு பொடியாகும்.

 தடைகள் தவிடு பொடியாகும்.

வாழ்க்கையில்
ஒவ்வொருவரும் மகிழ்ச்சியைத்தான் எதிர்பார்க்கிறார்கள்.
ஆனால் அதை அடைய முடியாமல் எப்படித் தள்ளாடுகிறார்கள்.
ஒருவர் மகிழ்வடைவதற்கும் அதை இழக்காமல் இருப்பதற்கும் அவருடைய மனநிலையும், அதில் உருவாகும் எண்ணங்களுமே முக்கிய காரணமாகின்றன.
வாழ்க்கையில் என்னென்ன நடந்தது என்பதைவிட, நடந்த சம்பவங்களை எப்படி மனம் ஏற்றுக்கொண்டது என்பதுதான் மிக முக்கியம். அதில் தான் திறமைசாலிகள் வித்தியாசப்படுகிறார்கள்.
ஒரு இளைஞர் தான் எதிர்பார்த்த மரியாதைகளை மற்றவர்கள் கொடுக்கவில்லை என மனம் உடைந்து தற்கொலை செய்துகொண்டார். தன்னுடைய கழுத்தில் போட்டிருந்த ஐந்து பவுன் தங்க நகையை வழிப்பறி செய்ததால், பயந்து பயந்து அந்த கவலையிலேயே வாழ்கிறார் ஒரு பெண்மணி.
நண்பன் தன்னை நம்பிக்கை மோசடி செய்துவிட்டான் என்பதை நினைக்கும் போதெல்லாம் மனங்கொதிப்படைந்து, செயலற்றுப்போனவர் ஒரு பெரியவர்.
நடந்த சம்பவங்களெல்லாம் உண்மைதான். ஆனால் அந்த சம்பவங்களால், இவர்கள் தன் சொந்த வீட்டை சிறையாக்கி, தன்னையே கைதியாக்கி வாழும் அடிமைகள் ஆனார்கள்.
வேறு சிலரைப் பார்க்கலாம். தான் வாடகைக்கு நடத்தி வந்த உணவு விடுதியை, அதன் சொந்தக்காரர் காலி செய்யச் சொல்கிறார். உடனே ஒரு முடிவை எடுத்து, சொந்த இடத்தில் பெரிய ஹோட்டல் நிறுவினார் கோவை அன்னபூர்ணா உரிமையாளர் அவர்கள். தனக்கு அன்றைக்கு ஏற்பட்ட சிக்கலும் சீரான வாழ்வில் ஏற்பட்ட இடையூறும் தான் இன்றைக்கு மரியாதைக்குரிய நிறுவனமாவதற்கான காரணமாக இருக்கிறது என்கிறார்.
சீட்டுக்கம்பெனி நடத்தியதில், பங்குதாரர் தன்னுடைய பங்கினை ஏமாற்றியதால், புதியதாக ஒரு நிறுவனத்தை நிறுவி இன்று வெற்றியுடன் நடத்துகிறார் ஒரு நண்பர்.
மருத்துவக்கல்வியில் இறுதி ஆண்டில் அந்த மாணவன் விரும்பிப் படித்த பாடத்தில் தோல்வியாக்கினார்கள். அதே பாடத்தில் உயர்படிப்பும் முடித்து அந்த துறையின் பேராசிரியரும் இயக்குனரும் ஆனார் ஒரு டாக்டர்.
இவர்களெல்லாம் தமக்கு நடந்த வாழ்க்கை நிகழ்ச்சிகளை கையாண்ட விதங்கள், உயர்ந்த எண்ணங்கள் இவைகள் தான் உயர்வைக் கொடுத்தன.
பொதுவாக மனிதனின் மனோபாவங்கள் தான் அவனுடைய மகிழ்ச்சிக்குக் காரணமாகவும், சில சமயங்களில் தடையாகவும் அமைகின்றன.

No comments:

Post a Comment