Saturday 5 August 2023

மூன்று சொற்கள்.

 மூன்று சொற்கள்.

நள்ளிரவு நேரத்தில்
தனியாகத் தொடர் வண்டியில் வந்து இறங்குகிறாள் ஓர் இளம்பெண்.
அந்த ரயில் நிலையத்தில், தொடர் வண்டியில் சிலர் ஏறினார்களே தவிர, அவளைத்தவிர வேறு எவரும் இறங்கவில்லை. சில கிலோமீட்டர் தொலைவில் அவளது கிராமம் இருந்தது. எப்படித் தனியாகப் போவது என்று மிகக் கவலைப்பட்டாள் அவள்.
வெளியே வந்து பார்த்தால், ஒரு வண்டியும் காணவில்லை. அச்சமும் கவலையும் மனத்தை ஒரு சேர அழுத்திய கணத்தில், 'வீட்டுக்கா அம்மா' என்று குரல் கேட்டது. அதிர்ந்து திரும்பிப் பார்த்தாள். அவளது கிராமத்தைச் சேர்ந்த ஒரு முதியவர் நின்றிருந்தார்.
'நம்ம ஊரிலிருந்து ரயிலேற வந்த ரெண்டு பேர கூட்டிக்கொண்டு வந்தேன்.
வாங்கம்மா.
என் மாட்டு வண்டியிலேயே போயிடலாம். என்று அழைத்தார் அவர். அவளுக்குப் போன உயிர் திரும்பி வந்ததைப் போல இருந்தது. வழித் துணைக்கு ஆள் கிடைத்த நிம்மதி.
எந்தக் காலத்திலும் மாட்டு வண்டியில் ஏறாதவளுக்கு, அந்தப் பயணம் அவ்வளவு மகிழ்ச்சியானதாக இருந்தது. வேண்டாம் என்று சொன்னாலும், இந்தப் பெரியவருக்கு நூறு ரூபாய் கொடுத்துவிட வேண்டும் என்று எண்ணிக் கொண்டாள்.
ஒரு கிலோ மீட்டர் தூரம் வண்டி போனதும், 'நூறு ரூபாய் அதிகம். ஐம்பது ரூபாய் கொடுக்கலாம்' என்று எண்ணிக்கொண்டாள். இன்னும் கொஞ்சம் தூரம் போனதும், 'மாட்டு வண்டிக்குப் பத்து ரூபாய் போதாதா. என்று தன்னையே கேட்டுக் கொண்டாள்.
வீட்டை நெருங்கும் நேரத்தில், "எப்படி இருந்தாலும் வண்டி ஊருக்குத் திரும்பியிருக்கும். வெறும் வண்டியாய் திரும்பும் வண்டியில்தானே வந்தேன்.. எதற்குப் பணம் தர வேண்டும்
நன்றி சொல்லி விடலாம்" என்று எண்ணிக்கொண்டாள். வீட்டில் இறங்கும்போது, 'சரி தாத்தா... மாட்டு வண்டியில் இதுவரை போனதே இல்லை. அதுதான் முதுகெல்லாம் வலிக்கிறது..' என்று குறை சொல்லி விட்டு வீட்டுக்குள் நுழைந்தாள். ஒரு நன்றி கூடச் சொல்லவில்லை.
நன்றியைக்கூட உரிய நேரத்தில், உரிய முறையில் வெளிப்படுத்தத் தவறும் மனிதர்களின் பொதுவான மனநிலையை, அப்படியே படம் பிடித்துக் காட்டியிருந்தது இந்தக் கதை.
*'நன்றி',
'மன்னிக்கவும்',
'தயவுடன்'*
இந்தச் சொற்களைப் பயன்படுத்தினாலே,
நமது சுயமரியாதைக்கு இழுக்கு வருவதாக நாம் எண்ணிக் கொள்கிறோம்.
ஆனால் இந்த மூன்று சொற்களை சரியான
இடங்களில், போலியில்லாமல்
உளப்பூர்வமாகப் பயன் படுத்துபவர்கள், எல்லோராலும் நேசிக்கப் படுகிறார்கள்.

No comments:

Post a Comment