Friday 25 August 2023

நிதானம் நிம்மதி . .

 நிதானம் நிம்மதி . .

இன்றைய காலசூழலில் எங்கும் அவசரம் எதிலும் அவசரம்.
எல்லாம் அவசரம் என்று
அவசர மயமாகி விட்டதை
நாளும் நாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம்.
அர்ஜன்ட் (Urgent) என்கிற வார்த்தையை அதிகமாக நாளும் நடைமுறையில் நாம் சொல்லி வருகிறோம். பெரும்பாலும் சாதாரணமாக இந்த வார்த்தையை உபயோகித்தாலும் காலப்போக்கில் நவீனங்கள் தலைதூக்கிய பிறகு இன்றைய நிலையில் இந்த வார்த்தை உயிர்பெற்று தற்போதைய வாழ்க்கை முறையாவும் அவசரமாகவே ஆகிவிட்டது என்பதே உண்மை.
இப்படி அவசரத்தால் செய்யும் செயல்களும் அவசரப் போக்காலும் எதையும் நாம் பெரிதாக சாதிக்கப் போவதில்லை. மாறாக பல இழப்புக்களையே சந்திக்க வேண்டியுள்ளது.
*அவசியத்திற்கு அவசரப்படுவதை ஏற்றுக் கொள்ளும்படி இருந்தாலும்,*
*அதிகபட்சமாக அவசியம் இல்லாதவைகளுக்கெல்லாம் ஏன் அவசரப்படுகிறோம் என்று யாரும் ஆலோசிப்பதில்லை.*
அதிகமாக அவசரப்படுவதால்
சில எளிதாக செய்ய வேண்டிய அலுவலகச் செயல்கள் கூட அதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாகி இன்னும் காலதாமதமாகிப் போய்விடுகிறது.
ஆகையால் அவசரத்தால் அதிகமாக ஏதாவது ஒரு வகையில் இழப்புக்களையே சந்திக்க நேரிடுகிறது. இன்னும் சொல்லப்போனால் பின் விளைவுகளை ஆலோசிக்காமல் அவசரப்பட்டு முடிவு எடுப்பதாலும் அவசரப்பட்டு வார்த்தைகளை அள்ளி வீசி விடுவதாலும் உறவுகளையும் நல்ல நட்புக்களையும் இழந்துவிட நேரிடுகிறது.
அப்படியானால் எல்லாம்
அவசரத்தால் வரும் இழப்புக்கள்தானே.
*நாம் எதிலும் அவசரப்பட்டு இழப்புக்களைச் சந்திக்காமல் நிதானமாகச் செயல்பட்டு நிம்மதியாக வாழ கற்றுக் கொள்ள வேண்டும்.*
*அவசரத்தின் தடுமாற்றத்தால்
தவறுகள் ஏற்படுவதைத் தவிர்க்க பொறுமையைக் கடைப்பிடித்து அமைதியுடன், மகிழ்வுடன் வாழ வழி வகுத்துக் கொள்வோம்.*

No comments:

Post a Comment