Monday 28 August 2023

சிவபெருமான் பிட்டுக்கு மண் சுமந்த திருநாள்

 சிவபெருமான்

பிட்டுக்கு மண் சுமந்த திருநாள்
ஆவணி மூலம் சிவபெருமானுக்கு உகந்த நாளாகும். அன்றைய தினம் சிவாலயங்கள் தோறும் பிட்டுக்கு மண் சுமந்த திருநாளைக் கொண்டாடுவர். அதில் கலந்து கொண்டு வழிபாடு செய்தால் உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கும்.
இறைவனே வேலை பார்த்து சம்பளம் வாங்கிய நாள் என்பதால் உத்தியோகத்தில் பிரச்சினை இருப்பவர்கள் அன்றைய தினம் உள்ளன்போடு சிவபெருமானை வழிபட்டால் எதிர்ப்புகள் அகன்று இனிய வாழ்க்கை அமையும். மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படும் இந்த ஆவணிமூல வழிபாட்டில் கலந்து கொண்டால் மூல நட்சத்திர தோஷங்கள் விலகி ஓடும். முன்னேற்றங்கள் வந்து சேரும். மூல நட்சத்திரத்தில் பிறந்த ஆண், பெண் இருபாலரும் அவசியம் இந்த விழாவில் கலந்து கொள்வது நல்லது.
இந்த ஆவணி மூலத்தில் சிவகங்கை மாவட்டம் கீழச்சிவல்பட்டியில் மீனாட்சி- சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் வெள்ளிக் கூடையில், மண்வெட்டி வைத்து சிவபெருமான் புட்டு சுமந்து வருவது போல நகரத்தார்கள் சிறப்பாக விழாக் கொண்டாடி வருகிறார்கள். இதே போல எண்ணற்ற சிவாலயங்களிலும் புட்டுக்கு மண் சுமந்த விழா கொண்டாடப்படுகின்றது. அதில் இறைவன் தலையில் சுமந்த புட்டு உணவை மக்களுக்கு வழங்குவர். மூல நட்சத்திரத்தில் சிவனை வழிபட்டால் ஞாலம் போற்றும் வாழ்க்கை அமையும்.
பிட்டுக்கு மண் சுமந்த கதை
முன்னைய காலத்தில் பாண்டிய நாட்டை அரிமர்தனபாண்டியன் என்ற மன்னன் ஆட்சி புரிந்து வந்தான். அவன் சிவபெருமானிடம் மிகுந்த பக்தியுடையவன். இவன் நீதியுடனும் நேர்மையுடனும் ஆட்சி செய்து வந்தான். இவ்வாறு சிறப்பாக ஆட்சி செய்து கொண்டிருக்கும் போது, சிவபெருமான் இவனது ஆட்சியில் திருவிளையாடல் ஒன்றைப் புரிவதற்கு விரும்பினார்.
இத் திருவிளையாடலின் விளைவாக பாண்டி நாட்டிலே பெருமழை பெய்தது. அதனால் வைகை ஆறானது பெருக்கெடுத்து ஓடியது. ஆற்றின் கரைகள் உடைத்துச் செல்லும் அளவிற்கு வெள்ளம் பெருக்கெடுத்தது. மக்கள் எல்லோரும் பயந்து தங்கள் அரசனின் அரண்மனைக்கு ஓடினார்கள். தங்கள் அவல நிலையை மன்னனிடம் முறையிட்டனர்.
அரசனும் மக்களே பயப்பட வேண்டாம், ஆற்றின் கரை உடையாமலும், வெள்ளம் பெருகாமலும் இருக்க அணைகட்டுவோம் என்று மக்களுக்கு உறுதி அளித்தான். எனவே ஆற்றுக்கு அணைகட்ட எல்லோரும் வாருங்கள்என்று குடி மக்களை அழைத்தான்.எல்லோரும் அளந்து விட்டபடி உங்கள் பகுதியில் அணையைக்கட்டுங்கள் என்று மக்களுக்கு உத்தரவிட்டான். அவனது உத்தரவிற்கமைய அனைவரும் தமது வேலைகளை ஆரம்பித்தனர்.
அதே வேளை இங்கு செம்மனச் செல்வி என்ற மூதாட்டி வாழ்ந்து வந்தார். ‘வந்தி”என்று அழைக்கப் படும் இவர், பிட்டு விற்று அதில் வரும் வருமானத்தில் வாழ்க்கை யைநடாத்தி வந்தார். இவருக்கு உற்றார் உறவினர் கிடையாது. இவர் சிவபெருமானிடத்தில் மிகுந்த பக்தியும், பாசமும் கொண்ட வர். தினமும் தான் அவிக்கும் பிட்டின் முதற்பங்கை சிவபெருமா னுக்குப் படைத்து விட்டே பிட்டு விற்பதைத் தொடங்குவார். வைகை ஆற்றங்கரையின் ஒரு பகுதியை அடைக்கும் பொறுப்பு அவருக்கும் கொடுக்கப்பட்டது. அவர் மனம் கலங்கி நின்றார். யாருமற்ற அவர் சிவபெருமானிடம் முறையிட்டார்.
‘ஐயனே இந்த அனாதைக் கிழவிக்கு உறவு என்று சொல்லிக் கொள்ள யாருமில்லை. கரையை நான் கட்டுவதென்றால், என் உடம்பில் பலமும் இல்லை, ஆள் வைத்துச் செய்வதற்கு கையிலே காசும் இல்லை. என்னுடைய பங்கை கட்டாவிட்டால் முழுக்கரை யுமே உடைத்துவிடும் இதனால் அரசனின் தண்டனைக்கும் ஆளாவேன். நீதான் எனக்கு கருணை காட்டவேண்டும் என்று சிவனிடம் வேண்டினார் . அநாதரவாய் நின்ற அந்தக் கிழவிக்கு அருள் புரிவதற்காகச் சிவபெருமான் ஒரு கூலியாளாக உருவம் கொண்டார். செம்மனச் செல்வியின் அருகே வந்தார்.
பாட்டி நான் உனக்காக அணைகட்டு கிறேன். அதற்குக் கூலியாக்ன தருவாய்? என்று கூலியாளாக வந்த சிவபெருமான் கேட்கிறார். அதற்குப் பாட்டி என உனக்குக் கூலியாகக் கொடுக்க என்னிடம் ஒன்றும் இல்லையே என்றார். உடனே கூலியாள் யோசித்து விட்டு எனக்குப் பசிக்கிறது கூலியாகப் பிட்டுத் தருவாயா? என்றார். உடனே பாட்டியும், ஆம், ஆம் நான் உனக்குக் கூலியாகப் பிட்டுத் தருகிறேன், நீ என்னுடைய பங்கின் அணையைக் கட்டுவாயா? என்றார். கூலியாளாக வந்த சிவபெருமானும் அணை யைக் கட்டுவதற்கு மண்ணை வெட்டினார். கூடையில் மண்ணை எடுத்துத் தலையில் வைத்துச் சென்று கொட்டினார். அடிக்கடி பாட்டியிடம் பிட்டையும் வாங்கிச் சாப்பிட்டார். ‘உண்ட களைப்பு தொண்டனுக்கும் உண்டு” அல்லவா. எனவே இப்பழமொழிக் கு அமைய பிட்டைச் சாப்பிட்ட கூலியாளுக்கு மயக்கம் வந்து விட்டது. கூடையை தலையின் கீழ் வைத்து ஆற்றங்கரையில் நன்றாக உறங்கினார்.
மாலை வேளை மந்திரி கரையை பார்வையிட்டுக்கொண்டு வந்தான். செம்மனச்செல்வியின் பங்கு மட்டுமே அடைபடாமல் இருந்ததை யும், அதனால் முழுக்கரையுமே உடையும் அபாயம் ஏற்பட்டு இருந் ததை யும் கண்டு கடுங்கோபம் கொண்டான். இந்தப் பகுதியை அடைக்கும் கூலிக்காரன் எங்கே? ‘என்று கோபத்தோடு கேட்டான். சற்றுத் தூரத்திலே, மரநிழலில் படுத்துறங்கிக் கொண்டிருந்த அந்த தெய்வீக இளைஞனைச் சுட்டிக்காட்டினார்கள் சேவகர்கள்.
அவனது அழகு சொட்டும் முகத்தை யும், கம்பீரமான தோற்றத்தையும் கண்டு அவனைத் தண்டிக்கப் பயந்து அரசனிடம் சென்று முறையிட்டனர்.
செய்தி கேட்டு கோபத்துடன் அங்கு வந்த அரசன் கூலியாள் வேலை செய்யாமல் உறங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்து அவனை பிரம்பால் அடித்தான். அடி விழுந்த உடனே கூலியாளாக வந்த சிவபெருமான் மறைந்து விடுகிறார். அரசன் அடித்த அடி அங்கிருந்த எல்லோரது முதுகிலும் பட்டு வலித்தது. அப்போது தான் வந்தது கூலியாள் அல்ல சிவபெருமான் என்பதனை மன்னன் அறிந்து கொண்டான். மக்கள் எல்லோரும் அதிசயித்து நின்றனர்.
இச்செயல் சிவபெருமானின் திருவிளையாடலே என அனை வரும் உணர்ந்தனர். தன்னை தஞ்சம் என்று அடைந்தவரை தாமதிக்காமல் வந்து அருளவும், உயிர்கள் அனைத்தும் தன்னுள் அடக்கம் என்பதை விளக்கவுமே, இத் திருவிளையாடல் இறை வனால் நடாத்தப்பட்டதாகும்.
இதனை விளக்கவே மதுரையில் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மூல நட்சத்திரத்தன்று பிட்டுக்கு மண் சுமந்த விழா கொண்டாடப்படுகி றது. வேறெங்கும் இல்லாத வகை யில் இங்கு திருவிழாவைக் காண வரும் அடியார்களுக்குப் பிரசாத மாக பிட்டு வழங்கப்படுகிறது.
‘கடவுளை நம்பியோர் கைவிடப்படார்.”
‘திக்கற்றவருக்கு தெய்வமே துணை”
நன்றி
இனியகாலைவணக்கம் வாழ்கவளமுடன்

No comments:

Post a Comment