Monday 14 August 2023

எல்லாம் நன்மைக்கே.

 எல்லாம் நன்மைக்கே.

வயதான ஒருவன் எல்லா வசதிகளுடனும் வாழ்ந்து வந்தான். அன்பு செலுத்த ஒரு மகன், மதிப்பு வாய்ந்த ஒரு குதிரை இப்படி பல சௌகரியங்களும் அவனுக்கு இருந்தன. ஒரு நாள் விலைமதிப்பான அவனுடைய குதிரை லாயத்திலிருந்து ஓடி அருகில் இருந்த மலைப் பகுதிக்குள் சென்று விட்டது. தான் நேசித்த மதிப்புள்ள குதிரையினை நொடிப்பொழுதில் அவன் இழந்து விட்டான்.
இதைக் கேள்விப்பட்ட நண்பர்கள் அனுதாபம் தெரிவிக்க அவனைத் தேடிக்கொண்டு வந்தார்கள். "உன்னுடைய குதிரை காணாமல் போனது எவ்வளவு பெரிய துரதிருஷ்டம்" என்று சொன்னார்கள். கவலையுடன் அவனுக்கு ஆறுதல் சொல்ல முயன்றார்கள். அவன் திருப்பிக் கேட்டான்: "குதிரை காணாமல் போனது துரதிர்ஷ்டம் என்று உங்களுக்கு எப்படித் தெரியும். "
சில நாட்கள் கழித்து குதிரை திரும்பி வந்து விட்டது. வீட்டுக்குப் போனால் நிறைய தீனி கிடைக்கும் என்று அதற்குத் தெரியும். அது மட்டும் திரும்பி வரவில்லை. காட்டில் இருந்து பன்னிரண்டு அழகான ஆண் குதிரைகளையும் தன்னுடன் அழைத்து வந்தது. இந்தச் செய்தியை அறிந்த நண்பர்கள் மகிழ்ச்சியு டன் கிழவனைத் தேடி வந்தார்கள். "பதிமூன்று குதிரைகளா, எவ்வளவு பெரிய அதிர்ஷ்டம்"
என்று சொன்னார்கள். கிழவன் திருப்பிக் கேட்டான்: 'அது அதிர்ஷ்டம் என்று உங்களுக்கு எப்படித் தெரியும். "
மறுநாள் கிழவனுடைய மகன் காட்டில் இருந்து வந்த குதிரை ஒன்றின் மீதேறி சவாரி செய்தான். குதிரை கீழே தள்ள அவனுடைய கால் முறிந்து போயிற்று. விபத்து பற்றி கேள்விப்பட்டவர்கள் கிழவனிடம் வந்து சொன்னார்கள்: "பாவம் உன் மகன் வாழ்நாள் பூராவும் ஊனமாகி விட்டான். எவ்வளவு பெரிய துரதிர்ஷ்டம்" புத்திசாலிக் கிழவன் திருப்பிக் கேட்டான்: "அது துரதிர்ஷ்டம் என்று உங்களுக்கு எப்படித் தெரியும். "
சில தினங்களுக்குள்ளாகவே படைத் தளபதி ஒருவன் அந்த ஊருக்கு வந்தான். அரசு உத்தரவின் பேரில், அந்த ஊரில் உள்ள உடல் வலிமை உள்ள இளைஞர்கள் அனைவரையும் படையில் சேர்த்துக் கொண்டு போருக்குச் சென்றான். ஊனமான கிழவனின் மகனை மட்டும் சேர்த்துக் கொள்ளவில்லை. போருக்குச் சென்ற இளைஞர்கள் அனைவரும் போரில் கொல்லப்பட்டார்கள். அந்த ஊரில் மிஞ்சிய இளைஞன் கிழவனின் ஒரே மகன் தான்.
*கதை உணர்த்துகின்ற நீதி இதுதான்:*
ஒரு நிகழ்ச்சி அதிர்ஷ்டமா, துரதிர்ஷ்டமா என்று உனக்குத் தெரியாது. ஆகவே அதை மட்டும் வைத்து என்ன நடக்கும் என்பதை நீ முடிவு செய்யாதே.
ஆனால் நடப்பது, நடக்கப் போவது அனைத்தும் இறைவனுக்கு தெரியும். அதனால் அவன் நம் வாழ்வில் நடத்தும் நிகழ்வுகள் அனைத்தும் "எல்லாம் நன்மைக்கே" என்று எடுத்து கொள்வோம்.

No comments:

Post a Comment