Wednesday 16 August 2023

குறையை ஏற்கும் பக்குவம்.

 குறையை ஏற்கும் பக்குவம்.

நம் முகத்தில் கழுவாமல் விடப்பட்ட சோப்பு நுரையையே,
பிறர் சுட்டிக் காட்ட வேண்டிய அவசியம் இருக்கும் போது,
முதுகின் அழுக்கை யார் தான் சுட்டிக் காட்டுவதாம்.
நான் ஒருமுறை சிக்னல் ஒன்றில் பச்சை விளக்கிற்காகக் காத்திருந்த போது பக்கத்தில் ஸ்கூட்டரில் வந்து நின்ற பெண்மணி ஒருவர்,
தன் ஹெல்மெட்டில் இருந்த முன் பிளாஸ்டிக் தடுப்பை உயர்த்தி, ‘நீங்கள் உங்கள் காரின் பின் கதவை சரியாகச் சாத்தவில்லை…’ என்று சொன்னார். ‘மிக்க நன்றி…’ என, உடனே மகிழ்ச்சி தெரிவித்தேன்.
ஆனால், எங்கள் கல்லூரியில் நடைபெற்ற சொற்பொழிவில் நான் கல்லூரி மேடையில் பேசி விட்டுக் கீழே இறங்கிய போது,
‘இன்னும் கூட உங்களிடத்தில் எதிர்பார்த்தேன்…’
என்று ஒரு பேராசிரியை கூறியதும், என் முகம் சுருங்கி விட்டது.
என் கோணத்தில் அது நல்ல பேச்சாக இருக்கலாம். ஆனால், அது சென்று அடைந்தவர்களை திருப்திப்படுத்தவில்லை என்கிற போது, எங்கே கோளாறு நிகழ்ந்திருக்கிறது என்று நான் பரிசீலித்திருக்க வேண்டும்.
இரு பெண்களும் என் தவறுகளை சுட்டிக்காட்டியவர்களே. ஒன்றில், எனக்கு நன்றி தெரிவிக்கத் தோன்றியது; மற்றதில் ஏனோ தோற்றுப் போனேன். இவருக்குமல்லவா நான் நன்றி தெரிவித்து, என் குறையை ஏற்றுக் கொண்டிருக்க வேண்டும்; விளக்கம் கேட்டிருக்க வேண்டும்.
அடுத்த கல்லூரிக் கூட்டத்தில் பேச, குறிப்புகளைத் தயார் செய்த போது, அப்பேராசிரியைக்கு மானசீகமாக நன்றி தெரிவித்து, ஒரு தேர்வை சந்திக்கும் மாணவன் போல், என்னைக் கருதிக் கொண்டேன்.
*நம் குறைகளை சுட்டிக் காட்டுபவர்களை எதிரியாக கருதத் தேவையில்லை. நட்புடன் சுட்டி காட்டியவர்களாகவே கருதுவோம்.*

No comments:

Post a Comment