Monday 19 September 2022

பேச்சாற்றலை வளர்த்திடலாம்.

 பேச்சாற்றலை வளர்த்திடலாம்.

நம் மக்களுக்குப் பேசவா சொல்லித்தர வேண்டும்.
பேசுவோம் பேசுவோம் கோழி கொக்கரித்து ஆந்தை அலறும் வரை கூடப் பேசுவோம்.
ஆனால், ஒரு மேடை ஏறி இந்த தலைப்பில் ஒரு நான்கு வரி பேசிவிட்டு வருவதற்கு அவ்வளவு பதற்றம் அடைவோம்.
பேசுதல் கூட ஒரு கலை தான். ஒருவருக்கு விளங்குமாறு ஒரு விஷயத்தை எளிமையாகச் சொல்லி புரியவைப்பது சுலபம் அல்ல.
அந்த முயற்சியில் இறங்கும் பொழுது நாம் முதலில்,
1. உள்ளடக்கத்தின் 360 கோண பார்வை அறிந்திருக்க வேண்டும்
2. எளிய நடையில் தகவலைப் பரிமாறத் தெரிய வேண்டும்
சரி, இரண்டும் நான் செய்து விடுவேன்ப்பா. ஆனால், ஒன் டு ஒன் என் முன் வந்து நின்றால், எவ்வளவு விளக்கம் வேண்டுமானாலும் கொடுப்பேன் என்று சிலர் இருப்பார்கள்.
அது ஒரு வகையில் சரி தான் ஒப்புக்கொள்ளும் வகையில் இருந்தாலும், ஒரு பெரும் கூட்டத்தை உட்கார வைத்து அதே தலைப்பில் பேசச் சொன்னாலும் அங்குள்ள ஒவ்வொருவருக்கும் அது தெளிவான நடையில் போய்ச் சேர வேண்டும்.
அதுவே உங்கள் பேச்சின் ஆற்றலை வெளிப்படுத்தும்.
ஒரு மேடை ஏறும் போதோ அல்லது ஒரு பெரும் கூட்டத்திற்கு முன் பேச வேண்டிய நிலை இருப்பின், முதலில்
பயத்தை நீக்குங்கள்.
உங்கள் முன் இருக்கும் முதல் நபர் முதல் கண்ணுக்கெட்டிய தூரம் வரை தெரியும் கடைசி நபர் வரை ஒரு பார்வை (glance) பார்த்துக்கொள்ளுங்கள்.
கூட்டத்தில் உங்கள் நண்பர்கள் /தோழிகள் /குடும்பத்தினர் தான் அமர்ந்திருக்கிறார்கள் என்ற மனநிலைக்கு வாருங்கள்.
பேச்சாற்றல் பற்றிக் கேட்டால் இப்படி தொடர்பே இல்லமால் சொல்கிறாரே என நினைக்காதீர்கள்.
மனதிலுள்ள பயம் மற்றும் பதற்றத்தை நீக்கினால் மட்டும் தான் உங்கள் பேச்சின் வெளிப்பாடு சிறப்பான முறையில் இருக்கும்.
உங்கள் குரலே காட்டிக் கொடுத்து விடுமே உங்களின் மனநிலையை.
அதற்கு தான் சொல்கிறேன் மனதை அந்த சூழலுக்கு ஏற்றவாறு மாற்றி அமைத்துக்கொள்ளுங்கள்.
பேச்சாற்றல் - இதற்கு எனக்கு தெரிந்த அடிப்படையாக கடைபிடிக்க வேண்டிய சிலவற்றைக் கூறுகிறேன்.
1. உங்கள் மொழியில் புலமை பெற்றிருக்க வேண்டிய தேவை இல்லை.
ஆனால், நீங்கள் பேசுவது தெளிவாக இருந்தால் போதும். முடிந்த வரையில் எளிமையான வார்த்தைகள் கொண்டே பேச்சைக் கையாளுங்கள்.
2. நீங்கள் மட்டுமே பேசிக் கொண்டிருந்தால் பத்தாது ; கேட்போர் புரிந்துகொள்ள கால அவகாசம் கொடுங்கள். அவ்வப்போது ஒரு pause விடுங்கள்.
3. உங்கள் உடல் மொழி(body language) மற்றும் கண் தொடர்பு(eye contact) மட்டும் சரியாகப் பயன்படுத்தி கொண்டால் போதும்.
இந்த ஆற்றலும் பேச்சிற்கு கூடுதல் போனஸ் தான்.
4. ஆங்கிலத்தில் extempore என்று சொல்லுவார்கள் .
அதாவது எந்த வித முன்னேற்பாடும் இன்றி மேடையில் பேசுவது.
அந்த முறைக்கு உங்களைத் தயார் செய்து கொள்ளுங்கள்.
ஒரு கதையை மனனம் செய்து ஒப்பிப்பது போன்ற உரையை யாரும் விரும்ப மாட்டார்கள்
5. அனைத்திற்கும் மேலாக உங்கள் உள்ளடக்கம் மீது உங்களுக்கே நம்பிக்கை இருக்க வேண்டும்.
உள்ளடக்கம் 50% என்றால் வாய்மொழி அல்லாத செயற்பாடுகள் (உடல் மொழி+ கண் தொடர்பு) 50%
6. ஒரே தொனியில் பேசாதீர்கள். சூழலுக்கு ஏற்ப ஏற்ற இறக்கங்களுடன் பேசுங்கள்.
அப்படிப் பேசினால் தான் பார்வையாளர்கள் துயில் கொள்ளாமல் உங்களின் உள்ளடக்கத்துடனேயே பயணிப்பார்கள்.
எப்படி தயார் படுத்திக் கொள்வது?
கண்ணாடி முன்னர் நின்று பேசிப் பாருங்கள். அப்போது உங்கள் வாய்மொழி மற்றும் வாய்மொழி அல்லாத செயல்களையும் சேர்த்து கவனித்துக்கொள்ளுங்கள்.
உங்கள் குரலை நீங்களே பேசி ரெகார்ட் செய்து கொள்ளுங்கள்.
அப்போது தான் உங்கள் குரலின் ஏற்ற இறக்கங்கள் புரியும்.
எல்லோருக்கும் எல்லாம் வரும்.
முயற்சியில் முனைப்புடன் இருந்தால்.

No comments:

Post a Comment