Monday 22 August 2022

தமிழ் வானம் ....

 தமிழ் வானம் ....

மதுரை திருநகர் அருகே தணக்கன்குளத்தில் ஐயா( தாத்தா) வைத்திருந்த தோட்டத்தை அவர் மறைவிற்கு பின் விற்றுவிட்டார்கள்.
அவருடன் பல நாட்கள் மொபெட்டில் சென்று தோட்டத்தை உள்வாங்கியிருக்கிறேன். அறுவடை நாட்களில் கதிர் அறுத்ததும், கொய்யாப்பழங்களைக் கொய்தவுடன் உண்டதும் இனிமையான நினைவுகள்.
முப்பது ஆண்டுகள் உருண்டோடிவிட்ட போதும், அங்கே இருந்த ஒரு பலா மரம் மட்டும் இன்றும் என் நினைவில் அடிக்கடி வந்து போகும்.
அது ஒரு இள மரம். அப்போது தான் காய்க்கத் தொடங்கியிருந்தது !
ஒரு பழத்தில் 15 - 20 பெரிய சுளைகள் மட்டுமே இருக்கும். ஆனால் அத்தனை சுவை. தேனாய் இனிக்கும்.
இன்று நால்வழிச்சாலையும் பிளாட்டுக்களும் வந்த பின் தோட்டம் இருந்த தடயம் தெரியவில்லை. அந்தப் பலா மரம் இன்றும் இருக்கிறதா , வெட்டிவிட்டார்களா ? இந்த ஏக்கம்
எப்போது அகலும் ?
சில தினங்களுக்கு முன் கொரியரில் வந்தது தமிழ் வானம். இரவு வீடு திரும்பியதும் கைகளில் எடுத்த புத்தகத்தை கீழே வைக்க மனமில்லை.
தமிழறிஞர் சாலமன் பாப்பையா ஆழி மணலை உவமானமாய் கொண்டு வாழ்த்தும் அழகுடன் துவங்குகிறது மலர்.
தன் நண்பனுடனான உறவை ஒரு குசேலனாக, குகனாக, கம்பனுக்கும் சோழ மன்னனுக்கும் இருந்த நட்பாக பாவித்து, அவன் செயல்களை கற்பக தருவான பனை மரத்துடன் ஒப்பிட்டு மகிழும் எழுத்தாளர் திருமலை அவர்களின் வரிகளுடன் நிறைவடைகிறது.
No. 28, டவுன் ஹால் ரோட்டில் ஆரம்பித்த ஒரு சராசரி இளைஞனின் வாழ்க்கையை, இன்று சமுதாயத்தில் பல்வேறு துறைகளில் ஆழ்ந்து வேரூன்றிய 28 சான்றோர் பெருமக்கள் இப்புத்தகத்தில் கொண்டாடி மகிழ்கிறார்கள்.
இதன் நாயகன் ஒரு சினிமா நடிகனல்ல, அரசியல் பதவியில் இருக்கும் கட்சித் தலைவனல்ல, செல்வச் செழிப்பில் திளைக்கும் கொடை வள்ளல் அல்ல.
நூற்றுக்கணக்கான நன்மக்கள் இவருடன் நீடித்த நட்பு பாராட்டக் காரணம் என்ன ?
“நேர்மை என்பது ஒரு விலையுயர்ந்த பரிசு. அதனை நீங்கள் சந்திக்கும் மலிவான மனிதர்களிடம் எதிர்பார்க்காதீர்கள்” - என்பார் உலகின் மாபெரும் முதலீட்டாளர் / செல்வந்தர் வாரன் பஃபட்.
திறமை, நேர்மை, எளிமை, துணிவு, அன்பு, ஆற்றல் அனைத்தும் ஒருசேரப் பெற்ற ஆளுமை தான் இவரின் இந்த நட்பு ஈர்ப்பு சக்திக்குக் காரணமோ ?
இதற்கான விடை புத்தகத்திற்கு உள்ளேயே இருக்கிறது.
காரணம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். எங்கள் தோட்டத்து பலா மரம் மீதான என் ஏக்கம் இன்று இப்புத்தகத்தை படித்த பின் தீர்ந்தது.
ஆம். ஐயா நீரூற்றி வளர்த்த அந்த பலா மரம், இன்று பார் புகழும் வண்ணம் தன் தேன் கனிகளை அனைவருக்கும் அள்ளி வழங்கிக் கொண்டிருக்கிறது. அவர் மகன் சொக்கலிங்கத்தின் வடிவில்.
எங்களுக்கும் பெருமை தான். எங்கள் தோட்டத்துப் பலாச்சுளை தானே ! 😊
- காசிராமன்
15.08.2019

No comments:

Post a Comment