Thursday 21 January 2021

பெருமைக்கும் ஏனை சிறுமைக்கும்.

 பெருமைக்கும் ஏனை சிறுமைக்கும்.

உங்கள் வாழ்க்கையில் நடக்கும் நன்மை, தீமைகளுக்கு அடுத்தவர்கள் காரணம் இல்லை நம் வாழ்க்கையில் ஏதாவது ஒரு நன்மை நடந்தால் அதை முழுமையாக ஏற்றுக்கொள்ளும் நம் மனது, தீயவை நடந்தால் மட்டும் முழுமையாக ஏற்றுக்கொள்ளாது.
அது ஏனோ தெரியவில்லை. நம்முடைய நன்மைக்கு ஒருவர் காரணமாக இருந்தால் அவரை நாம் புகழத் தான் செய்வோம். அதுவே நம் தீமைக்கு ஒருவர் காரணமாக இருந்தால் அவரைத் திட்டி தீர்த்து விடுவோம். இது இயற்கைதான். ஆனால் நமக்கு தீமை நடப்பதற்கு, அந்த குறிப்பிட்ட நபர் காரணம் இல்லை, என்பதை நாம் ஏன் புரிந்து கொள்வதில்லை.
ஒரு முறை சீதாதேவியை காண்பதற்காக ஹனுமன் அசோகவனத்திற்க்கு சென்றபோது, அரக்கிகள் சீதாதேவியை துன்புறுத்திய காட்சியை அனுமன் பார்த்துவிட்டார். ‘தங்களை துன்புறுத்தும் இந்த அரக்கிகளை நெருப்பில் போட்டு வதம் செய்து விடட்டுமா’? என்றவாறு அனுமதியினை சீதா தேவியிடம் கேட்டார் ஹனுமன்.
ஆனால் சீதா தேவியோ ஹனுமனிடம் ‘ஹனுமா! நான் செய்த பாவத்திற்காக தான், இந்த தண்டனையை அனுபவித்து கொண்டிருக்கின்றேன். அன்று எனக்கு காவலாக இருந்து, எந்த தவறும் செய்யாத லக்ஷ்மணனை கோபத்தில் நான் திட்டிவிட்டேன். வெளியில் சென்ற என்னுடைய கணவரை காணவில்லை என்ற பரிதவிப்பில் எந்த ஒரு தவறும் செய்யாத லட்சுமணனை கடுமையான சொற்களைக் கொண்டு வஞ்சித்து பேசி, ராமபிரானை தேடுவதற்காக அனுப்பிவைத்தேன். அதையும் தாண்டி, இலட்சுமணன் என் பாதுகாப்பிற்காக போட்ட கோட்டையும் நான் தாண்டி விட்டேன். இப்படி எந்தப் பாவமும் அறியாத லட்சுமணன் மனதை புண்படுத்தியதற்க்காக தான் எனக்கு இன்று இந்த தண்டனை. இதற்கு இந்த அரக்கியர்கள் என்ன செய்வார்கள்? ஆகவே இந்த அரக்கியர்களை, நீ எதுவும் செய்ய வேண்டாம்.’ என்று சீதாதேவி அவர்கள் ஹனுமனிடம் கூறிவிட்டார்களாம்.
நம் வாழ்க்கையையும் நாம் இப்படித்தான் வாழ வேண்டும். நமக்கு ஏதோ ஒரு நன்மை நடக்கிறது என்றால் அது நாம் செய்த கர்மப்பலனால் தான் நடக்கின்றது. நன்மை எப்படியோ அதே போல் தான் தீமையும். நமக்கு ஒரு தீமை நடக்கிறது என்றால் அதுவும் நம்முடைய கர்மவினை தான். நாம் செய்த தவறின் காரணமாக தான் நமக்கு நன்மையும், தீமையும் நடக்கிறது என்பதை நாம் எப்பொழுது உணர்ந்து நடந்து கொள்கின்றோமோ, அந்த சமயம் நம் வாழ்க்கையில் பக்குவம் அடைந்து விடுவோம். நல்ல பக்குவத்தை அடைந்த ஒரு மனிதனுக்கு தேவை இல்லாத கோபதாபங்கள், பிரச்சினைகள், வீண் விவாதங்கள், சண்டைகள் எதுவுமே வராது.
நிம்மதியான வாழ்க்கையை நாம் நமக்கு அமைத்துக்கொள்ள வேண்டும் என்றால், முதலில் நாம் வாழ்க்கையில் பக்குவமடைய வேண்டும்.
பக்குவம் அடைய வேண்டுமென்றால் நன்மைகள், தீமைகள் யாவும் பிறரால் நமக்கு வரவில்லை. நாம் செய்த முற்பிறவியின் கர்ம வினைகள் தான் நம்மை தொடர்கிறது என்பதை ஒருவர் உணர்வது மிகவும் அவசியம். அந்த சீதாபிராட்டியைப் போல நம்மால் பொறுமையைக் கடைபிடிக்க முடியாவிட்டாலும், ஒரு மனிதன் கடைப்பிடிக்க வேண்டிய பொறுமையையாவது கடைபிடிப்பது நல்லது.

No comments:

Post a Comment