Wednesday 20 January 2021

கொடுத்ததெல்லாம் கொடுத்தான்..

 கொடுத்ததெல்லாம் கொடுத்தான்..

மீண்டும் மீண்டும் அந்த சந்தேகம் வந்தது சிஷ்யனுக்கு!
*‘‘இறைவன் எல்லோருக்கும் பொதுவானவன்தானே* குருவே?’’ என்று கேட்டான் குருவிடம்.
‘‘ஆம். அதில் இன்னும் உனக்கு சந்தேகம் தீரவில்லையா?!’’ எனத் திருப்பிக் கேட்டார் குரு.
தலையைச் சொறிந்தான் சிஷ்யன். ‘‘சூரியன்போல.. சந்திரன்போல.. மழைபோல.. எல்லோருக்கும் பொதுவானவன் இறைவன் என்றால், அவன் எல்லா மனிதர்களுக்கும் ஒரே அளவில் கொடுப்பதில்லையே! *சிலருக்கு அள்ளிக் கொடுக்கிறான், சிலருக்கு கிள்ளித்தான் கொடுக்கிறான்!* மழைபோலப் பொழியும் அவன் கருணையை வேண்டிய மட்டும் எடுத்துக்கொள்வது மனிதனின் முயற்சியில்தான் இருக்கிறது என்று நீங்கள் சொல்வது எனக்கு ஏற்புடையதாக இல்லை குருவே..’’ என்றான்.
‘‘அப்படியா?!’’
‘‘ஆமாம் குருவே. சிலர் தானாகவே உணவை எடுத்துச் சாப்பிடுவார்கள். சிலருக்கு நாம்தான் ஊட்டிவிட வேண்டும். சின்னக் குழந்தைகளை எடுத்துக்கொள்ளலாம்.. வயதான முதியவர்களையும் கணக்கெடுத்துக்கொள்ளலாம்.. ஊனமுற்ற உடல் கொண்டவர்களையும் இதற்கு உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம். உன் முயற்சியைப் பொருத்தே என் கருணை உனக்குக் கிடைக்கும் என இறைவன் கருதுவதாகக் கூறுவது நியாயமாகப்படவில்லையே..’’ என்றான் சிஷ்யன்.
அவனை அழைத்து தன் அருகே அமர வைத்துக்கொண்டார் குரு. பொறுமையாக விளக்க முற்பட்டார்.
*‘‘மனிதர்களுக்கு மட்டுமல்ல.. சகல ஜீவராசிகளுக்கும் அடிப்படைத் தேவையை, அவர்கள் கேட்டாலும் கேட்காவிட்டாலும் கொடுத்துக்கொண்டுதான் இருக்கிறான் இறைவன்.* அதனையடுத்த மற்ற தேவைகளுக்குத்தான் அவரவர் முயற்சி தேவைப்படுகிறது..’’.
‘‘புரியவில்லை குருநாதா..’’ என்றான் குழப்ப முகத்துடன் சிஷ்யன்.
குரு, இன்னும் ஆழமாக விளக்க முற்பட்டார்.
‘‘மனிதன் உயிர் வாழ அத்தியாவசிய தேவை எது?’’ என்று கேட்டார்.
*‘‘உணவு, உடை, உறையுள்..’’* என்றான் சிஷ்யன்.
‘‘உறைவிடம் இல்லாவிட்டால் ஒருவனால் உயிர் வாழ முடியாதா என்ன?!’’
‘‘வாழ முடியும் குருநாதா..’’
‘‘உடை இல்லாவிட்டால்?’’
‘‘அப்போதும் உயிர்வாழ முடியும் குருநாதா..’’.
‘‘அப்படியானால் உணவுதான் அடிப்படைத் தேவை என்று நீ கூறுவதாக எடுத்துக்கொள்ளலாமா?’’.
‘‘ஆமாம்..’’ என்றான் சிஷ்யன்.
‘‘இன்று முழுவதும் உணவு உண்ணாவிட்டால் நீ உயிரிழந்துவிடுவாயா?’’ என்றார் குரு.
யோசித்தான் சிஷ்யன். ‘‘இல்லை குருவே.. உணவில்லாமல் ஒரு சில நாட்கள் என்னால் உயிர் வாழமுடியும். எந்த ஜீவராசியாலும் உயிர் வாழமுடியும்..’’ என்றான்.
அவனைத் தெளிவான பாதைக்கு அழைத்துவந்து நிறுத்திவிட்டதால், லேசாகப் புன்னகை மலர்ந்தது குருவின் முகத்தில்.
‘‘சரி.. இப்போது அடுத்தகட்டத்தை ஆராயலாம். உன் நாசிகளையும் உதடுகளையும் இறுக மூடிக்கொள்..’’ என்றார் குரு.
அப்படியே செய்தான் சிஷ்யன்.
‘‘நான் கூறுவதுவரை அப்படியே இரு..’’ என்றார் குரு. மூச்சை அடக்கிக்கொண்டான் சிஷ்யன்.
விநாடிகள், நிமிடங்களாகின. அவனையே பார்த்துக்கொண்டிருந்தார் குரு. ஒருசில நிமிடங்களுக்குப் பின்னர் அவனால் தாக்குப்பிடிக்க முடியவில்லை.
மூச்சை அடக்கத் திணறி, திமிறி, கைகளை விடுவித்துக்கொண்டான். மேலும் கீழுமாக மூச்சு வாங்கினான்.
‘‘மன்னிக்கவும் குருநாதா. இதற்கு மேல் இயலவில்லை’’ என்றான்.
‘‘இப்போது புரிகிறதா.. உயிர் வாழ எது மிக அத்தியாவசியம் என்று?’’ என்று கேட்டார் குரு.
‘‘ஆம் குருநாதா. அதை *சகலருக்கும் சரிசமமாகவே வழங்குகிறான் இறைவன்* என்ற உண்மையும் எனக்குப் புரிந்துவிட்டது’’ என்றான் சிஷ்யன்.

No comments:

Post a Comment