Tuesday 12 January 2021

கூப்பிடும் தூரத்தில்தான் கடவுள் இருக்கிறார்.

 கூப்பிடும் தூரத்தில்தான்

கடவுள் இருக்கிறார்.
ஒரு குறுநில மன்னன் இருந்தான். அவனும் நன்றாக இருந்தான்.
அவன் தலைமையில் நாடும் நன்றாக இருந்தது.
அவனுக்கு இறை நம்பிக்கை உண்டு. ஆனால் அதீதமாக
இறைவனைக் கும்பிடுபவன் இல்லை அவன்.
ஒரு நாள் அரச சபையில் இருந்த அமைச்சர்கள், கவிராயர்கள்,
கல்வியாளர்கள் என்று அனைவரையும் நோக்கிக் கேட்டான்.
"இறைவன் எங்கே இருக்கிறான்?"
அனைவரும் ஒருசேர வானத்தை நோக்கிக் கையைக் காட்டினார்கள்.
மன்னன் புன்னகைத்துவிட்டுச் சொன்னான். "வானத்தில் இருக்கிறான்
என்பது எனக்கும் தெரியும். வானத்தில் எங்கே இருக்கிறான்? அதைச்
சொல்லுங்கள்!" என்றான்
அனைவரும் மெளனமாகி விட்டர்கள். அதாவது 'கப், சிப்' பென்று
அடங்கிவிட்டார்கள்.
அரசன் சொன்னான், "சரி, ஒருவாரம் அவகாசம் தருகிறேன்.
யோசித்துச் சரியான பதிலைச் சொல்லுங்கள்.என்னை மகிழ்விக்கக்கூடிய
பதிலைச் சொல்பவருக்கு ஆயிரம் பொற்காசுகள் பரிசு!"
ஒருவார காலம் கடந்து போனதே தெரியவில்லை. அடுத்த திங்கட்
கிழமையும் வந்து சேர்ந்தது. அரச சபையும் கூடியது.
மன்னன் ஒரு வாரமாக ஆர்வத்துடன் காத்திருந்ததால், சபைக்கு
வந்தவுடன், அந்தக் கேள்வியைத்தான் முதலில் கேட்டான்.
"யாராவது சென்ற வாரம் நான் கேட்ட கேள்விக்குப் பதிலுடன்
வந்திருக்கிறீர்களா?"
ஒருவரும் வாயைத் திறக்கவில்லை. தலையைக் குனிந்து கொண்டு
நின்றார்கள்.
அரசனுக்கும் சங்கடமகிவிட்டது. இத்தனை சான்றோர்களும், மூத்த
அறிஞர்களும் நிறைந்த இந்தச் சபையில் ஒருவருக்குக் கூடவா
சரியான பதில் தெரியவில்லை?
அப்போதுதான் அது நடந்தது.
அரசனுக்கு சாமரம் வீசிக்கொண்டிருந்த பணியாள், சாமரத்தைக் கீழே
வைத்துவிட்டு, அரசனருகில் வந்து, தன்னுடைய இரண்டு கைகளையும்
கட்டிக்கொண்டு, பணிவுடன் கேட்டான்.
"மன்னர் மன்னா, உங்கள் கேள்விக்கு எனக்குப் பதில் தெரியும்.
நான்
சொல்லவா?"
வியப்பு மேலிட்ட அரசன் மகிழ்ந்து சொன்னான்.
"ஆகா தாராளமாகச் சொல்"
"கடவுள் அங்கு இங்கு எனாதபடி எல்லா இடங்களிலும் இருக்கிறார்.
நம் அருகிலேயே இருக்கிறார். கூப்பிடும் தூரத்தில்தான் இருக்கிறார்"
"எப்படிச் சொல்கிறாய்?"
"முதலையின் வாயில் தன் கால் மாட்டிக் கொண்டு மீள முடியாதபோது,
ஆதிமூலம் என்று யானை ஒன்று கதறி அழுது கூப்பிட்ட போது
இறைவன் வந்து அதைக் காப்பாற்றவில்லையா? தன் மானம் பறிபோகும்
நிலையில், கண்ணா, என்னைக் காப்பாற்று என்று திரெளபதை கூக்குரல்
இட்டபோது, இறைவன் உதவிக்கு வந்து அவள் மானத்தைக் காக்கவில்லையா?
ஆகவே இறைவன் கூப்பிட்டால் கேட்கும் தூரத்தில்தான் இருக்கிறார்.
நீங்கள் மனம் உருகி அழைத்தால் அவர் வருவார். உங்களுக்கு
வேண்டிய உதவிகளைச் செய்வார்"
அவன் சொல்வதில் உண்மை இருப்பதை உணர்ந்தான் மன்னன்.
ஆனாலும் அவன் அதை முழுதாக அதை ஏற்றுக் கொள்ளாமல்,
தொடர்ந்து கேட்டான்.
"அப்பனே நீ சொல்வது சரி. ஆனாலும் ஒரு கேள்வி இருக்கிறது.
துரியோதனின் சபைக்கு திரெளபதையை அவன் தம்பி துச்சாதனன்
இழுத்துவந்த போது, அந்த மாதரசியை, இறைவன் ஏன் ஆரம்பத்திலேயே
காப்பாற்றவில்லை?
என்னை விட்டுவிடு என்று அவள் சொன்ன போது - வரம்பு
மீறி அவளைத் தர தரவென்று இழுத்துக் கொண்டு செல்லும் நோக்கோடு
கையைப் பிடித்து அந்தப் பெண்ணரசியை இழுத்தானே - அப்போது
ஏன் இறைவன் வந்து அவளைக் காக்கவில்லை?
"இல்லை மன்னா, தவறு திரெளபதையுடையது. சொல்லியும் கேட்காமல்
இழுக்கிறானே - என்ன செய்வான் பார்த்து விடுவோம் என்ற மன
நிலையில் இருந்தாள். அதே போல அரச சபைக்கு வந்தவுடன்
பீஷ்மர், துரோணாச்சாரியார் போன்ற பெரியவர்களைப் பார்த்தும்
இங்கே தனக்கு அசிங்கமாக ஒன்றும் நேர்ந்துவிடாது என்று துணிவும்
கொண்டாள். அதோடு தன் கணவர்கள் ஐவரையும் அங்கே பார்த்தவுடன்
இவர்களும் இருக்கிறார்கள் - யார் என்னை என்ன செய்துவிட முடியும்
என்ற நம்பிக்கையையும் கொண்டாள். ஆனால் இறுதியில் எல்லாம்
மோசமாகி, தன் துகில் - தன் சேலை - உரியப் படும் நிலைக்கு வந்த
பிறகுதான் - இனி யாராலும் தன்னைக் காப்பாற்ற முடியாது
இறை வடிவான கண்ணன் ஒருவனால்தான் தன்னைக் காப்பாற்ற
முடியும் என்ற முடிவிற்கு மின்னலாக வந்தாள். அதற்குப் பிறகுதான்
கண்ணா, என்னைக் காப்பாற்று என்று கதறிக் கூக்குரல் கொடுத்தாள்
கண்ணனும் அவளுடைய மானத்தைக் காத்தார். ஆகவே ஒன்று மட்டும்
சொல்ல ஆசைப் படுகிறேன் மன்னா!
அழைத்தவர் குரலுக்கு மட்டுமே இறைவன் வருவான்.* அவன் அவனாக வந்து ஒருபோதும் உதவி
செய்வதில்லை. ஆகவே மனம் உருகி அழையுங்கள் மன்னா,
இறைவன் வருவான். நல்வழி தருவான்.

No comments:

Post a Comment