Monday 18 January 2021

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று .

 கனியிருப்பக் காய் கவர்ந்தற்று .

இறைவனது படைப்பிலேயே பேசும், சிரிக்கும் தன்மை கொண்ட ஒரே இனம் மனித இனம் மட்டும்தான்.
எத்தனையோ சான்றோர்கள்அவர்களது பேச்சுத் திறனாலேயே உலகில் அறியப்பட்டுள்ளனர். சிறப்பான பேச்சு அத்தனை நபர்களையும் கட்டிப் போடும் வல்லமை படைத்த ஒன்றாகும்.
நாம் பேசுவது மனிதர்களோடு என்றுதான் நினைக்கிறோம். ஆனால், உண்மை அதுவல்ல; நாம் பேசுவதெல்லாம் அவர்கள் மனங்களோடுதான். நல்லதொரு இனிமையான பேச்சு மற்றவர்கள் மனங்களை மகிழ வைக்கும்; அவர்கள் முகங்களை மலர வைக்கும்.
ஆனால், ஒரு சில நபர்கள் மட்டுமே சரியான நபர்களிடம் அவர்களுக்குத் தேவையான விஷயத்தைச் சரியான முறையில் இனிமையாகப் பேசி இதயம் கவர்கின்றனர். அவர்களால் மட்டுமே எல்லாத் துறையிலும் சாதனையாளர்களாக இருக்க முடிகிறது.
இதைத் தான் திருவள்ளுவர்
இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று.
என்று கூறியுள்ளார்.
இதன் பொருள், இனிமையான சொற்கள் இருக்கும்போது கடுமையான சொற்களைப் பேசுவது, ஒரு மரத்தில் உண்பதற்கு நல்ல பழங்கள் இருக்கும்போது அதை உண்ணாமல் அந்த மரத்தில் உள்ள காய்களை உண்ணுவதற்குச் சமமாகும் என்பதாகும்.
நல்ல பேச்சினால் நட்புகளைப் பெற்று, நன்மைகளைப் பெற முடியும். ஆனால், மனதைக் காயப்படுத்தும் பேச்சுகள் வடுக்களைத்தான் ஏற்படுத்தும். அதைச் சரி செய்ய முடியாது.
இந்த உலகிலேயே சிறந்தது அன்பு ஒன்று தான். அன்பாகப் பேசுங்கள், பேச்சால் அன்பினை வெளிப்படுத்துங்கள். அன்பு காரணமாக உறவுகள் மேம்படும். அன்பு காட்ட குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள், அன்பினால் மட்டும் குழந்தைகளை வழி நடத்துங்கள்.

No comments:

Post a Comment