Friday 29 January 2021

வெற்றிச் சரித்திரம்.

 வெற்றிச் சரித்திரம்.

நம் இளைஞர்களுக்கு எதையும் தாங்கும் இதயம் அவசியம்;பத்மஸ்ரீ விருது பெற்ற ஸ்ரீதர் வேம்பு..
இந்தியாவின் 72வது குடியரசு தினவிழாவில்,வர்த்தகம் மற்றும் தொழில் துறைக்கான பத்ம ஸ்ரீ விருதினை ஜோஹோ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான ஸ்ரீதர் வேம்பு அவர்களுக்கு அளித்தது.
அதெல்லாம் சரி, யார் இந்த ஸ்ரீதர் வேம்பு. எதற்காக இவருக்கு இந்த விருது..?
தற்பொழுது தென்காசி அருகே உள்ள மத்தளம்பாறையில் ஐ.டி. நிறுவனம் நடத்திவரும் தொழிலதிபர் ஸ்ரீதர் வேம்புவுக்கு, கிராமப்புறங்களில் வேலை வாய்ப்பை அதிகரிக்க செய்தமைக்காக மத்திய அரசு பதமஸ்ரீ விருது வழங்கியுள்ளது.
திரு ஸ்ரீதர் வேம்பு அவர்கள் சென்னையை தலைமையிடமாகக் கொண்டு சோஹோ என்ற ஐ.டி. நிறுவனத்தை நடத்தி வருகிறார். இதன் கிளைகள் செங்கல்பட்டு, மத்தளம்பாறை, ஆந்திர மாநிலம் ரேணிகுண்டா மற்றும் அமெரிக்கா, நெதர்லாந்து, ஆஸ்திரேலியா, துபாய் ஆகிய நாடுகளில் செயல்பட்டு வருகின்றன.
ஜோஹோ (ZOHO) நிறுவனம், இன்று உலகம் முழுக்க தனது சேவைகளை செய்து வருகின்றது. மிக சிறிய அளவில் ஆரம்பித்த இந்த சேவையானது, இன்று உலகமே திரும்பி பார்க்கும் அளவுக்கு வளர்ந்துள்ளது. சொல்லப்போனால் மைக்ரோசாப்ட், கூகுள், ஆரக்கிள் ,மற்றும் சேல்ஸ்போர்ஸ் உள்ளிட்ட பெருந்தலைகளுக்கு போட்டியாக வளர்ந்து வருகின்றது.
ஸ்ரீதரின் பின்னணி என்ன?
தஞ்சாவூர் மாவட்டத்தின் காவேரிகரையோரம் உள்ள உமையாள்புரம் கிராமத்தில் பிறந்தவர் தான் ஸ்ரீதர் வேம்பு. அவரின் சொந்த ஊர் கொள்ளிடக் கரையோம் உள்ள திருப்பனந்தாள் அணைக்கரை பகுதி கிராமமான சிதம்பரநாதபுரம் கிராமமாகும். பிறந்தது கிராமப்புறம் என்றாலும் வளர்ந்தது சென்னை தான்.
இத்தகைய பெரிய வளர்ச்சியை அடைந்தும், ஜோஹோ தனது நிறுவன விரிவாக்கத்திற்கும், வளர்ச்சிக்கும் ஆரம்பம் முதல் எந்த ஒரு வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து முதலீடு பெறவில்லை. அனைத்து விதமான நிதியுதவியும் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடமிருந்து பெறப்பட்டவை.
ஆரம்பத்தில் பற்பல பிரச்சனைகளை எதிர்கொண்ட ஸ்ரீதர், பல சோதனைகளையும் வெற்றி படிக்கட்டுகளாக மாற்றித் தான் இந்த அளவுக்கு உயர்ந்துள்ளார். இன்று இந்த நிறுவனத்தின் வருவாய் டிசம்பர் நிலவரப்படி, 2.5 பில்லியன் டாலராகும். இன்றைய இதன் மதிப்பு சில மில்லியன்கள் ஆகும்.
நிறுவன ஆண்டு வருமானம் 3 ஆயிரம் கோடி ரூபாயை கடந்தும் ஆடம்பரத்தால் தன்னை அலங்கரிக்காதவர். தோற்றத்தில் எளிமையும் பேச்சில் இனிமையும் கொண்டவர். செயல்களில் விந்தையானவர். நெரிசல் தாண்டவமாடும் பெருநகரங்களில் மட்டுமே இடம் தேடும் ஐ.டி., கம்பெனிகளுக்கு ஊடே, இயற்கை கூத்தாடும் கடைக்கோடி கிராமங்களைத் தேடி அலுவலகத்தை திறப்பவர்.
மெத்தப்படித்த மென்பொருள் இன்ஜினீயர்களை விடுத்து பிளஸ் 2, டிப்ளமோ முடித்தவர்களை பயிற்சி கொடுத்து தன் நிறுவனத்தில் சேர்த்து அசத்துபவர்.
சாதாரண குடும்பத்தில் பிறந்தாலும் திறமை இருந்தால் சரித்திரம் படைக்கலாம் என்பதற்கு நற்சாட்சி இவர்.
திரு ஸ்ரீதர் வேம்பு அவர்கள் அளித்த சிறப்பு பேட்டி;
சாதாரண குடும்பத்தில் பிறந்தேன்.அப்பா நீதிமன்ற தட்டச்சர், அம்மா ஹோம் மேக்கர். 9 வரை தாம்பரம் அரசுப்பள்ளி, பின் தனியார் பள்ளி, சென்னையில் கல்லுாரி, அமெரிக்காவில் மேற்படிப்பு முடித்தேன்.
சிறு வயதில் பொருள் வாங்க கடைக்கு போனால் என் தாய் என்னை நம்பமாட்டார். கடைக்காரரிடம் ஏமாந்துவிடுவேன் என நினைப்பார். 'சயின்டிஸ்ட்' ஆக வேண்டும் என்பதே கனவு. அதற்காக தான் அமெரிக்காவில் ஆராய்ச்சி படிப்பில் சேர்ந்தேன்.
அமெரிக்காவில் ஆராய்ச்சி படிப்பை மேற்கொள்ளும் போது கடைவீதிகளில் வாங்கும் பொருட்கள் எல்லாமே 'மேட் இன் அமெரிக்கா, சீனா, தாய்லாந்து, மலேசியா'ணு தான் இருந்தன. எங்கேயுமே 'மேட் இன் இந்தியா' இல்லை. பள்ளி காலத்திலேயே நாம் ஏழை நாடாக இருப்பது பற்றி கவலைப்பட்டதுண்டு. இக்கவலை இன்னும் அதிகமானது. பணக்கார நாடாக மாற நம் தேவைகளை நாமே உற்பத்தி செய்யணும். வெளிநாடுகளுக்கு அதிகமாக ஏற்றுமதி செய்யும் நிலைக்கு வரணும். இதற்கு என்னளவில் ஏதாவது செய்ய விரும்பினேன். உலகத்தையே ஒரு இந்திய சாப்ட்வேர் தயாரிப்பை பயன்படுத்த வைக்க வேண்டும் என எடுத்த முடிவு தான், 'ஸோகோ'வாக வளர்ந்தது.
24 ஆண்டுக்கு முன்பு 6 பேரோட சென்னையில் துவங்கினேன். இப்போது 9 ஆயிரம் பேர் வரை இருக்காங்க. இந்தியா, அமெரிக்கா, மெக்ஸிகோ, துபாய், ஆஸ்திரேலியா, சீனா, ஜப்பான்ணு அலுவலகங்களை விரிவுப்படுத்திக்கிட்டு இருக்கிறோம். பிரேசில், நைஜீரியாவில் இப்போது பணிநடக்கிறது.
மேலும்,எச்.ஆர்., ஆன்லைன் மீட்டிங், இ-மெயில், சி.ஆர்.எம்., கணக்கு, பிராஜெக்ட் மேனேஜிங்.... என ஒரு நிறுவனத்திற்கு தேவையான அனைத்து சாப்ட்வேர்களையும் தயாரிக்கிறோம். இதுவரை 50 வகையான சாப்ட்வேர்களை அறிமுகம் செய்துள்ளோம். உலகில் 5 கோடி பேர் 'ஸோகோ' சாப்ட்வேரை பயன்படுத்துகின்றனர். 40-45 சதவீத பயன்பாடு அமெரிக்காவில் உள்ளது. அடுத்த 10 ஆண்டில் 50 கோடியாக பயனாளர்களை உயர்த்த வேண்டும் என்பது என் இலக்கு. 'ஸோகோ' தயாரிப்பை இதுவரை 5 லட்சம் நிறுவனங்கள் வாங்கியுள்ளன. இதை 50 லட்சமாக உயர்த்த வேண்டும். ஒரு நிறுவனத்திற்கு தேவையான சாப்ட்வேர்கள் தொகுப்பாக ஒரே இடத்தில் கிடைப்பதால் 'ஸோகோ'விற்கு மவுசு அதிகம். விலையும் அதிகமல்ல. புதிதாக துவங்கும் நிறுவனங்களுக்கு ஒரு வருடம் வரை சாப்ட்வேரை இலவசமாக பயன்படுத்த அனுமதிக்கிறோம்.
சென்னை ஐ.டி., கம்பெனிகளில் அனைத்து மாவட்டங்களை சேர்ந்தவர்களும் இருப்பர். தென்மாவட்டத்தினரும் அதிகமாக இருப்பாங்க. இவங்க இடத்திற்கே சென்று நிறுவனம் அமைக்க விரும்பினேன். அதன் சோதனை முயற்சி தான் தென்காசி அலுவலகம். கரூர் மோகனுார், தேனி போடிநாயக்கனுார், தஞ்சாவூர், திருநெல்வேலி, துாத்துக்குடி பகுதிகளில் அலுவலகம் திறந்திருக்கிறேன். மதுரை சோழவந்தான் அருகே திறக்க இருக்கிறேன். இம்முயற்சி தொடரும். கிராமப் பகுதிகளை நோக்கி நிறுவனம் செல்லும்போது கிராமத்து மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு பெருகும். சென்னை போன்ற பெருநகரங்களின் நெரிசல், மாசுபாடு, குடிநீர் பிரச்னை குறையும்.
இதற்காக 'ஸோகோ ஸ்கூல் ஆப் லேர்னிங்'ணு ஒரு பயிற்சி பள்ளியை 15 ஆண்டுகளாக நடத்துகிறேன். கிராமப் புறத்தில் பிளஸ் 2, டிப்ளமோ முடித்தவர்களுக்கு பயிற்சி கொடுத்து பணிக்கு தேர்வு செய்கிறோம்.
இந்த ஆண்டு 160 பேரை உருவாக்கி இருக்கிறோம். மொத்த பணியாளர்களில் 15-20 சதவீதம் பேர் கல்லுாரியையே பார்க்காதவர்கள். 2 வருட பயிற்சிக்குப் பிறகு அற்புதமாக பணி செய்கின்றனர்.
தேர்வு, மதிப்பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் கல்விமுறையை நான் ஏற்பதில்லை. நம் கல்விமுறை மாற வேண்டும். இதற்கு முன்மாதிரியான பள்ளிகளை நான் துவங்குகிறேன். இங்கு தாய்மொழி தமிழ், அனைத்து இடங்களிலும் தேவைப்படும் ஆங்கிலம் பிழையின்றி எழுத, படிக்க, பேச, விவாதிக்க கற்பிக்கப்படும். கணக்கில் மாணவர்கள் ஜொலிக்க வேண்டும். நாளிதழ்கள் வாசிப்பு கட்டாயம். தினசரி செய்திகள் பற்றி வாதிக்கப்படும். இதன் மூலம் உலக அறிவு வளரும். தனித்திறன்களை கண்டறிந்து அதில் சிறந்து விளங்க பயிற்சி வழங்கப்படும். மியூசிக் வகுப்புகளுக்கு முக்கியத்துவம் தரப்படும். ஏனென்றால் இதற்கும் கணிதத்திற்கும் மன ரீதியாக தொடர்புள்ளது. செயல்வழி கல்விக்கு முக்கியத்துவம் கொடுப்போம். பள்ளியின் பெயர் கலைவாணி. இங்கு தேர்வு கிடையாது. மத்திய திறந்தநிலை பல்கலை மூலம் சான்றிதழ் ஏற்பாடு செய்யப்படும்.
மேலும் வெற்றி என்பது யாருக்கும் உடனடியாக வராது. அடைய பொறுமை, நிதானம், விடா முயற்சி அவசியம். வாழ்க்கை, தொழிலில் தோல்வியும் நேரும். எதிர்கொள்ளும் பக்குவம் வேண்டும். நம் இளைஞர்களுக்கு எதையும் தாங்கும் இதயம் அவசியம். ஒரு நிறுவனம் நம்மை வேலைக்கு அழைக்கும் வகையில் நம்மை பட்டை தீட்டிக்கொள்ள வேண்டும். பாரம்பரியம், கலாச்சாரத்தை பறிகொடுத்துவிடக் கூடாது.
தென்காசி மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்தில் கிராமப்பகுதிகளில் வேலைவாய்ப்பை அதிகரிக்க நான் ஏற்பாடு செய்து வருகிறேன். பொதுவாக கிராமங்களில் கல்வி, வேலைவாய்ப்பு, தொழில் ஆகியவை அதிகரிக்க செய்ய முயற்சி செய்கிறேன். இந்த முயற்சிக்காக மத்திய அரசு எனக்கு இந்த விருதை அளித்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி. இதற்காக மத்திய அரசுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்றாா்.
நன்றி ராஜப்பா தஞ்சை





No comments:

Post a Comment