Monday 11 September 2023

ஞானம் வசப்படும் . .

 ஞானம் வசப்படும் . .

ஒருவனுடைய சுதந்திரமே
அவனுடைய இன்பத்தின் அடிப்படையாகும்;
அதுவே அளவுகோல்.
ஒரு வீட்டில் எந்த அளவுக்கு குறைவான பொருள் இருக்கிறதோ அந்த அளவுக்கு நாம் நடமாட, புழங்க இடம் கிடைக்கிறது.
எந்த அளவுக்கு குறைவான நகைகளை/உடைமைகளை சுமந்திருக்கிறோமோ அந்த அளவுக்கு பொது வெளியில் சுதந்திரமாக உணர முடிகிறது.
ஒரு செயலின் நல்விளைவுகளுக்கு உவந்திருக்கும் நாம் எதிர் விளைவுகளை விழுங்கிச் செரிக்க முடியாமல் கண்ணீர் உதிர்கிறோம். இறுதியில் ஞானம் வாய்க்கிறது.
*எந்த ஒன்றினாலும் துன்பம் உண்டு என்னும் ஞானம்.*
உலகியல் வழ்க்கையில் எதையும் முற்றாக மறுப்பது சாத்தியமே அல்ல. எல்லாவற்றையும் நீங்குவதோ முற்றாகத் துறப்பதோ இங்கே போதிக்கப்படவில்லை.
எதுவெல்லாம் துன்பம் பயக்குமோ அதை மட்டுமாவது நீக்கி விடலாமா, அப்படியும் முடியாது.
எதுவொன்று தனக்கு எவ்வித நலம் பயக்குமோ அந்த ஒன்றினால் தனக்குள் நிகழும் ஒன்றை நீங்கி நிற்கப் பழகுதல்; அந்நிகழ்வின் மீதான பற்றை மட்டுமேனும் விட்டு நீங்குதல்.
இது முடியும்தானே.
எளிய உதாரணம்:
உறவுகளால் உவப்பு என்றால், அந்த உவப்பிலிருந்து நீங்கி வாழ்வதைப் பழகிக்கொளல் வேண்டும்.
*குறள்,
கீதை,
திருமந்திரம்
போன்றவை ரத்தினச்சுருக்கமாக உலகியலை வகுத்துக் கூறும் தன்மை கொண்டுள்ளன.*
*யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்*
*அதனின் அதனின் இலன்.*
*ஒன்றினால் தனக்குக் கிட்டும் இன்பத்திலிருந்து மட்டுமே விடுவித்துக் கொண்டனுக்கு, அவ்வொன்றினால் துன்புறுதலே இல்லாதவன்.*
இதை குறள் என்பதை விட *"துறவுக்கான சூத்திரம்"*
என்றே சொல்லலாம்.

No comments:

Post a Comment