Saturday 20 May 2023

பூஜ்ஜியத்திற்குள்ளே ஒரு ராஜ்யம்

 பூஜ்ஜியத்திற்குள்ளே ஒரு ராஜ்யம்

அது தான் இறைவன்.
கவியரசர் கண்ணதாசன் நாத்தீகத்திலிருந்து மீண்டு, ஆன்மீகத்திற்கு மாறி, அர்த்தமுள்ள இந்து மதம் படைத்து பெறும் புகழ் பெற்றிருந்த நேரம்...
இதை பொறுக்க முடியாத சில நாத்தீக அன்பர்கள் ஒரு அதிகாலையில் கவியரசரை சந்தித்து கடவுள் "இருக்கிறானா❓
இருந்தால் எங்களுக்கு காட்ட முடியுமா❓"
என கிண்டலாக கேட்டனர்...
அதற்கு கவியரசரோ அடுத்த நொடியே எந்த குறிப்புமின்றி காட்டாற்று வெள்ளமென கரைபுரண்டோடிய கவிதை வடிவான பதிலடி கண்டு வந்தவர்கள் வாயடைத்து திரும்பினர்!
இறைவன் குறித்த கவியரசரின் அற்புதமான தத்துவம் இதோ...
பூஜ்ஜியத்துக்குள்ளே ஒரு ராஜ்ஜியத்தை ஆண்டு கொண்டு புரியாமலே இருப்பான் ஒருவன் - அவனை புரிந்து கொண்டால் அவன் தான் இறைவன்!
ஒன்பது ஓட்டைக்குள்ளே
ஒருதுளி காற்றை வைத்து
சந்தையில் விற்று விட்டான் ஒருவன் - அவன் தடம் தெரிந்தால் அவன் தான் இறைவன்!
முற்றும் கசந்ததென்று
பற்றறுத்து வந்தவர்க்கு சுற்றமென நின்றிருப்பான் ஒருவன் - அவனை
தொடர்ந்து சென்றால் அவன் தான் இறைவன்!
தென்னை இளநீருக்குள்ளே
தேங்கியுள்ள ஓட்டுக்குள்ளே
தேங்காயை போலிருப்பான் ஒருவன் - அவனை
தெரிந்து கொண்டால் அவன் தான் இறைவன்!
வெள்ளருவி குள்ளிருந்து
மேலிருந்து கீழ்விழுந்து
உள்ளுயிரை சுத்தம் செய்வான் ஒருவன் - அவனை
உணர்ந்து கொண்டால் அவன் தான் இறைவன்!
வானவெளி பட்டணத்தில்
வட்டமதி சக்கரத்தில்
ஞானரதம் ஓட்டிவரும் ஒருவன் - அவனை
நாடி விட்டால் அவன் தான் இறைவன்!
அஞ்சுமலர் காட்டுக்குள்ளே
ஆசைமலர் பூத்திருந்தால்
நெஞ்சமலர் நீக்கி விடும் ஒருவன் - அவனை
நினைத்து கொண்டால் அவன் தான் இறைவன்!
கற்றவர்க்கு கண் கொடுப்பான்
அற்றவர்க்கு கை கொடுப்பான்
பெற்றவரை பெற்றெடுத்த ஒருவன் - அவனை
பின்தொடர்ந்தால் அவன் தான் இறைவன்!
பஞ்சுபடும் பாடுபடும்
நெஞ்சுபடும் பாடறிந்து
அஞ்சுதலை தீர்த்து வைப்பான் ஒருவன் - அவன் தான்
ஆறுதலை தந்தருளும் இறைவன்!
கல்லிருக்கும் தேரைகண்டு
கருவிருக்கும் பிள்ளை கண்டு
உள்ளிருந்து ஊட்டி வைப்பான் ஒருவன் - அதை
உண்டுகளி போர்க்கவனே இறைவன்!
முதலினுக்கு மேலிருப்பான்
முடிவினுக்கு கீழிருப்பான்
உதவிக்கு ஓடிவரும் ஒருவன் - அவனை
உணர்ந்து கொண்டால் அவன் தான் இறைவன்!
நெருப்பினில் சூடு வைத்தான்
நீரினில் குளிர்ச்சி வைத்தான்
கறுப்பிலும் வெண்மை வைத்தான் ஒருவன் - உள்ளம்
கனிந்து கண்டால் அவன் தான் இறைவன்!
உள்ளத்தின் உள் விளங்கி
உள்ளு குள்ளே அடங்கி
உண்டென்று காட்டி விட்டான் ஒருவன் - ஓர்
உருவமில்லா அவன் தான் இறைவன்!
கோழிக்குள் முட்டை வைத்து
முட்டைக்குள் கோழி வைத்து
வாழைக்கும் கன்று வைத்தான் ஒருவன் - அந்த
ஏழையின் பேர் உலகில் இறைவன்!
சின்னஞ்சிறு சக்கரத்தில்
ஜீவன்களை சுற்ற வைத்து
தன்மை மறந்தே இருக்கும் ஒருவன் - அவனை
தழுவி கொண்டால் அவன் தான் இறைவன்!
தான் பெரிய வீரனென்று
தலை நிமிர்ந்து வாழ்பவர்க்கும்
நாள் குறித்து கூட்டி செல்லும் ஒருவன் - அவன் தான்
நாடகத்தை ஆட வைத்த இறைவன்!
நன்றி கவியரசர் கண்ணதாசன் முகநூல்

No comments:

Post a Comment