Monday 15 May 2023

கண்ணதாசன் எனக்குச் செய்த கீதாபதேசம்! - கவிஞர் வாலி

 கண்ணதாசன்

எனக்குச் செய்த கீதாபதேசம்!
- கவிஞர் வாலி
விஸ்வநாதன்-ராமமூர்த்தி, கே.வி.மகாதேவன் இவர்களது முக தரிசனமே கிட்டாத நிலையில், கோடம்பாக்கம் ஒரு தொலைதூரக் கனவாகவே ஆகிவிட்டது எனக்கு.
தந்தை மறைந்து போனார்; தாயோ பம்பாயில் நோய்ப் படுக்கையில் இருக்கிறாள். எனக்காக நானே அழுது கொள்ள வேண்டுமே தவிர, ஈரம் துடைப்பார் எவருமேயில்லை. இந்த லட்சணத்தில், சினிமாவை விடாமல் பிடித்துக் கொண்டு தொங்குவது புத்திசாலித்தனமல்ல என்று புரிந்து கொண்டேன்.
கைவசம் இருந்த நீலப்பெட்டியையும், சிகப்பு ஜமுக்காளத்தையும் தூக்கிக் கொண்டு மறுநாள் மதுரைக்குப் புறப்பட இருந்தேன். அப்போதுதான் திரு.P.B.ஸ்ரீனிவாஸ் என் அறைக்கதவைத் தட்டினார்.
ஊரைவிட்டே நான் போவதாக இருக்கும் விஷயத்தை அவரிடம் சொல்லாமல், “சமீபத்தில் நீர் பாடின நல்ல பாட்டு ஏதாவது இருந்தா பாடிக்காட்டுங்க..” என்று சொன்னேன்.
அவர் சிறிது சிந்தித்துவிட்டு, அப்போது வெளியாக இருந்த 'சுமைதாங்கி' படத்தில் கண்ணதாசன் எழுதி, விஷ்வநாதன் ராமமூர்த்தி இசையமைத்திருந்த ஒரு பாடலை முழுவதும் எனக்குப் பாடிக் காண்பித்தார்.
பாட்டு வரிகள் என் செவியில் பாயப்பாய மதுரைக்குப் பயணமாவதை ரத்து செய்து, சென்னையிலேயே தங்கிவிடுவது என்று
முடிவு கட்டினேன்.
ஆம்! ஒரு சினிமாப் பாட்டு என் திசையை மாற்றியது. என் எதிர்காலத்தை நிர்ணயித்தது. தான் தொடர்ந்து போராடுவதற்கான தெம்பையும் தெளிவையும் என்னுள் தோற்றுவித்தது. சோர்ந்துபோன என் சுவாசப்பையில் பிராணவாயுவை நிரப்பி எனக்கு உயிர்ப்பிச்சை கொடுத்து என்னைப் புது மனிதனாக்கியது.
'சுமைதாங்கி’ படத்தில் பின்னாளில் இடம் பெற்று மிக மிகப் பிரபலமான 'மயக்கமா? சுலக்கமா?' என்ற பாடல், கண்ணதாசன் எனக்குச் செய்த கீதோபதேசமாகவே அமைந்தது.
எந்தத் துறையிலும் முட்டி மோதி முயற்சித்து முன்னுக்கு வர மாட்டாது, மனதொடிந்த எவரும் இந்தப் பாட்டை மந்திரம் போல் மனனம் செய்யலாம். அவ்வளவு
அருமையான
, ஆழமான, அர்த்தமான அதே நேரத்தில் மிகமிக எளிமையான பாடல் இது.
முழுப்பாடவையும் கீழே எழுதுகிறேன். படித்துப் பாருங்கள். பிறகு அதிலிருக்கும் உட்பொருளை நான் கண்டு கொண்ட அளவு உங்களுக்கும் விளக்குகிறேன்.
பாடல் இதுதான்.
மயக்கமா? கலக்கமா?
மனதிலே குழப்பமா?
வாழ்க்கையில் நடுக்கமா?
(பல்லவி)
முதல் சரணம்:
வாழ்க்கையென்றால் ஆயிரமிருக்கும்
வாசல் தோறும் வேதனையிருக்கும்
வந்த துன்பம் எதுவென்றாலும்
வாடி தின்றால் ஓடுவதில்லை
எதையும் தாங்கும் இதயமிருந்தால்
இறுதி வரைக்கும் அமைதியிருக்கும்!
(பல்லவி)
இரண்டாவது சரணம்:
ஏழை மனதை மாளிகையாக்கு
இரவும் பகலும் காவியம் பாடு
நாளை பொழுதை இறைவனுக்கு அளித்து
உனக்கும் கீழே உள்ளவர் கோடி
நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு!
(பல்லவி)
கண்ணதாசன் எழுதிய இந்தப் பாடலை கவனம் பிசகாமல் வரிவரியாக மனத்திற்குள் சொல்லிப் பாருங்கள் வாழ்க்கையின் உண்மை படிப்படியாக விளங்கும். வறுமைக் கோட்டுக்குக் கீழே பெருவாரியான மக்கள் வாழும் தேசத்தில் வாழ்க்கை நடுக்கமாகத் தானிருக்கிறது. மயக்கமாகவும் கலக்கமாகவும் குழப்பமாகவும் தான் இருக்கிறது.
ஏன் அப்படி?
வாழ்க்கையென்றால் அப்படித் தான் இருக்கும். மயக்கமும் கலக்கமும் மட்டுமல்ல இவைபோல இன்னும் ஆயிரம் இருக்கும். நீ அடியெடுத்து வைக்கும் 'வாசல் தோறும் உன்னை வரவேற்க வேதனை காத்திருக்கும். அப்படியானால், மனிதன் வாடி வதங்குவதைத் தவிர வேறு வழியேயில்லையா? வாடி நின்றால் மட்டும் வந்த துன்பம் ஓடிவிடுமா என்ன? வாடவும் கூடாது; வாழவும் வேண்டும். இது எப்படி சாத்தியம்? எதையும் தாங்கும் இதயம் உனக்கிருந்தால், இறுதிவரையில் மனதில் அமைதியிருக்கும்.
நல்லகதையாக இருக்கிறதே!
வறுமையின்பால் வதையுண்டு வாடி வதங்கி நிற்கும் ஏழை மனத்தை எப்படி எதையும் தாங்கும் இதயமாக மாற்ற இயலும்?
ஏன் முடியாது?
ஏழை மனத்தை மாளிகையாக்கு, இரவும் பகலும் காவியம் பாடு. மனதை மாளிகையாகவும், உன்னை மன்னனாகவும் பாவித்து, கங்குலும் பகலும் காவியம் பாடு!
இப்படிப் பாடிக் கொண்டிருந்தால், நாளைய பொழுதின் பிழைப்பு என்னாவது? நாளைய பொழுதை நீ ஏன்
உன் வசத்தில் வைத்துக் கொள்கிறாய்? வைத்துக் கொள்ளத்தான் முடியுமா? எனவே. நாளைய பொழுதை இறைவனுக்கு அளித்த நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு.
எங்கிருந்து அமைதி வரும்?
உடுக்க உடையும், உண்ண உணவும் போதிய அளவு இல்லையே?
அடுத்தவர்களில் பலரைப் பார். உனக்கு ஒருவேளை உணவு கிடைத்தால் அவர்களுக்கு அது கூட இல்லையே!
நாளெல்லாம் ஏகாதசியாக எத்துனை பேர் இருக்கிறார்கள்? உனக்கு கோடி வேட்டியில்லை என்று கவலைப்படுகிறாய், அடுத்துவனுக்குக் கோவணமே இவலையே!
இதிலிருந்து என்ன தெரிகிறது?
உனக்கும் கீழே உள்ளவர் கோடி, நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு.
மேற்சொன்னவாறு, நினைத்துப் பார்த்தால், உன் மனம் நிச்சயமாக அமைதியுறும், வாழ்வு பற்றிய ஒரு மெய்யறிவு உன்னுள் உதிக்கும். அந்த ஞானம் வந்தெய்திய பின், மயக்கமாவது கலக்கமாவது? தெளிந்த நீரோடை போல் மனம் திக்கெட்டும் சஞ்சரிக்கும்!
'மயக்கமா? கலக்கமா? பாட்டை, என் அறைக்குள் உட்கார்ந்து கொண்டு திரு.P.B.ஸ்ரீனிவாஸ் பாடிக் காட்டிய பொழுது -- மேற்கண்டவாறெல்லாம், என் மனம் பாட்டின் உட்பொருளை உய்த்துணர்ந்து அமைதி பெற்றது.
அதன்பிறகு தான் சென்னையிலேயே தங்கி, மீண்டும் சினிமாவில் இடம்பெற முயற்சிக்க வேண்டும் என உறுதி பூண்டேன்.

No comments:

Post a Comment