Wednesday 31 May 2023

நீங்கள் நீங்களாகவே இருங்கள்.

 நீங்கள் நீங்களாகவே இருங்கள்.

ஒரு நாள் பள்ளியிலிருந்து திரும்பி வந்து கொண்டிருந்தபோது மல்யுத்தப் போட்டி ஒன்றைப் பார்க்க நேர்ந்தது, ஊரே அந்தப் போட்டியைப் பார்க்கக் கூடியிருந்தது.
அந்தப் பிராந்தியத்திலேயே பிரபலமாக இருந்த மல்யுத்த வீரர் அன்று ஊர், பெயர் தெரியாத ஒருவனிடம் தோற்றுப் போனார்.
கூடியிருந்த மொத்தக் கூட்டமும் தோற்ற மல்யுத்த வீரனைப் பார்த்து கேலி செய்து சிரித்துக் களித்தது. அடுத்த கணம் அந்தக் கூட்டமே அமைதிக்குள் உறைந்து போனது. ஆமாம் தோற்ற அந்தப் பிரபலமான மல்யுத்த வீரனும் கூட்டத்துடன் சேர்ந்து கைதட்டிச் சிரிக்கத் தொடங்கினார். அவரது சிரிப்பு ஆரவாரமாக இருந்தது. என்ன நடந்தது இந்த மனிதருக்கென்று நினைத்தேன்.
அன்றைக்குத் தோற்றுப் போன மல்யுத்த வீரர் எங்கள் வீட்டருகே உள்ள ஆலயத்தில்தான் தங்கியிருந்தார். அவரைத் தேடி அடுத்த நாள் போனேன். கூட்டத்தோடு சேர்ந்து அவரும் சிரித்ததை நான் மிகவும் ரசித்ததாகவும் விந்தையான மனிதர்தான் அவர் என்றும் தெரிவித்தேன்.
“நானும் எனது தோல்வியை எதிர்பார்க்கவேயில்லை. அதனால்தான் சிரித்தேன். நேற்று நடந்தது பெரிய கேலிக்கூத்து. அதை எண்ணியே சிரித்தேன்.”
அந்த மல்யுத்த வீரர், தன்னை எள்ளி நகையாடிய அந்தக் கூட்டத்தைப் பார்த்து சிரித்துதான் அவர்களை ஒட்டுமொத்தமாகத் தோற்கடித்தார். அதற்கு மிகுந்த தைரியம் தேவை. என்னைப் பொறுத்தவரை வென்றவர் அவர்தான். “நான் சிறுவன். ஆனால் நீங்கள்தான் வெற்றி பெற்றவர். உங்களை நான் மறக்கவே மாட்டேன்.” என்றேன்.
இருபது ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு சிறு நகரத்துக்குப் போயிருந்த போது அந்த வீரர் என்னைப் பார்க்க வந்திருந்தார். அவர் வயதாகி மிகவும் தளர்ந்துவிட்டிருந்தார். “என்னை ஞாபகம் இருக்கிறதா உனது முகத்தை என்னால் மறக்கவே முடியாது. நான்தான் வெற்றியாளன் என்று தோற்றவனாய் நின்றிருந்த என்னிடம் வந்து சொன்ன குட்டிப் பையன் அல்லவா நீ” என்றார்.
*தோல்வியிலும் வெற்றியிலும் நீங்கள், நீங்களாகவே இருப்பதற்கு பெரும் தைரியம் அவசியம். பாராட்டிலும் கண்டனத்திலும் வாழ்விலும் தாழ்விலும் எல்லாப் பருவ நிலைகளிலும் நீங்களாகவே இருப்பதற்கு அந்தத் தைரியம் மிகவும் தேவை.* ஓஷோ

No comments:

Post a Comment