Saturday 6 May 2023

அடக்கம் தன்னடக்கம்.

 அடக்கம் தன்னடக்கம்.

1. பிறரது நிறை குறைகளைச் சிந்தித்து தீர்ப்பளிக்கும் அதிகாரத்தை கடவுள்
ஒருவருக்கும் வழங்கவில்லை.
2. உன்னிடத்தில் இருக்கும் கடவுளிடம் நம்பிக்கை கொள்.
3. கடவுள் சர்வாதிகாரியோ, கொடுங்கோலனோ அல்ல.
அன்பு வடிவான நம் தாய் போன்றவர்.
4. அதிகாலையில் எழுந்து பிரார்த்தனை செய்வது அன்றாட கடமையாகட்டும்.
5. கடவுள் ஒரு செயலையும் செய்வதில்லை. ஆனால், அவனின்றி உலகில் ஓர் அணுவும் அசைவதில்லை.
6. எப்போதும் கடவுள் சிந்தனையில் மனம் லயித்துவிட்டால், சுயநல எண்ணம் சிறிதும் உண்டாகாது.
7. வெறுமனே கடவுளைப் பற்றி பேசிக் கொண்டிருப்பது ஆன்மிகம் ஆகாது. அது கடவுளோடு இரண்டறக் கலப்பதாகும்.
8. எப்போதும் கடவுள் சிந்தனையில் ஆழ்ந்திருங்கள். அன்புடன் சமூகசேவை செய்யுங்கள்.
அனைத்து உயிர்களையும் நேசியுங்கள். தெய்வீகவாழ்வுக்கு இவையே தேவை.
9. தினமும் தெய்வீக நூல்களை சிறிது நேரமாவது படிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.
10. ஆன்மிகத் துறையில் விரைவாக முன்னேற அகிம்சை, சத்தியத்தைக் கடைப்பிடியுங்கள்.
11. ஆசைகளும், கஷ்டங்களும் இருந்தாலும், பிரார்த்தனையை முழுமையாக நம்புங்கள். பிரார்த்தனையால் ஊடுருவிச் செல்ல முடியாத உறுதியான கோட்டையைக் கட்ட முடியும்.
12. மனிதனின் கற்பனைக்கு எட்டாதவராக விளங்குகிறார் கடவுள். ஆனால் அவர் வாழும் உண்மை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
13. மனித முயற்சியைத் தெய்வீகத் திருவருள் தாங்கி நிற்க வேண்டும். அப்பொழுது தான் இறையருளை பெறுவது சாத்தியப்படும்.
14. சமயம் மற்றும் தத்துவத்தைக் கடைப்பிடித்து ஆன்ம ஞானத்தை அடையுங்கள்.
15. மன அமைதிக்கு முக்கியத்துவம் தருவோர், தங்கள் வேலையில் கவனம் செலுத்த வேண்டும். உலகில் நம் கவனத்தை எவரும் வேண்டுவதில்லை. அனைத்தையும் கவனிக்க ஒரு ஆண்டவன் இருக்கிறார். உண்மையில் உங்களை கவனிப்பது அவர் தான் என்பதை மறக்கக்கூடாது.
16. பழி வாங்கும் எண்ணத்தை கைவிடுங்கள். தீயவர்களும் மனம் திருந்தும்படி பிரார்த்தனை செய்யுங்கள்.
17. பன்னிரண்டு ஆண்டுகள் தொடர்ந்து சத்தியத்தைக் கடைபிடிப்பவன் சித்தி பெற்று விடுவான். அவனுடைய வார்த்தைகள் அனைத்தும் தெய்வீக சக்தி பெற்றுவிடும்.
18. கடவுளின் திருப்பெயரைத் திரும்பத் திரும்ப சொல்வதே ஜபம். கலியுகத்தில் கடவுளை அடைய இதுவே எளிய வழி.
பக்தியால் மலைகளைக் கூட பெயர்த்துவிடமுடியும்.
19. மக்கள் சேவை ஆற்றுபவர்கள் கைமாறாக நன்றியோ, பாராட்டோ எதிர்பார்க்கக் கூடாது. கடமையைச் செய்; பலனை எதிர்பார்க்காதே என்ற கீதையின் போதனையை மறக்கக் கூடாது.
20. ஆண்டவன் எங்கோ இருப்பதாக எண்ணாதீர்கள். உங்கள் இதயக்குகையில் அவனை நிலைநிறுத்துங்கள். வாழ்நாள் முழுவதும் அவனுக்கு வழிபாடு செய்யுங்கள். அவனை நாடி வேறு இடம் செல்ல வேண்டாம்.
21. உடல் ஓரிடத்திலும், மனம் மற்றொரு இடத்திலும் இருந்தால் வாழ்வில் ஒருவன் எவ்வித முன்னேற்றமும் பெற முடியாது.
22. பிறர் உன்னை இம்சிக்கும் போது பழிக்குப் பழி வாங்க வேண்டும் என்று எண்ணுவது கூடாது.
23. ஆசை எப்போது அற்றுப் போகிறதோ அப்போதே கடவுளின் அருளுக்குப் பாத்திரமாகி விட்டதை உணர முடியும்.
24. ஆன்மிகத்திற்கு அவசியம் அடக்கம். தன்னடக்கம் கொண்டவன் இருக்கும் இடத்தில் எல்லா உயிர்களும் இன்புற்றிருக்கும்.
*திருச்சிற்றம்பலம்*
என்றும் சிவப்பணியில்
*சித்தாந்தரத்தினம்*
சிவனடிமை சிவத்திரு *மு.மணிமாறன்*

No comments:

Post a Comment