Wednesday 17 May 2023

வால்மீகி இராமாயணம் தொடர் – 25 இராமர் பட்டாபிஷேகம் ஏற்பாடு

 வால்மீகி இராமாயணம் தொடர் – 25

இராமர் பட்டாபிஷேகம் ஏற்பாடு
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
மக்கள் அனைவரின் மனங்களிலும் நீங்காத இடம் பிடித்து விட்ட இராமர் தன்னுடைய நற்குணங்கள் மற்றும் தன் செயல்களின் மூலம் சிறந்த சத்ரியராகவும் சுய கட்டுப்பாடு, தன்னிறைவு, பொறாமையின்மை, சொல்லிலும் செயலிலும் மென்மையாக நடந்து கொள்ளுதல் முதலான அனைத்து நற்குணங்களையும் பெற்றிருந்தார்.
இராமர் பிறருடைய கடும் விமர்சனத்தை குற்றமாக நினைக்கமாட்டார், அதே சமயத்தில் எவரேனும் சிறிதளவு அன்பு காட்டினாலும் அதனை பெரிதாக கருதி மிகவும் மகிழ்ச்சி அடைவார் .
அவரிடம் மன்னிக்கும் நற்குணம் நிறைந்திருந்தது அவர் தமது நிலையில் என்றுமே பணிவுடன் இருந்தார் .
உன்னத ஞானமும் புண்ணியமுடைய சான்றோர்களின் சங்கத்தை மட்டுமே தழுவினார். இராமர் எப்போதும் சமயக் கொள்கைகளுக்கு ஏற்ப செயல் பட்டார்.
எல்லா வேத சாஸ்திரங்களையும் கற்றுத் தேர்ந்தவராக இருத்தார். ஆதலால் தசரத மாமன்னர் இராமருக்கு பட்டாபிஷேகம் செய்து வைக்க முடிவெடுத்தார்.
60 ஆயிரம் ஆண்டு அயோத்தியை ஆண்ட மாமன்னர் தசரதர் முதுமையினால் தளர்ந்து விடவே அரச கடமைகளிலிருந்து ஓய்வு பெற விரும்பினார். மேலும் தமது மறு வாழ்வில் உயர்ந்த கதியை அடைவதற்காக தம்மை தயார்படுத்திக் கொள்ள விரும்பினார்.
தமது வாரிசான இராமரை அரியணையில் அமர்த்த வேண்டும் என்பதில் ஆர்வம் கொண்டார். இதற்காக மாமன்னர் தசரதர் மந்திரிகளையும் முக்கிய பிரஜைகளையும் சிற்றரசர்களையும் அழைத்து சபையை கூட்டி இராமர் பட்டாபிஷேகம் பற்றிய முடிவை எடுப்பதற்காக கூடினர் .
ஆன்றோர்களும் சான்றோர்களும் கூடிய சபையில் மாமன்னர் தசரதார் அறிவித்தார். நான் வயோதிகனாகிவிட்டதால் என்னுடைய மூத்த மகன் இராமனை அரியாசனத்தில் அமர்த்தி அரசாளும் பொறுப்பை ஒப்படைக்க விரும்புகிறேன்.
இப்போது புனிதமான சைத்ரமாதம் மேலும் நாளைய தினத்தில் மங்களகரமான பூசநட்சத்திரம் வரவிருக்கிறது, ஆகையால் உங்களுடைய அனுமதியுடன் நாளையே இராமரின் பட்டாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை தொடங்கவிருக்கிறேன். சபையில் கூடியிருந்த எல்லா மந்திரிகளும் மாமன்னர் தசரதரின் இந்த அறிவிப்பை மெச்சினர்.
அனைவரும் விடை பெற்ற பின்னர் பட்டாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை உடனே தொடங்குமாறு வசிஷ்ட முனிவரிடம் தசரதர் வேண்டினார்.
அதனைத் தொடர்ந்து வசிஷ்டர் அயோத்தியின் முக்கிய மந்திரியாக சுமந்திரரிடம் நகரம் முழுவதும் பிரம்மாண்டமாக அலங்கரித்து மறுநாள் அதிகாலையில் சுப சடங்குகளை தொடங்குவதற்கான எல்லா ஏற்பாடுகளையும் உடனடியாக செய்யும்படி கட்டளையிட்டார்.
மாமன்னர் தசரதர் இராமரை அரசவைக்கு அழைத்து வர கட்டளையிட்டார். சிறிது நேரத்தில் அரசவையை அடைந்த இராமர் கூப்பிய கரங்களுடன் தந்தையை அணுகி அவரது பாதத்தில் நெடுஞ்சான் கிடையாக விழுந்து வணங்கி மரியாதை செலுத்தினார்.
மாமன்னர் தசரதர் மகனை எழுப்பி இறுக்கமாக தழுவி கூறினார். அன்புள்ள இராமனே! நான் முதுமையடைந்து தளர்ந்து விட்டதால் ஓய்வு பெற தகுந்த தருணம் வந்துவிட்டதை உணர்கிறேன். நான் போதுமான அளவு எல்லாவிதமான ராஜபோகங்களையும் ஐஸ்வர்யங்களையும் அனுபவித்து விட்டேன். எண்ணிலடங்காத யாகங்களை புரிந்துள்ளேன் பிராமணர்களுக்கு அளவற்ற செல்வத்தையும் வழங்கி உள்ளேன். இராமனே நீ எனது அன்பான மூத்த மகன் அது போலவே எல்லா மந்திரிகளும் பிரஜைகளும் உன்னை அன்புடன் நேசிக்கின்றனர். ஆதலால் நாளை உன்னை பட்டத்து அரசனாக முடி சூட்ட அரியணையில் அமருவதற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்கிறேன்.
இதைக் கேட்டவுடன் இராமருடைய நண்பர்களில் சிலர் அன்னை கௌசல்யாவிடம் இந்த நற்செய்தியை தாங்களே முதலில் தெரிவிக்க வேண்டும் என்று விரைந்தனர்.
இச்செய்திகளை கேட்டு கௌசல்யா பெருமகிழ்ச்சி அடைந்து நற்செய்தி வழங்கியவர்களுக்கு தகுந்த தங்க ஆபரணங்களையும் பசுக்களையும் தானம் அளித்தாள்.
அதன்பிறகு இராமர் தமது மாளிகைக்கு திரும்புகையில் பிரஜைகள் அனைவரும் வழியில் கூடி உற்சாகத்துடன் அவரை வாழ்த்திய ஆரவாரம் செய்தனர்.
இதற்கிடையில் மாமன்னர் தசரதர் ஓய்விற்காக அந்தபுரம் சென்றார். அவர் உறங்க தொடங்கியபோது மீண்டும் மீண்டும் ஒரு தீய கனவை கண்டார். அச்சத்தினால் திடுக்கிட்டு எழுந்த மாமன்னர் உடனடியாக சுமித்திரையை அனுப்பிய இராமரை அழைத்து வரச் சொன்னார்.
இராமரை அரியாசனத்தில் அமர்த்தும் திட்டத்திற்கு ஏதேனும் இடையூறு ஏற்படுமோ என்று அவர் அச்சம் கொண்டார்.
தந்தை தம்மை மீண்டும் அழைக்க இராமரும் ஒரு வகையான அச்சத்தை உணர்ந்தார்.
விரைவாக தந்தையின் அரண்மனையை அடைந்து அவரது அறைக்குள் பிரவேசித்த இராமர் தம்மை அழைத்ததன் நோக்கத்தை அவரிடம் வினவினார்.
தசரதர் இராமரை கட்டியணைத்துக் கூறினார். அன்புள்ள இராமா உன்னை அரியாசனத்தில் அமர்த்திப் பார்க்க வேண்டும் என்ற விருப்பத்தை தவிர வாழ்நாளில் எனது எல்லா விருப்பங்களும் பூர்த்தியடைந்து விட்டன.
தொடரும்..
வால்மீகி இராமாயணம், அயோத்தியா காண்டம்
ஜெய் ஸ்ரீராம்

No comments:

Post a Comment