Tuesday 16 May 2023

இயல்பான அமைதி.

 இயல்பான அமைதி.

அனைவரின் மனத்திலும் எழும் கேள்வி. உலகப் பணக்காரன் முதல் பிச்சைக்காரன் வரை அமைதியின்றி வாழ்வதற்கு என்ன காரணம்.
பணம் பொருள் புகழ் என எதுவும் அமைதி தராது என்பதை உலக அனுபவம் உணர்த்துகிறது.
அப்படியிருந்தும் மனிதன் அலைகிறான் ... மன அமைதி தேடி. அமைதி அடைய முடியாமல் கனவிலும் உழல்கின்றான். அப்படி மன அமைதியைக் குலைக்கும் உளக் கூறு என்ன என்பதைப் பாப்போம்.
எல்லா உயிரினங்களும் உடலியல் தேவைக்கே அலைகின்றன. மனிதன் மட்டுமே சமூகத் தேவைகளுக்கு அலைகின்றான். இன்னும் சொல்லப் போனால் உடல் தேவைகளுக்கு விட சமூகத் தேவைகளுக்கே அதிகமாக அலைகின்றான். இதனால் இயற்கை விட்டு விலகிச் செல்ல முற்படுகின்றான்.
அவனின் மனோசக்தி உடலியல் வாழ்வுக்கு விட சமூக வாழ்வுக்கே அதிகம் செலவாகின்றது... தண்ணீர்ப் போல். தாகத்துக்கு விட (உடல், வீடு..) கழுவுவதேற்கே நாம் அதிகமாகத் தண்ணீரைச் செலவழிக்கிறோம். இப்படித்தான் நமது மனோசக்தி சமூகமாக வீணாகிறது. இதிலிருந்து விடுபட மனிதனால் முடியாது. அதனால் சமூக மனிதன் இயல்பில் நோயாளி ஆகிறான்.
இந்த உண்மை அறிந்த சித்தர்கள் சமூகம் விட்டு விலகிச் சென்றுவிட்டனர், அதனால் அவர்களின் மனோசக்தி வீணாகாமல் ஆன்ம சக்தியாக மாறியது. சமூகத்தில் இருக்கும் வரை அது இயலாத காரியம்.
இருப்பினும் நம்மால் சமூக வாழ்விலேயே ஓரளவுக்கு அமைதி பெற முடியும். அதற்கு எளிய வழி ...மன அமைதி குலைக்கும் இடம், சூழல், எண்ணம், பழக்கம், உறவுமுறை, பொருள், ஆள் ஆகியோரிடம் இருந்து விலகி இருந்தால் போதும்.
உங்கள் வீட்டில் மின்சாரமின்றித் தொலைக்காட்சி இயங்காமல் இருந்தாலே வீடு அமைதி அடையும். அதை உன்னித்துப் பாருங்கள், இழந்த அமைதி மனக் கண்ணில் தெரியும். தற்சமயம் அமைதியின்மைக்கான முக்கிய காரணிகளுள் டி வி இடம் பெற்றுள்ளது. சுற்றுச் சூழல் அமைதியாக இருப்பின் அதுவே மன அமைதிக்கு ஆதாரமாகும். அதனால்தான் மன அமைதி வேண்டி மலை மேல் தங்கச் சொல்வர் உள மருத்துவர்
ஓர் உண்மை .. மனத்தின் இயல்பே அமைதி தான். கருவறையில் அதன் அமைதி ஆழம் மிக்கது. கருத் தரிக்கும்போது உடலும் மனமும் ஒரு சேரவே தோன்றுகின்றன என்பதை அறியவும். பிறந்த பிறகு கொஞ்சம் நாள் இந்த அமைதி நிலவும். உடல் அசையத் தொடங்கிய பிறகு அமைதி குலையும். நிற்கவும் ஓடவும் முடியும்போது மனமும் ஓடும. பிறகு சமூக வேடமிட்டு அழைக்கழியும். இழந்த அமைதி தேடி லச்சியம் என்கிற பெயரில் ஊடாடும். இதுதான் மனித மனம்.
இன்னொரு குறிப்பு.. நடப்பதை ஏற்றுக் கொள்ளும் மனநிலை மன அமைதிக்கு நல்லது. நம்மிடம் நினைத்தது நடப்பதை விட எதிர்ப்பராததே அதிகம் நடக்கின்றன. அவற்றை மாற்ற முயற்சிக்கலாம். தவறில்லை. முடியாமல் போனால் அதற்கேற்ப நம்மை மாற்றிக் கொள்ள வேண்டியது கட்டாயம்.
ஓர் எளிய புரிதல் ... உடல் அசைய மனம் அசையும். காரணம் நரம்பு மண்டலத் தொகுதிதான் மனம். இதன்படி உடலை அசையாமல் வைக்கப் பழகினால் மன அசைவு கொஞ்சம் கொஞ்சமாக குறையும்.
மன அசைவு நின்றால் அதுவே மன அமைதி. இதைத்தான் யோகா செய்கிறது.யோகவால் அலை பாயும் மனம் அமைதி பெரும்.
(ஜிம் உங்கள் மனதை அலைபாய வைக்கும்).
யோகா மேற்கொள்ளும் முன் ஒரு சுய பரிசோதனை ..
நமது மனம் அமைதி இழக்க வரம்பு மீறிய ஆசைகளே காரணமாக இருக்கும் என்பதை உணரலாம். தேவைகளைச் சுருக்கிக் கொண்டால் மனநலம் எளிதில் கைக்கூடும்.
உலகின் நெ. 1 உள மருத்துவம் யோகா என்பதை அறியவும்.
காரணம் உள்ளமும் உடலும் ஒரு சேர குணப்படுத்த வல்லது யோகா.
இதைப் பின்பற்ற முடிய வில்லை என்றால் உங்களிடம் பொறுமை இல்லை என்று பொருள். பொறுமையற்ற
மனம் அமைதி மனம் ஆகாது.
நல்வாழ்வுக்கு அடிப்படை மனநலமே.
பணமும் பிறவும் அப்புறம் தான்.
மனம் சுருங்க நலம் உண்டாகும்.
மனம் விரிய அலைச்சல் மிகும்.

No comments:

Post a Comment