Saturday 13 May 2023

மந்திரச் சாவி.

 மந்திரச் சாவி.

மனித மனம் அமைதியைத் தேடி அலைகிறது. அது எங்கே கிடைக்கும் என்றும் அலைக்கழிக்கிறது. ஏனெனில் அமைதியாக இருக்கிற போதுதான் மனம் நிம்மதியாக இருக்கிறது. நிறைவாக உணர்கிறது.
ஒரு அமைதியான சூழலில், நிம்மதியாகவும், அமைதியாகவும் இருப்பது எளிது; ஆனால்!, மிகவும் சத்தமான மற்றும் கூட்டமான இடங்களில் அமைதியைத் தேடுவது கடினம்.
*நாம் நிம்மதியையும், மகிழ்ச்சியையும் வெளியில் தேட வேண்டிய அவசியமில்லை. நம்முள்ளேயே தேடக் கற்றுக்கொள்ள வேண்டும்.* நம்முள்ளேயே உறைந்திருக்கும் அமைதியையும் மகிழ்ச்சியையும் நாம் கண்டு பிடித்தால், வெளிப்புறச் சூழ்நிலை நம்மை பாதிக்காது.
சிலநேரம் நாம் அனைவரும் ஆசை, காமம் பற்றி தேவையற்ற சிந்தனைகளால் மனதின் அமைதியைக் கெடுக்கிறோம். மனதை அமைதிப்படுத்துவதற்கு அதன் போக்கிலேயே சென்று வெல்வதே எளிமையான வழியாகும். அதனைச் செய்ய மனதை இனிமைப் படுத்த வேண்டும்.
அமைதியை மனமே ஏற்படுத்த வேண்டும். உலக அமைதியில் மட்டுமல்ல உள்ளூர் அமைதியிலும் நமது மனமே அதிகமாய் ஒரு மந்திரச் சாவியை வைத்திருக்கிறது.
அமைதியில்லாமல் தவிப்பவர்களில் பலர் குழம்பிய குட்டைகளாகவே இருப்பார்கள். ஆழம் குறைந்த குட்டைதான் என்றாலும் அது கலங்கியிருந்தால் அதன் அடியில் இருப்பது எதுவும் நமக்குத் தெரியாது.
ஆனால்!, தெளிவாக இருக்கின்ற நீர்நிலை ஆழம் மிகுந்திருந்தாலும் அதன் அடியில் இருப்பவற்றைத் தெளிவாகப் பார்க்க முடியும்.
புறச்சூழல் எப்படியிருந்தாலும் அமைதி வெளியே இல்லை; நம் அகத்தில்தான் இருக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
*"அமைதி'' என்றால், நம்மைச் சுற்றி, சிக்கல்கள் ஏதுமற்ற அமைதியான சூழல் அல்ல.*
*மாறாக, நம்மைச்சுற்றி அச்சுறுத்தும் சிக்கல்கள் இருந்தாலும், உள்ளத்தில் உணரும் அமைதியே, உண்மையான அமைதி.

No comments:

Post a Comment