Monday 8 May 2023

மன்னனும் மக்களும்.

 மன்னனும் மக்களும்.

அந்த நகரத்தை ஒரு நல்ல அரசன் ஆண்டு கொண்டிருந்தான். அவனுடைய பலத்தைப் பார்த்து எல்லோரும் பயந்தார்கள். புத்திசாலித்தனத்தைப் பார்த்து எல்லோரும் அவனை விரும்பினார்கள்.
நகரத்தின் மையத்தில் ஒரு பெரிய கிணறு இருந்தது. அந்தக் கிணற்றில் குளுமையான, கவையான தண்ணீர் கிடைத்துக் கொண்டிருந்தது - சுற்று வட்டாரத்தில் வேறு எங்கேயும் கிணறுகள் இல்லாததால், அரசன் உள்பட எல்லோரும் அந்தக் கிணற்றுத் தண்ணீரைத் தான் குடித்துக் கொண்டிருந்தார்கள்.
ஒருநாள் இரவு, எல்லோரும் தூங்கிக்கொண்டிருந்த பொழுது, ஒரு சூனியக்காரன் அந்த நகருக்குள் நுழைத்தான். தன் கையிலிருந்த சிறு குப்பியிலிருந்து, ஏதோ ஒரு திரவத்தை, ஏழு துளிகள் கிணற்றுக்குள் ஊற்றினான். பின்னர் பெரிதாகச் சிரித்தபடி. 'இனி மேல், இந்தக் கிணற்றுத் தண்ணீரைக் குடிக்கிற எல்லோரும் பைத்தியமாகிவிடுவார்கள்" என்றான் அவன்.
மறுநாள், இந்த விஷயம் அறியாத அந்த நகரத்து மக்களெல்லாம், வழக்கம்போல் அந்தக் கிணற்றில் இருந்து நீர் இறைத்துக் குடித்தார்கள். சூனியக்காரன் சொன்னதுபோல், எல்லோரும் பைத்தியமாகி விட்டார்கள்.
அரசாங்க ஒற்றன் இந்த தகவலை அரசவையில் கூறினான். ஆதனால் அரசனும், அவனது சபையினரும் அந்தத் தண்ணீரைக் குடிக்கவில்லை. ஆகவே, அவர்கள் மட்டும். இந்த அவலத்தில் இருந்து தப்பித்தார்கள்.
அன்று பகல் வேளையில், அந்த நகரத்தின் எல்லா தெருக்களிலும் கடைகளிலும் ஒரே கிசுகிசுப்பு. எல்லோரும் பொதுவாக ஒரே விஷயத்தைதான் பேசிக்கொண்டிருந்தார்கள் - "நம் ராஜாவுக்கும் மந்திரிகளுக்கும் பைத்தியம் பிடித்துவிட்டது. கிணற்றில் விஷம் கலந்து இருப்பதாக அரசன் உளறுகிறான். புத்தியில்லாத இவர்கள் எப்படி நம்மை ஆட்சி செய்யமுடியும். அவர்களை உடனடியாகப் பதவியை விட்டு இறக்க வேண்டும்.
இதைக் கேள்விப்பட்ட அரசன், அந்தக் கிணற்றில் இருந்து ஒரு பானை நீர் எடுத்துவருமாறு ஆணையிட்டான். பின்னர், சிறிதும் தயக்கமின்றி, அந்தத் தண்ணீரைக் கடகடவென்று குடித்துவிட்டான். மிச்சம் இருந்ததை, தன் சபையினருக்குக் கொடுத்தான். எல்லோரும் அதைக் குடித்துப் பைத்தியங்களானார்கள்.
மக்களுக்கு ஓரே சந்தோஷம். மன்னனும் தங்களைப் போல் 'புத்திசாலி'யாக ஆகிவிட்டான் என்று.
*நீதி: முட்டாள்களுக்கு மத்தியில் உன்னை புத்திசாலியாக காட்டிக் கொள்ளாதே; இல்லாவிட்டால் நீயும் முட்டாளாக்கப்படுவாய்.*

No comments:

Post a Comment