Saturday 27 March 2021

காரைக்குடிக் கம்பன் கழகம் சார்பில் நான்கு நாள் கம்பன் திருவிழா தொடங்கியது.

 காரைக்குடிக் கம்பன் கழகம் சார்பில் நான்கு நாள் கம்பன் திருவிழா தொடங்கியது.

காரைக்குடி கம்பன் கழகத்தின் 82 ஆம் ஆண்டுக் கம்பன் திருவிழா 26-03-2021 மாலை கல்லுக்கட்டி கிருஷ்ணா கல்யாண மண்டபத்தில் நடைபெற்றது. அதன் தலைவர் கம்பன் அடிசூடி பழனியப்பன் வரவேற்புரை ஆற்றினார். செயலாளர் பேராசிரியர் மு. பழனியப்பன் தொகுத்து வழங்கினார். வி. விசாலாட்சி, பழ. அழகம்மை, பழ. வள்ளியம்மை மலர் வணக்கத்துடன் தொடங்கியது.
நாடகவியலாளர், பேராசிரியர்
கி. பார்த்திபராஜா தொடக்க உரை நிகழ்த்தினார்.
கவியரசு கண்ணதாசன் நற்பணி மன்றத் தலைவர் மனிதத்தேனீ
ரா. சொக்கலிங்கம் அம்பத்தூர்க் கம்பன் கழகத் தலைவர் பள்ளத்தூர் பழ. பழனியப்பன் அவர்களுக்கு கம்பன் அடிப்பொடி விருதினை வழங்கி, எண்ணமெல்லாம் தமிழ் என்ற தலைப்பில் 34 நிமிடங்கள் சிறப்புரை ஆற்றினார். 33 ஆண்டுகள் வங்கிப் பணி, 22 ஆண்டுகளாக இலக்கியப் பணி என நாளும் நம் அன்னைத் தமிழுக்கு அரும்பணி ஆற்றிவரும் மேன்மையாளர், குடையும் நடையுமாக அல்லும் பகலும் வளரும் தலைமுறைக்குக் கம்பனின் கவி நயத்தினை எடுத்துச் சொல்லிவரும் எளியவர். எங்கு பொழிவுகள் நடந்தாலும் சென்று செவிமடுத்திடும் செம்மல் ஆகிய பள்ளத்தூர் பழனியப்பன் அவர்கள்
அயராத தமிழ்ப் பணிக்காக 23 விருதுகள் பெற்றவர்.
ஆற்றலும் நிறைவும், கல்வி அமைதியும், அறிவும் என்னும் வேற்றுமை இவனோடு இல்லை என்பது இராமன் அனுமனைப் பற்றி இலக்குவனிடம் கூறியது. கல்வி மிகக் கற்றவர்கள் அடக்கமாய் இருப்பார்கள் என்பதற்கு இவர் எடுத்துக்காட்டு. கம்பராமாயணம் முழுமைக்கும் உரை கண்ட திறமும் கல்வியும் வாய்க்கப் பெற்றிருந்தும் கர்வம் இல்லாமல் இருப்பவர்.
நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்திற்கு இவர் எழுதிய உரை இனியது, எளியது.
இலக்கியத்திற்காக 79 வயதிலும் உழைத்து வரும் பள்ளத்தூர்
பழ. பழனியப்பன் இலக்கணமாய் வாழ்ந்து வருகின்றார்.
அன்னைத் தமிழ் போல் இளமையாக வளமையாக வாழ்ந்திட வாழ்த்துகின்றேன் என்றார்.
விழாவில் மதுரைக் கம்பன் கழகப் புரவலர், விஸ்வாஸ் எஸ். சீத்தாராமன் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி, அ. கி. வரதராசன் எழுதிய கம்பனின் சீதோபதேசம் நூலினை வெளியிட மகரிஷி வித்யா மந்திர் பள்ளித் தாளாளர் சேதுராமன் பெற்றுக்கொண்டார். கம்பன் இசை மாலை நூலினைக் காசி ஸ்ரீ
அரு. சோமசுந்தரன் வெளியிட பள்ளத்தூர் பழ. பழனியப்பன் பெற்றுக் கொண்டார்.
நிறைவாக நகைச் சுவை அரசு
எஸ். மோகனசுந்தரம் கம்பன் இன்று வந்தால் என்ற தலைப்பில் எழிலுரை ஆற்றினார்.
அரங்கில் இலக்கிய ஆர்வலர்கள் நிரம்பி இருந்து கேட்டு மகிழ்ந்தனர்.
விழா ஏற்பாடுகளைத் துணைத் தலைவர் மாணிக்கவேலு, மற்றும் முனைவர் மா. சிதம்பரம், மீ. சுப்பிரமணியன், முனைவர் கீதா, முனைவர் சொ. சேதுபதி, முனைவர் அருணன், சரசுவதி ஆச்சி, தெய்வானை ஆச்சி, முனைவர் செந்தமிழ் பாவை ஆகியோர் சிறப்பாகச் செய்திருந்தனர்.
வாழிய கம்பன் புகழ்.



















No comments:

Post a Comment