Saturday 27 March 2021

வேடதாரிகள்.......

 வேடதாரிகள்.......

சுந்தர்
பகுத்த அறிவுப் பாதை என்றே
பலவித மாகச் சாற்றியவர்
தொகுத்த அறிவின் நூல்களை எல்லாம்
துச்சம் என்றே தூற்றியவர்
நகத்தைக் கடித்துத் தேர்தல் என்றொரு
நாளும் வரவே அஞ்சுகிறார்
உகுத்துக் கண்ணீர் வடிக்கின் றார்பொய்
ஒழுக்கம் காட்டிக் கெஞ்சுகிறார்
சிலையே என்றும் உயிரே இல்லாச்
சிற்பம் என்றும் சொல்லியவர்
தலையே ஏறும் விஷமே போலும்
தருக்குட னேநிதம் துள்ளியவர்
அலையாய் இன்று அலைகின் றார்பேர்
ஆண்மைக் கேஓர் இழுக்கானார்
விலையே போகாச் சரக்கா னார்இவர்
வீணாய்ப் போன அழுக்கானார்
காலை மாலை நாளும் இறையைக்
காட்டு மிராண்டி தான்என்றார்
ஓலைச்சுவடி சொல்வது எல்லாம்
ஒதுக்கித் தள்ளி வீண்என்றார்
வேலைப் பழித்த வாயால் இன்று
வேதம் கற்பேன் நான்என்றார்
பாலைக் குடித்த பூனை போலப்
பதுங்கிப் பாயில் தான்நின்றார்
பூட்டைப் பெருமாள் உண்டிய லுக்குப்
போட்டல் ஏனெனப் பகர்ந்தவராம்
ஓட்டை உடைசல் மதமே என்று
ஓங்கித் திருவாய் மலர்ந்தவராம்
ஓட்டை இழக்கும் பயங்கொண் டார்முன்
உரைத்ததை எல்லாம் மாற்றுகிறார்
பாட்டை மாற்றிப் பாடுகி றார்பல
பாசாங் கால்ஏ மாற்றுகிறார்
பேறும் வீடும் தந்திடு வோனைப்
பேயே போலச் சித்தரித்தார்
ஏறு மயிலோன் என்பவ னையிவர்
ஏளனம் செய்து கொக்கரித்தார்
நாறும் வாய்அது நல்வாய் ஈதென
நகைச்சுவை இன்று தீட்டுகிறார்
கூறும் பொழுதொரு கூச்சமி லாமல்
குள்ள நரித்தனம் காட்டுகிறார்
நாத்திகம் நன்றென நவிலு தலாலே
நமக்கெல் லாம்ஒரு குறையில்லை
ஆத்திகம் என்னல் அவலம் என்றார்
அதுதா னேஒரு முறையில்லை
வாய்த்துடு க்காகப் பேசிடு வாரின்
வன்மை எல்லாம் அடக்கிடுவோம்
தோய்த்தநல் அறங்கள் ஏசும் ஈனர்
தலைக்கனம் இன்றே ஒடுக்கிடுவோம்

No comments:

Post a Comment