Wednesday 31 March 2021

புதிய இலக்கு, புதிய பாதை, புதிய வாழ்க்கை.

 புதிய இலக்கு, புதிய பாதை,

புதிய வாழ்க்கை.
ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையும் ஒரு சரித்திரம். அதில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பக்கங்கள். ஒவ்வொரு நாளிலும் தனக்கோ, தன் குடும்பத்திற்கோ, சமுதாயத்திற்கோ பயன்படாத நாட்கள், வெறும் பக்கங்களாகவே இருக்கும். இப்பக்கங்கள் கிழிக்கப்படும்; இல்லையெனில் பிறரால் கிறுக்கப்பட்டுவிடும். நம் பண்டைய தமிழ் மக்கள் போரில் சென்று எதிரியின் அம்புகளை நெஞ்சினிலே தாங்காத நாட்களை இம்மண்ணில் வாழாத நாட்களாக அறிவித்திருக்கிறார்கள். இதனைத் திருவள்ளுவர் “விழுப்புண் படாத நாளெல்லாம் வழுக்கினுள் வைக்கும் தந்நாளை எடுத்து” என்று இரண்டடியில் அடிக்கோடிடுகிறார். எனவே, ஒவ்வொரு நாளும் பயனுள்ளதாக வாழ்வதால் மட்டுமே நம் வாழ்நாள் பக்கங்களை அலங்கரிக்க முடியும்.
சாதனையான ஒரு வருடம் வேண்டுமெனில், வெற்றிகரமான மாதங்கள் அவசியம். வெற்றிகரமான ஒரு மாதத்திற்கு அற்புதமான வாரங்கள் அடிப்படை. அற்புதமான வாரங்கள் அமைய உழைத்து மகிழும் ஒவ்வொரு நாளும் அவசியம். அத்தகைய ஒவ்வொரு நாளையும் நட்சத்திரங்களைச் சேகரிக்கும் வானம் போல் சேகரிப்போம். நமது வாழ்க்கையையும் நம்பிக்கை நட்சத்திரமாக்குவோம். இதற்கான தீர்மானத்தை எவரிடமும் காப்பியடிக்காது, சொந்தமாக நிர்மாணிப்பவனே தனது தலைவிதியைத் தீர்மானிக்கிறான்.
அமெரிக்க முன்னாள் அதிபர் ஆப்ரகாம் லிங்கன் ஒரு சிறந்த மேடைப் பேச்சாளர். அவரது பேச்சினை ஓர் அரங்கத்தில் வியந்து கேட்ட ஓர் இளைஞன், “ஐயா! கடந்த அரை மணி நேரம் உங்களால் எப்படி இவ்வளவு அற்புதமாக பேச முடிந்தது? என்றார். அதற்கு, *"நான் மேடையில் பேசிய அரை மணி நேரம் தான் என்னை நீ பார்த்தாய். அதற்காக நான் ஆறு நாட்கள் தயாரானதை நீ பார்க்கவில்லையே”* என்றார். ஒலிம்பிக் விளையாட்டில் வெற்றி பெறும் வீரனின் வெற்றி, அவன் சாதாரண நாட்களில் மைதானத்தில் மேற்கொள்ளும் பயிற்சியில் அடங்கியுள்ளது. அதே போல், ஒரு மனிதனின் வெற்றி, அவன் ஒவ்வொரு நாளையும் வெற்றியாக்குவதில் தான் உள்ளது.
ஒவ்வொரு நாளையும் நமது செயல்பாட்டால் உயர்த்தும் போது, நாமும் உயர்கிறோம். ஒவ்வொரு நாளையும் எதிர்கொள்ளும் போது, “நான் சிறந்தவன்; இந்த நாள் பிறந்தது எனக்காக; இந்நாளில் நான் வெற்றியடைவேன், மனதாலோ, சொல்லாலோ, செயலாலோ நான் யாரையும் காயப்படுத்த மாட்டேன், பிறருக்கு இன்று உதவி செய்வேன்; என்ற மந்திர வார்த்தைகளோடு பயணிக்கும் நாட்கள் வெற்றியான நாட்களாய் அமையும்.
அன்றைய நாளில் செய்ய வேண்டியது எவை? செய்யக்கூடாதது எவை எவை? என்று முந்தைய நாளில் திட்டமிட்டு இரவு தூங்கச் சென்றால் ஒவ்வொரு நாளும் நாம் எதிர்பார்த்தது போல் விடியும்.

No comments:

Post a Comment