Saturday 12 December 2020

நினைவுகள் தான் நம்மை இயக்குகின்றன.

 "நினைவுகள் தான் நம்மை இயக்குகின்றன.

நினைவுகளின் சொல்படிதான் நாமெல்லாம் நடந்துகொள்கிறோம்"
~புத்தர்
ஒரே நினைவுகள் மீண்டுன் மீண்டும் நினைவுபடுத்தப்படும்போது அவை நம் நினைவு வங்கியில் சேமிக்கப்படுகிறது. இந்த நினைவு வங்கியும் ஒரு சாதாரண வங்கி போலத்தான். பணத்திற்கு பதிலாக எண்ணங்கள். வங்கியில் பணத்தை பெறுவதற்கும் கொடுப்பதற்கும் ஒரு காசாளர் இருப்பதைப்போல இங்கே ஒரு உள்ளுணர்வு வேலை செய்கிறது. அவ்வளவுதான்.
ஒரு பிரச்சினை நம்மை நெருங்கும்போது அதை நாம் எப்படி ஏற்றுக்கொள்கிறோம் என்பதை முடிவு செய்வது நினைவு வங்கிதான்.
உதாரணத்திற்கு ஒருவர் தனது தாழ்வு மனப்பான்மையைப் பற்றி சிந்திக்கும்போது, அதற்கு முன்னதாக சேமிக்கப்பட்ட கசப்பான நினைவுகள் அதாவது தனது தொடர் தோல்விகள், ஆசிரியர்கள், உடன்பயின்றோர் தன்னை இகழ்வாக பேசிய நினைவுகளை நினைவு வங்கியிலிருந்து பெறுகிறார்.
நாம் நேர்மறையாக நினைக்கும்போது நல்ல அனுபவங்கள், சந்தர்ப்பங்கள் மற்றும் இனிப்பான சம்பவங்கள் நினைவு வங்கியிலிருந்து கிடைக்கிறது. அதேசமயம், எதிர்மறை எண்ணங்கள் கசப்பான சம்பவங்களையும், பட்ட அவமானங்களையும், எதிர்ப்புகளையும் மற்றும் நெருக்கடியான சூழல்களையும் நினைவுபடுத்தி அதை மிகவேகமாக பூதாகரமாக வளர செய்து தேவையற்ற பயத்தை உருவாக்கும். நேர்மறை சிந்தனைகளைவிட எதிர்மறை சிந்தனைகளுக்கு சக்தி அதிகம். ஆனால் எளிதில் கட்டுப்படுத்திவிடலாம்.
இரவில் தூங்கப்போகும் முன்பும், காலையில் கண்விழித்தவுடனும் நல்ல நிகழ்வுகளை பற்றி மட்டுமே நினைக்க வேண்டும். தூங்கப்போகும் முன்னர் தான் பட்ட கடனை பற்றி எண்ணிவிட்டு அதைப்பற்றி கெட்டகனவு காண்பது இயல்புதான். அதற்கு பலன் பார்க்கத் தேவையில்லை. எண்ணங்கள் தூய்மையாக இருந்தால் கனவிலும் நனவிலும் நல்லது மட்டுமே நடக்கும்.
தாங்கள் நினைப்பதற்கு எதிராகவே எல்லாம் நடக்கிறது என்று சிலர் வருந்துவர். அத்தோடு நில்லாமல் என்ன வேண்டுமோ அதற்கு எதிரான சிந்தனையை வளர்த்துக்கொள்வர். ஆனாலும்கூட கெட்டவைகள் தான் நடக்கும். அதற்கு காரணமும் அவர்களேதான்.
ஒரு விதை கூட நட்டவுடனே வளர்ந்துவிடுவதில்லை. நமது ஆசைகள் மட்டும் உடனே நடக்குமா என்ன? மீண்டும் மீண்டும் நல்ல எண்ணங்களை விதைத்துக்கொண்டே இருங்கள். அதன் பலன் நிச்சயம் ஒருநாள் கிடைத்தே தீரும்.
ஒவ்வொரு நாளையும் நேர்மறையாக தொடங்கி நேர்மறையாக முடியுங்கள். உங்கள் குடும்பத்தை மனைவி குழந்தைகளைப் பற்றி சிந்தியுங்கள். செய்துகொண்டிருக்கும் வேலையை எப்படி சிறப்பாக செய்யலாம் என்று சிந்தியுங்கள். புதிதாக என்ன சாதனை படிக்கலாம் என்று சிந்தியுங்கள்.
நல்லதே நடக்கும்.

No comments:

Post a Comment