Tuesday 22 December 2020

எது வந்த போதும் கலங்காதே மனிதா.

 எது வந்த போதும் கலங்காதே மனிதா.

எல்லாவற்றிக்கும் தீர்வு உண்டு.
ஒரு நிறுவனத்தின் மேலாளராக புதிதாக
ஒருவர் பொறுப்பேற்றார். அங்கிருந்து
மாறுதலாகி செல்பவர் அனுபவம் வாய்ந்தவர். எனவே புதிய மேலாளர், அவரிடம் திறம்பட
நிர்வாகம் செய்வது பற்றி சில ஆலோசனைகள் கேட்டார். உடனே அவர் புதிய மேலாளரிடம்
மூன்று கவர்களைக் கொடுத்துவிட்டுச்
சொன்னார், "உங்களுக்கு எப்போது பிரச்சினை
வருகிறதோ அப்போது மட்டும் ஒவ்வொரு
கவராக எடுத்துப் பார்த்துக் கொள்ளவும். அதில் உங்கள் பிரச்சினைக்குத் தீர்வு இருக்கும்.
ஒரு மாதத்திலேயே புதிய மேலாளருக்கு
தொழிலாளர்களிடமிருந்து ஒரு நெருக்கடி
வந்தது. உடனே முதல் கவரை எடுத்து திறந்து படித்தார். அதில்,"நான் புதிதாக வந்தவன். அதனால் இங்குள்ள நிலையைப் புரிந்து கொள்ள எனக்கு சிறிது கால அவகாசம்
வேண்டும் என்று கேட்கவும்" என்று
எழுதியிருந்தது. அதேபோல அவரும், "நான்
இப்போதுதானே வந்திருக்கிறேன்
நிறுவனத்தைப் பற்றி முழுமையாக அறிந்தால் தானே எதுவும் செய்ய முடியும். "என்றார். வந்தவர்களும் அது நியாயம் எனக் கருதி சென்று விட்டனர்.
அடுத்த ஓராண்டில் மறுபடியும் ஒரு பிரச்சினை வந்தது. இரண்டாவது கவரை திறந்து
பார்த்தார். அதில், "முன்பு மேலாளர்களாய்
இருந்தவர்களைக் குறை சொல்" என்றிருந்தது.
உடனே அவரும் சொன்னார், "பாருங்கள், நான் என்ன செய்வது? இந்த நிறுவனத்தை
முன்னேற்ற நான் இரவு பகலாக உழைத்துக்கொண்டிருக்கிறேன். ஆனால் இங்கு முன்பு பணிபுரிந்தவர்கள் என்ன தான் வேலை
பார்த்தார்களோ தெரியவில்லை. இதை சீர்
செய்யவே எனக்கு நேரம் சரியாக இருக்கிறது என்றார். வந்தவர்களுக்கு என்ன சொல்வது
என்று தெரியாமல் சென்று விட்டார்கள்
இப்போது அவர் வந்து இரண்டு ஆண்டுகள்
ஆகிவிட்டன. இப்போது தொழிலாளர்கள்
தொழிற்சங்கத் தலைவர்கள் ஓர் பெரிய
பிரச்சனையைக் கிளப்பினார்கள். இவருக்கு
எப்படி சமாளிப்பது என்ற பயம் வந்து விட்டது
உடனே மூன்றாவது கவரை எடுத்துப் படித்தார்
அதில், "உனக்கு அடுத்து வரப்போகும் புது மேலாளருக்கு இதே போல் மூன்று
கவர்களைத் தயார் செய்து வைக்கவும்" என்று
எழுதப்பட்டிருந்தது.
வாழ்க்கையில் எந்த சோதனை வந்தாலும் கலங்காதீர்கள்.
எல்லா சிக்கல்களுக்கும் கண்டிப்பாக தீர்வு இருக்கும்.
பூட்டுகள் தனியாக தயாரிக்கப்படுவது இல்லை. பூட்டை தயாரிக்கும் போதே அந்த பூட்டை திறப்பதற்கான சாவிகளும் தயாரிக்கப்படுகின்றன என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment