Monday 7 September 2020

அதிக எதிர்பார்ப்பு ஏமாற்றத்தைக் கொடுக்கும்.

 அதிக எதிர்பார்ப்பு

ஏமாற்றத்தைக் கொடுக்கும்.
எதிலும் அதிக எதிர்பார்ப்பு கூடாது, மகிழ்ச்சியின்மைக்கும் , முகத்தில் வெறுப்பினை வெளிக்கொணர்வதற்கும் காரணம், நாம் எதிர்பார்த்தலில் உண்டான ஏமாற்றமே விடுத்து வேறொன்றுமில்லை .
என்னுடைய மகன் நன்றாகப் படிப்பான். அனைத்து பாடங்களிலும் அதிக மதிப்பெண் பெற்று தேர்வுகளில் தேர்ச்சியடைவான் என்று அதிகம் எதிர்பார்த்துக் காத்திருப்பார்கள் பெற்றோர்கள்...
ஆனால்!, தேர்வில் அவர்களது மகன் அவர்களின் எதிபார்ப்பிற்கு மாறாக இருக்கும். அப்பொழுது பெற்றோர்களால் அதனைத் தாங்கிக் கொள்ள இயலாது...
பொதுவாகவே அதிக எதிர்பார்ப்பு எமக்கு ஏமாற்றத்தைத் தருகின்றது, இவர் இப்படி இருப்பார் , அவர் அப்படி இருப்பார் என்று நாம் நினைத்து விட்டு அவருடன் நாம் பழகும் போது அவர் நாம் நினைத்ததை விட மாறுபட்டவராக இருப்பார், அல்லது நாம் நினைத்தது பொய்த்து விட்டது . நாம் எதிர்பார்த்ததை விட ஏன் நம்மை விட இவர் நல்லவராக இருக்கிறாரே என்கின்றோம்...
நாம் எதிலும் எதிர்பார்ப்போடு இல்லாதிருந்தால் ஏமாற்றமே இருக்காது, நாம் ஏன் தேவையற்று அதிக கற்பனையில் மிதக்க வேண்டும்...? எது நடக்கிறதோ அதை ஏற்றுக் கொள்வோம் என்று இருந்து விட்டால் ஏமாற்றம் ஏற்படாது...!
மகிழ்ச்சியின்மைக்கும், மனநிறைவு இல்லாமல் இருப்பதற்கும் என்ன காரணம் என்றால் அதிக எதிர்பார்த்தலில் உண்டான ஏமாற்றம் தானே அன்றி வேறொன்றுமில்லை...
சிலர் நான் அப்படியாவேன், இப்படியாவேன் என்று கற்பனைகளில் மிதப்பார்கள், ஆனால்!, அவர்கள் நினைத்தது போல எல்லாம் நடக்கின்றதா...? அதிக எதிர்பார்ப்பு நிறைவேறுகிறதா...?
சில வேளைகளில் அவர்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சுகிறது...
எந்தவித எதிர்பார்ப்புகள் இல்லாமல் எப்பொழுதுமே நம்மிடம் என்ன இருக்கின்றதோ அதைக்கொண்டு இந்த வாழ்க்கையை மகிழ்வாகக் கடவோம்...
ஆம் நண்பர்களே...!
ஆசையன்றி வாழ நாம் புத்தர் அல்ல, அதே வேளையில் ஆசையை கட்டுக்குள் கொண்டு வாழப் பழக வேண்டும்...!
எதுவும் நிலைப்பு இல்லை, எவரும் நிலையில் இல்லை - என்கிற உண்மையை எப்பொழுதும் மனதில் ஒரு மூலையில் இருத்திக் கொள்ள வேண்டும்...
இன்ப துன்பங்களை ஓரளவிற்கு நிகரான நிலையில் எதிர்நோக்கும் பக்குவத்தைப் பழக்கிக் கொண்டால் - எதிர்வரும் துன்பங்களிலிருந்து ஓரளவு விடுபடலாம்...
எதன் மீதும் அளவற்ற விருப்பம் வைக்காதீர்கள். அதிகமான விருப்பம் தான் ஏமாற்றத்தையும், ஆபத்தையும் தருகிறது.

No comments:

Post a Comment